இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இறுதி சந்தர்ப்பம் தற்போது வந்துள்ளது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது அவர்களின் விரும்பம். அதற்காக தமிழர்களை வற்புறுத்த வேண்டாம். ஜனாதிபதித் தேர்தலில் போட்டி இருப்பது வழமையானது. ஆனால் ஆட்சியினை விரும்புவதும் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தெரிவு செய்வதும் பொது மக்களேயாவர். ஆனால் தற்போது மக்களின் விருப்பத்தினை மீறி ஒரு சிலரின் விருப்பத்திற்காக தேர்தல் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.
அதற்காக அரச ஊழியர்களையும் ,உடமைகளையும் அரச ஊடகங்களையும் பயன்படுத்துகின்றனர். இதனையும் தாண்டி தற்போது இராணுவ பரப்புரையினையும் அரசு ஆரம்பித்து விட்டது. எதிரணியின் கூட்டங்களிற்கும் செய்தியாளர் சந்திப்புக்களுக்கும் புலனாய்வு பிரிவு அனுப்பி வைக்கப்படுகின்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது இராணுவத்தினால் கட்டாயப்படுத்தப்படுகின்றது. இராணுவ ஆட்சியினை நோக்கிய பயணத்திற்கான சமிக்கையினை அரசு காட்டுகின்றது. மக்களுக்கு ஜனநாயகத்தினையும் நல்லாட்சியினையும் பெற்றுக்கொள்ளும் இறுதி சந்தர்ப்பம் தற்போது அமைந்துள்ளது. இதனை தவற விட வேண்டாம். இதுவே நாட்டின் பாதையினை தீர்மானிக்கும் இறுதி சந்தர்ப்பமென்பதனை மக்கள் மறந்து விட வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கு அவசியமான தேர்தல் அல்லது சிங்கள மக்களுக்கு அவசியமான தேர்தல் என பிரித்து ஒப்பிடாது. அனைவரும் தேசிய பிரச்சினையாகவும் ஒட்டு மொத்த மக்களின் விடுதலையாகவும் எண்ணி இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும்.
அதற்காக தமிழ் மக்களை வற்புறுத்தி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என எவரும் செயற்பட அவசியமில்லை. இலங்கையில் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதில் தமிழ் மக்களுக்கு அக்கறையில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது தனித் தமிழீழம் என்பதையே விடுதலைப் புலிகள் முன்வைத்தனர்.
இதனாலேயே 2005 ஆம் ஆண்டுத் தேர்தலில் வடக்கு கிழக்கின் தமிழ் வாக்குகள் விடுதலைப் புலிகளினால் தடுக்கப்பட்டன. ஆனால் இன்று நிலைமை மாற்றமடைந்து விட்டது. இன்று விடுதலைப் புலிகள் அழிந்து விட்டனர். ஆகையால் இன்று எவரும் வியாபாரம் பேசி வாக்குகளை மாற்ற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.