கோரிக்கையை மாற்றுமின்! மாற்றுமின்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா நேற்றைய தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
மோடிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் பிரதமராக வரக்கூடியவர் என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த செல்வி ஜெயலலிதா, தமிழகத்தின் 37 ஆசனங்களைத் தனதாக்கிய பெருமையுடன் பாரதேசத்தில் மூன்றாவது பலமான சக்தி என்ற இறுமாப்புடன் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார்.
பரந்த பாரத தேசத்தில் மோடியின் பாரதிய ஜனதாக் கட்சிக்கு இரண்டு ஆசனங்களை மட்டும் விட்டுக் கொடுத்து வேறு எவருக்கும் எதுவும் கிடையாது என்று தமிழக மாநிலத்தில் முழு ஆசனங்களையும் தனதாக்கிய வகையில்; செல்வி ஜெயலலிதா, சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியை விட பலமடங்கு அரசியல் செல்வாக்கு உள்ளவர் என்பதைப் பிரதமர் மோடி நிச்சயம் அங்கீகரித்திருப்பார்.
எனவே பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் தமிழகத்தின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் பிரதமர் மோடியும் சந்தித்திருப்பது பெருமைமிக்க விடயமாகும்.
இருவதும் சந்தித்தது பெருமைக்குரியது என்பதற்கு அப்பால்; இந்திய தேசத்தின் மாநில முதல்வர், பிரதமர் மோடியைச் சந்தித்த முதற்தடவையே இலங்கைத் தமிழர்களின் விடயம் குறித்துப் பேசியுள்ளார் என்றால், இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் தங்கள் பதிவேடுகளில் குறித்துக் கொள்வது அவசியம்.
ஏனெனில் பிரதமர் மோடி- முதல்வர் ஜெயலலிதா சந்திப்புக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உசார் அடைய வேண்டிய ஒரு சூழமைவுக்கு ஆட்பட்டுள்ளது.
ஆம், செல்வி ஜெயலலிதா மோடியைச் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் வாழும் பகுதி களைப் பிரித்து தனி ஈழம் அமைப்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தும் ஒரு முறையை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஊடாக இந்தியா கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எனவே இக் கோரிக்கையானது ஈழத் தமிழர்கள் ஆயுத போராட்டம் நடத்தியதன் இலட்சியத்தை மீள் உருவாக்கம் செய்வதாகும்.
ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்குப் பின்னர் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை சட்ட ரீதியாக - ஐ.நா சபையின் ஊடாக அரங்கேற்ற வேண்டும் என்றவாறு செல்வி ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் கேட்டிருப்பது ஒரு பெரும் திருப்பு முனையே.
எனவே பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சந்திப்புக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13-வது அரசியல் திருத்தச் சட்ட மூலம், 13+ என்றெல்லாம் புலம்பல் செய்யக் கூடாது.
சிலவேளை பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்க நேர்ந்தால், ஐயா! பிரதமரே, அம்மா உங்களிடம் கூறியதை செய்யுங்கள் அது போதுமென்று சொல்லி விட்டு மெளனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அரசிடம் 13ஐ ஆவது தாருங்கள் என்று நீங்கள் கேட்டபோது உஷ்... என்றவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்? பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஆனால் இனிமேல் உங்கள் வாயில் இருந்து 13 என்ற பேச்சே வரக்கூடாது. கவனம்.
நன்றி - வலம்புரி நாளிதழ் ஆசிரியர் தலையங்கம்