கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் நேற்று நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில்
புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் காயம் அடைந்துள்ளதை குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் உறுதி செய்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் காயம் அடைந்துள்ளதை குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் உறுதி செய்துள்ளார்.
இந்தத் தடுப்பு முகாமில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒடுக்க முனைந்த சமயம், அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பதாக மொரிசன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மானுஸ் தீவு தடுப்பு முகாமில் ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர் ரேஸா பெராட்டி படுகொலை செய்யப்பட்டு நூறு நாட்கள் கடந்துள்ளதை நினைவு கூரும் கிறிஸ்மஸ் தீவைச் சேர்ந்த ஆண்கள் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.
இவர்களில் 70 பேரை விசேட பயிற்சி பெற்ற பணியாளர்கள் அப்புறப்படுத்தி, ரெட்-ப்ளொக் எனப்படும் அதியுயர் பாதுகாப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
தடுத்து வைக்கப்பட்டவர்களில் சிலர் கோபாவேசத்துடன் செயற்பட்டதால், அவசர பதிலளிப்பு குழுவை ஸ்தலத்திற்கு வரவழைத்து அவர்களைக் கட்டுப்படுத்த நேர்ந்ததென மொரிசன் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டவர்கள் அமைதியாகச் சென்றதாகவும் சிலர் முரண்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் காயமடைந்தது உண்மை தான் என மொரிசன் தெரிவித்துள்ளார். 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் சம்பவ இடத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், 4 பேர் எலும்பு முறிவு மற்றும் வீக்கம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இன்னுமொரு புகலிடக் கோரிக்கையாளருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதாகவும் அவருக்கும் சிகிச்சை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஏபிசி செய்தி சேவைக்கு போராட்டத்தைக் கண்ணுற்ற ஒருவர் தகவல் வழங்கியுள்ளார். அவர் தெரிவிக்கையில்,
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை நடத்தியவர்கள் அமைதியாகச் சென்றனர். இதனை தடுப்பதற்கு நன்கு பயிற்றுவிக்கபட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வந்தனர்.
போராட்டத்தை நடத்தியவர்களை கைது செய்ய, சிலர் தாமாகவே சரணடைந்தனர். முரண்டு பிடித்தவர்களை இழுத்துச் செல்லும்போதே பலருக்கு காயம் ஏற்பட்டது. பயந்து ஒதுங்கி இருந்தவர்களையும் பொதுகாப்பு உத்தியோகத்தர்கள் இழுத்துச் சென்றனர் என தெரிவித்துள்ளார்.