புலனாய்வுப் பிரிவுகளதும் திட்டமிட்ட கூட்டுப் படு கொலைகளே புலிகளின் முன்னாள் போராளிகளது மரணங்கள் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மிகவும் நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. கோபி, தெய்வீகன், அப்பன் ஆகியோரை இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் தேடப்படும் பட்டியலில் இணைத்து சுவரொட்டிகளை ஒட்டியதில் இருந்து அவர்கள் பதவியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும்வரை நிகழ்ந்தவை ஒரு திட்டமிட்ட நாடகம் என ஆரம்பத்தில் இருந்தே குளோபல் தமிழ்ச் செய்திகள் தெரிவித்து வந்தது.
உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் பல ஊடகங்களும், சில தரப்புகளும் தத்தமது நலன்கள் இருப்புகளின் அடிப்படையில் இந்த விடயத்தை வியாக்கியானப்படுத்திய நிலையில், குளோபல் தமிழ்ச் செய்திகள் புலிகளின் மீள் இணைவு என்ற இந்த விடயத்தை இலங்கை அரசாங்க – பாதுகாப்பு – புலனாய்வுப் பிரிவுகளின் நாடகம் என வலியுறுத்தி வந்தது. குளோபல் தமிழ்ச் செய்திகளின் இயலுமைக்கு எட்டியவகையில் கிடைக்கப்பெற்ற தகவல்களை இயன்றவரை உறுதிப்படுத்தி இங்கு ஒரு செய்தி ஆய்வாக இந்த விடையம் தரப்படுகிறது.
இதன் மீது ஆரோக்கியமான கேள்விகள் விமர்சனங்கள் இருப்பின் அதனை விமர்சனப் பகுதியிலோ அல்லது மின் அஞசலுக்கோ அனுப்பி வைத்தால் முழுமையாக பிரசுரிக்கப்படும். இந்த வகையில் புலிகளின் முன்னாட் போராளிகளான கோபி மற்றும் அவரது சகாக்களான அப்பன், தெய்வீகன் ஆகியோர், வெவ்வேறு நடவடிக்கைகள் மூலம் முன்னதாகவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பின்னர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.
இதனை சடலங்களைப் பார்வையிட்ட பதவிய வைத்தியசாலையோடு நெருக்கமான தரப்பினரும் உறுதிப்படுத்துத்தி உள்ளனர். குறிப்பாக இந்த சடலங்களில் காணப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் அவை மிக நெருக்கமாக இருந்து சுடப்பட்டமைக்கான அடையாளங்களாக இருந்தன என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த சம்பவம் பற்றிச் சற்று பின்னோக்கிய தரவுகளை குளோபல் தமிழ்ச் செய்திகள் திரட்டியது. விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பில் தொழிற்பட்டவர்; கலையன். திருகோணமலையைச் சேர்ந்த இந்தக் கலையன் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக திருகோணமலைக்கு புலிகளால் அனுப்பப்பட்டவர். திருமலை மாவட்டத்தின் அரசியற்துறைப் பொறுப்பாளராக எழிலன் மற்றும் படைத்துறைப் பொறுப்பாளராக சொர்ணம் கடமையாற்றிய காலப் பகுதியில் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்.
அந்த மாவட்டத்தின் புலனாய்வுப் பொறுப்பாளராக வசந்தன் கடமையாற்றிய நிலையில் அவருக்கு அடுத்த நிலையில் கலையன் தொழிற்பட்டதாகவும், சிங்களம் தமிழ் மொழிப் பரீட்சயம் காரணமாக திருமலையில் பணியாற்றியதோடு தென்பகுதி நடவடிக்கைகளோடும் இணைந்து செயற்பட்டுள்ளார். இவ்வாறு புலனாயவு நடவடிக்கைகளோடு இணைந்திருந்த கலையன் தனது குடும்பத்தவர்களையும்; திருகோணமலையிலேயே தங்க வைத்திருந்தார். எனினும் இறுதியுத்தம் முடிவுற்ற காலப்பகுதியில் தனது குடும்பத்தை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருந்தார். புலிகளுடன் கடமையாற்றிய காலப்பகுதியிலேயே இராணுவத்திற்கும் தகவல்களை வழங்கும் இரட்டை உளவாளியாக இவர் கடமைணாற்றியிருக்கலாம் என்ற சந்தேகங்கள் பின்னர் வலுப்பெற்று இருந்ததாக இவருக்கு நெருக்கமான திருகோணமலையைச் சேந்த முன்னாள் புலனாய்வுப் போராளி ஒருவர் தனது நண்பருக்கு தெரிவித்ததனைக் குளோபல் தமிழ்ச் செய்திகள் உறுதிப்படுத்திக் கொண்டது.
