பெண்ணைகளை திருமணம் செய்வதாகக் கூறி பத்திரிகைகளில்
மணமகள் தேவை என விளம்பரம் செய்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதோடு தங்க ஆபரணங்களை அபகரித்து வந்த நபரை நோர்வூட் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.ஹட்டன் பகுதியில் பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி கடந்த 31ஆம் திகதி நோர்வட் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்து தங்க ஆபரணங்களை அபகரித்து மேற்படி பெண்ணை குறித்த இடத்திலேயே கை, கால்களை கட்டி விட்டு சென்ற ஒருவரையே பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து அட்டன் நீதிவான் அமில ஆரியசேன முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நுவரெலியாவில் வசிக்கும் 31 வயதான மேற்படி சந்தேக நபர் பெண்ணைகளை திருமணம் செய்வதாகக் கூறி பத்திரிகைகளுக்கு மணமகள் தேவை என விளம்பரம் செய்து மீண்டும் அதற்கு பதில் கிடைக்கும் போது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பின்னர் சந்தித்து இவ்வாறான செயல்களில் ஈடுப்படுவதாக நோர்வட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நானுஒயா பொலிஸில் இரு முறைப்பாடுகளும் கொத்மலை பொலிஸில் ஒரு முறைப்பாடும் நுவரெலியா நீதிமன்றத்தில் விசாரணையும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதேவேளை கடந்த மாதம் கொழும்பிலிருந்து ஒரு பெண்ணை கடத்தி அட்டனில் கட்டி வைத்த சம்பவத்திற்கும் மேற்படி சந்தேக நபருக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சந்தேக நபரோடு மேலும் சில நபர்கள் இருப்பதாகவும் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் நோர்வ+ட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.