கடந்த ஏப்பிரல் மாதம் மலேசியாவில் இருந்து தென்கிழக்கு நாடு
ஒன்றுக்கு பயணித்த நந்தகோபனை, அன் நாடு மலேசியாவுக்கு திருப்பி அனுப்பிய சம்பவம் தொடர்பான செய்தியை வன்னிமீடியா இணையம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. மலேசியாவுக்கு திரும்பிய அவரை, அன் நாட்டுப் பொலிசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியவேளை அவர் விடுதலைப் புலிகளோடு தொடர்பில் இருந்த விடையத்தை இலங்கை ஊடாக மலேசியப் பொலிசார் அறிந்துகொண்டார்கள்.
இதன் பின்னர் இலங்கை கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நந்தகோபனை மலேசியா இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது. அவரை பூசா முகாமில் தடுத்துவைத்து, சிங்கள புலனாய்வுப் பிரிவினர் பல சித்திரவதைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று கொழும்பில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றது.
இன் நிலையில் நந்தகோபனே மலேசியாவில் 3 தமிழர்கள் உள்ளார்கள் என்றும், அதில் குஷாந்தன் என்பவர் முக்கியமான நபர் என்றும் இலங்கை புலனாய்வுக்கு தகவல்களை வழங்கியுள்ளார். புலிகளின் வான் படையின் 2ம் நிலை பொறுப்பாளராக குஷாந்தன் கடமையாற்றினார் என்றும், அவர் கேணல் ஷங்கர் அவர்களின் மகளை மணம் முடித்தவர் என்பது போன்ற விடையங்களையும் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே குஷாந்தன் உட்பட மேலும் 2 தமிழர்களை கைதுசெய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கைப் பொலிசார் மலேசியப் பொலிசாரிடம் கேட்டுள்ளார்கள் என்று வன்னிமீடியா இணையம் அறிகிறது. போர் முடிவுற்ற பின்னர், இலங்கையில் வாழமுடியாத சூழலில் இந்த மூவரும் அங்கிருந்து சென்று மலேசியாவில் வேலைசெய்து வாழ்ந்து வருகிறார்கள்.
விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்ப பார்கிறார்கள் என்று ஒரு மாபெரும் செய்தியைப் பரப்பி, அதனூடாக பல காரியத்தை சாதித்து வருகிறது இலங்கை அரசு. இன் நிலையில் தான் இம்மூவரும் புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்ப முனைவதாக கூறி அவர்களை மலேசியப் பொலிசார் கைதுசெய்தது மட்டுமல்லாது, அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தியும் உள்ளார்கள். முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த இந்த மூவரும் தற்போது எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடு படாத நிலையில், இவர்கள் மேல் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி மலேசிய அரசு, இவர்களை இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது.
இவர்கள் மூவரின் உயிருக்கு யாரால் உத்தரவாதம் வழங்கப்பட முடியும் ? இதேவேளை இவர்கள் மூவரும் முகாமில் இருந்து தப்ப முனைந்தார்கள் அதனால் அவர்களை சுட்டுக்கொன்றோம் என்று இலங்கை இராணுவம் இனிவருங்காலங்களில் கூறலாம். எனவே ஐ.நா மனித உரிமை அமைப்பு, ஏனைய மனித உரிமை அமைப்புகள் இக்கைது தொடர்பாக , குரல் கொடுக்கவேண்டும். இதனை புலம்பெயர் சமூக அமைப்புகள் கண்டிக்கவேண்டும் என தேசிய செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.