திருமலையில் புலிகளின் புலனாய்வுப் பணியில் ஈடுபட்டு வந்த இவர் திருகோணமலை படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுள் வீழ்ந்துகொண்டு போனபோது வன்னிக்கு சென்ற எழிலன், சொர்ணம் குழுவினருடன் வன்னிக்கு சென்றவர். அங்கும் தொடர்ந்து புலிகளின் புலனாய்வு அமைப்பில் தொழிற்பட்டாலும் இலங்கை இராணுவத்துக்கும் தகவல்களை வழங்கியதற்கான அதிக சந்தர்ப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் மே 15க்கு பின்னரான மே 19 வரையிலான காலப்பகுதியில் செய்மதித் தொலைபேசியுடன் இவர் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் செயற்பட்டதனை அங்கிருந்தோர் கண்ணுற்றுள்ளனர். எனினும் மே 19ன் பின் இவர் பற்றிய தகவல்கள் தெரியாத போதும் புணர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாமலேயே சுதந்திரமான நடமாட்டத்துடன் பின்னாளில் தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.
இவரையே புலிகளை மீள இணைக்கும் தொழிப்பாட்டுக்கும், புலிகள் அமைப்பை கட்டி எழுப்பும் நடவடிக்கைகளுக்கும் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்தி உள்ளனர். இந்த வகையில் கலையனின் வலையில் முன்னாள் புலியான கோபியே முதலாவதாக வீழ்ந்த நபராக கருதப்படுகிறார். விடுதலைப் புலிகள் அமைப்பில் இயங்கி வந்த கோபி என்பவர் இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் அரேபிய நாடு ஒன்றில் தொழில் புரிந்து கடந்த ஜனவரி மாதத்திலேயே நாடு திரும்பியிருந்தார். இந்தக் காலப்பகுதியில் தற்செயலாக இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு கடமையாற்றிய கலையன் கோபியை திருகோணமலையில் சந்திக்க நேரிட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் தப்பிய கோபி அரேபிய நாடொன்றில் வேலைக்காக சென்று 3 வருடங்கள் முடிவடைந்த நிலையிலேயே இலங்கை திரும்பி திருகோண மலையில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த வேளை கலையனின் தொடர்பு கிடைக்கப்பெற்றுள்ளது. முன்னாள் போராளி புனர்வாழ்வு அளிக்கப்படாதவர் என்ற வகையில் கோபியைத் தன் வலையில் விழுத்தி புலிகளைத் தமது கட்டுப்பாட்டில் மீள் இணைப்பு செய்யும் விடயத்திற்கு கலையன் பயன்படுத்தி உள்ளார். புலிக்குழுவொன்றை மீள உருவாக்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு இருந்தது.
இதன் மூலம் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் புலிகளின் செயற்பாடு, பயங்கரவாதம் தொடர்கிறது எனச் சர்வதேச அளவில் நிறுவ அது விரும்பியிருந்தது. புலிகள் மீள எழுகிறார்கள் அவர்களை கடுப்படுத்தக்கூடிய பலமும் திறமையும் மெதமுலன ராஜபக்ஸக்களுக்கே உண்டு என காட்டுவதன் மூலம் தென்னிலங்கையில் அரசியல் செல்வாக்கை தக்க வைக்க முடியும். எனவும் ராசபக்ச குடும்பம் நினைத்திருந்தது. இதற்கு கலையன் என்ற புலிகளின் முன்னாட் புலனாய்வாளர் பயன்படுத்தப்பட்டார். இவரே கோபிக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி அரசாங்கத்தின் தேவைக்கு பலியாக்கி இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
அடுத்தவர் அப்பன் என்ற நவநீதன். புலிகள் அமைப்பில் இவருக்கு பெயர் திரு. இவர் புலிகளின் கரும்புலிப் போராளியாவர். இறுதியுத்தத்தில் தப்பிய இவர் படையினரிடம் அகப்படாது புனர்வாழ்வுக்கு உட்படாது வாழ்ந்து வந்துள்ளார். யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த இவர் புலித் தேவனின் நெருங்கிய உறவுக்காரர். கிளிநொச்சியிலேயே நடமாடித்திரிந்துள்ளார். இந்த நிலையில் ஏ 9 வீதியூடாகச் சென்ற அப்பனை இலங்கைப் புலனாய்வுப் பிரிவுடனேயே தனது காலத்தை கழிக்கும் கலையன் தற்செயலாக சந்தித்ததில் இருந்து உறவைப் பேணத் தொடங்கியுள்ளார்.
