வடக்கு மாகாணத்திற்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்களையும்,
அபிவிருத்தி உதவிகளையும் யார் தடுக்கின்றனரோ அவர்கள் துரோகிகள். என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்
அபிவிருத்தி உதவிகளையும் யார் தடுக்கின்றனரோ அவர்கள் துரோகிகள். என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்
முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் அடங்கிய குழுவினர், துணுக்காய் பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.
இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது-
நான் துரோகி என்று சிலரைக் குறிப்பிட்டதாகத் தகவல்கள் வந்தன. இதுவரை நான் துரோகி என யாரையும் குறிப்பிடவில்லை. ஆனால் இன்று இந்த இடத்தில் அதைக் குறிப்பிடுகின்றேன். அதற்கான காரணங்கள் நிறையவே உண்டு.
குறிப்பாக வடக்கு மாகாணத்தை பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி செய்யவேண்டியுள்ளது. இந்த அபிவிருத்திகளுக்கு எத்தனையோ பேர் உதவத் தயாராக இருக்கின்றனர். எம்முடன் தொடர்புகொள்கின்றனர். ஆனால் அத்தகைய உதவிகள் வந்து சேர்வதற்குப் பலர் தடையாக இருக்கின்றனர்.
குறிப்பாக வடக்குக்கு கிடைக்கும் உதவிகளைத் தமக்கும் பங்குபோட அவர்கள் எண்ணுகின்றனர். இதனால் தம்மூடாகவே அந்த உதவிகள் வந்து சேரவேண்டும் என்று கருதுகின்றனர். இதனால் எமக்கு நேரடியாகக் கிடைக்கும் உதவிகளைத் தடுத்து நிறுத்துகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களே துரோகிகள் - என்றார்.
முன்னதாக முதலமைச்சர், வடக்கு மாகாண கல்வி அமைச்சர், விவசாய அமைச்சர் உள்ளிட்டோர், துணுக்காயில் வீதி புனரமைப்பு குறைபாடுகள் குறித்து நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
சந்திப்பைத் தொடர்ந்து மீண்டும் அப்பகுதிக் கிராமங்களைச் சென்று பார்வையிட்டு அபிவிருத்திக் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.
2ம் இணைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேட்பார் இல்லாத நிலையில் பெருமளவு இயற்கை வளங்கள் தென்னிலங்கைச் சிங்கள வர்த்தக நிறுவனங்களினால் கொள்ளையிடப்பட்டு வருவது தொடர்பாக நேற்று செவ்வாயக்கிழமை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
கடந்த 2ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் வாவட்டி மலை, தட்டயமலை உள்ளிட்ட பகுதியில் பெருமளவில் தென்னிலங்கை கட்டுமான நிறுவனங்களினால் கருங்கற்கள் அகழ்ந்து எடுக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் நோரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பன்றிவெட்டி பிரதேசத்தில் தென்னிலங்கை கட்டுமான நிறுவனம் ஒன்றினால் கருங்கல் அகழப்படுவது தொடர்பாக முதலமைச்சர் பிரதேச செயலருடன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த பகுதியில் சுமார் 12மீற்றர் ஆழத்திற்கு மட்டுமே கல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் சுமார் 16மீற்றர் ஆழத்திற்கு கருங்கல் அகழப்பட்டு தண்ணீர் ஊற்றுக் கொள்ளும் அளவுக்கு அகழப்ப ட்டுள்ளமை தொடர்பாக முதலமைச்சர் நேரில் பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சருடன் வடமாகாண சுற்றுச் சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சென்றிருந்த நிலையில் உடனடியாக மேற்படி கருங்கல் அகழப்படும் இடத்தை அளந்து அனுமதிக்கப்பட்டதற்கு மேலதிகமாக அகழப்ப ட்டிருக்குமாயின், குறித்த அகழ்வினை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் கேட்டுள்ளார்.
மேலும் இவ்வாறான கருங்கல் மற்றும் மணல் குவாரிகளை வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் கட்டுமான நிறுவனங்களுக்கு ஏன் வழங்க முடியவில்லை என அந்த இடத்தில் கேள்வி எழுப்பிய முதலமைச்சர், இவ்வாறு தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் எமக்கே உரித்தான மிக பெறுமதியான இயற்கை வளங்களை கொள்ளையிட்டுச் செல்வதை அனுமதிக்க முடியாதென கூறியிருக்கின்றார்.
இதேவேளை கல் அகழப்பட்ட குழியில் மீன் வளர்ப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல் அகழும் கட்டுமான நிறுவனம் கூறியிருக்கும் நிலையில், அவ்வாறு செய்ய முடியாது. கல் அகழ்ந்த குழியினை மூடிவிட வேண்டும் என மாகாண சுற்றுச் சூழல் அமைச்சர் பணித்துள்ளார்.