இதன்போது புலிகளைத் தான் மீளக் கட்டி எழுப்புவதாகவும் பழையவர்களை மீள இணைத்து வருவதாகவும் அதற்கு உதவுமாறு அப்பனுக்கும் உணர்வூட்டி அடுத்த கட்ட ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையூட்டி, இதற்கு புனர்வாழ்வுக்கு உட்படாதவர்களே நம்பிக்கைக்கு உரியவர் எனத் தெரிவித்த கலையன் புலிகளை மீள கட்டி எழுப்புவதற்கான வேலையை ஆரம்பிக்குமாறு கூறியுள்ளார். புலிகளின் புலனாய்வுத்துறைப் போராளியாக இருப்பது, புனர்வாழ்வுக்கு உட்படாது தொடர்ந்து தொழிற்படுவது, திருகோணமலையிலேயே தங்கியிருந்து வேலைசெய்வது என்ற அடிப்படையில் கலையனின் புலிக்கதையை அப்பனும் இலகுவில் நம்பியுள்ளார். அதன் அடிப்படையில் கோபியுடன் அப்பனும் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த செயற்பாடுகளை கலையனின் ஊடாக பாதுகாப்பு தரப்பு நகர்த்திய வேளையில் சமாந்தரமாக புலிகளின் விமானப் படைப் போராளியாக இருந்த தெய்வீகனும் புலனாய்வாளர்களால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இவர் இறுதி யுத்தத்தில் தப்பி வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார் எனக் கூறப்பட்ட போதும் அவரும் படையினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவருடன் புணர்வாழ்வில் இருந்த மூத்த போராளி ஒருவர் தெய்வீகன் தன்னுடனேயே புனரவாழ்வுக்கு உட்பட்டு இருந்தார் என்பதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
தெய்வீகன் அனுராதபுர விமானப் படைத் தளத் தாக்குதலில் பங்கு கொண்ட முக்கியமானவர் என்பதோடு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்துள்ளார். இந்த தகவல்கள் யாவும் தெரிந்த நிலையிலேயே பாதுகாப்பு தரப்பின் பொறிக்குள் தெய்வீகன் சிக்கியிருந்துள்ளார். அந்த வகையில் புதுக்குடியிருப்பை அண்மித்த பிரதேசத்தில் புலிகளின் புதிய விமானப் பாகங்கள் பொதிசெய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு இருந்தது. அதனைத் தெய்வீகனே காட்டிக் கொடுத்ததாக அந்த மூத்த போராளி கூறுகிறார்.
மேலும் புலிகளின் விமானப்படையின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து பெருமளவு தகவல்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெய்வீகனூடாகப் பெற்றுக் கொண்டதோடு முக்கியமான விமான பாகங்களையும் கைப்பற்றி இருந்தது. அதற்கான பிரதி உபகாரமாக தெய்வீகன் சுதந்திரமாக விடப்பட்டதாக தெய்வீகனுடன் இருந்த அந்த மூத்த போராளி குளோபலுக்கு தெரிவித்தார். இருந்த போதிலும் இலங்கையின் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பில் அவர்களின் நிகழ்ச்சி நிரலிலேயே தெய்வீகன் இயங்கவிடப்பட்டு இருந்தார்;. ஆத்துடன்; இவர் தனது குடும்பத்தினருடனேயே வவுனியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டார் என சில தகவல்கள் கூறுகின்ற போதும் அவை தெளிவற்ற தகவலாகவே உள்ளன .
இதேவேளை சாஸ்திரி தனது வலைத்தளத்தில் 2013.01.01ல் 16 மாதங்களுக்கு முன்பே பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம். தொடரில் தெய்வீகனைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார். 'இது இப்படியிருக்க அனைத்துலகச் செயலகம் அடுத்த கட்ட ஆயுதப் போரை நடத்தப் போவதாக கூறியிருப்பது தெய்வீகன் என்கிற நபரை வைத்துத்தான். தெய்வீகன் என்பவர் யாரென்று சுருக்கமாக பார்த்து விடலாம். இவர் புலிகள் அமைப்பில் ஒரு இளநிலை போராளி விமான ஓட்டியாக பயிற்சி பெறுவதற்காக புலிகள் அமைப்பினால் கிழக்கு ஜரோப்பிய நாடொன்றிற்கு அனுப்பி விமான ஓட்டிக்கான கல்வியும் பயிற்சியும் பொற்றவர் அதில் தேர்ச்சி பெறாததால் திரும்பவும் வன்னிக்கு அழைத்து புலிகளின் உள்ளக புலனாய்வு பிரிவில் இணைக்கப் பட்டிருந்தார்.
இறுதிகட்ட யுத்தத்தில் இவரே வழங்கலிற்கும் பொறுப்பாக இருந்தவர். புலிகள் அமைப்பின் இறுதி முயற்சியான ஆனந்த புரம் ஊடறுப்பு சமர் நடந்தவேளை அதற்கு தலைவர் பிரபாகரனே நேடியாக நின்று கட்டளைகளை வழங்கியிருந்ததும் அது தோல்வியில் முடிந்து புலிகள் அமைப்பின் முன்னணி தளபதிகளும் ஆயிரக்கணக்கான போராளிகளும் பலியானதோடு தலைவர் பிரபாரன் உயிர் தப்பியிருந்தார். அந்த சண்டைக்காக மேலதிக ஆயுத மற்றும் காயமடைந்தவர்களிற்கான அவசர மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு களத்தில் நின்றிருந்த தளபதிகள் தெய்வீகனை தொடர்பு கொள்ள முற்பட்ட வேளை தனது தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டு காணாமல் போயிருந்தவர்.
மீண்டும் 2010 ம் ஆண்டு தை மாதமளவில் இந்தியாவில் மதுரையில் நடமாடத் தொடங்கியிருந்தார். அவரோடு வெளியக புலனாய்வுத் துறையின் புகழேந்தி மற்றும் தென்னவன் அல்லது கரிகாலனும் மதுரையில் தங்கியிருந்து புலிகளின் அனைத்துலக செயலகத்தின் வெளிநாட்டு கிளைகளோடு தொடர்புகளை ஏற்படுத்தி தாங்கள் இன்னமும் பலநூறு போராளிகளுடன் வன்னி காடுகளிற்குள்ளேயே நிற்பதாகவும் மறு பக்கம் கிழக்கு மாகாண காட்டிற்குள் ராமும் தங்களோடு தொடர்பில் இருப்பதாகவும் ராமின் தலைமையில் அடுத்த கட்ட தாக்குதல்களை நடத்துவதற்காக தங்களிற்கு ஆயுதங்களை பெறுவதற்காகவும் அத்தியாவசிய தேவைகளிற்காவும் நிதி உதவி கோரியிருந்தார்கள்.
அதை நம்பி அனைத்துலக செயலகமும் பணம் அனுப்பியிருந்தார்கள். அன்றைய காலகட்டத்தில் தென்னவன் என்கிற கரிகாலனும் என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கதைத்திருந்தார். பணத்தை அனுப்பிவிட்டிருந்த அனைத்துலகச் செயலகத்தினர் தாக்குதல் எதுவும் நடக்காததால் ஏமாற்றமடைந்து ராமோடு தொடர்புகளை ஏற்படுத்தி ஏதாவது தாக்குதல் செய்தால் தான் இங்குள்ள மக்கள் நம்புவார்கள் அப்பொழுதான் பணம் சேகரித்து அனுப்பலாம் ஏதாவது தாக்குதலை செய்யும்படி கேட்டிருந்தனர். ஆனால் இது வரை காலமும் தலைவரின் கட்டளைக்கிணங்கவே தான் தாக்குதல்களை நடத்தியதாகவும் வெளிநாட்டிலிருந்து வரும் கட்டளைகளிற்கிணங்க தன்னால் இயங்க முடியாது தலைவரின் கட்டளை வராமல் தன்னால் எதையும் செய்ய முடியாதென ராம் எவ்வித தாக்குதலையும் செய்ய மறுத்து தெய்வீகனின் தொடர்பும் தனக்கு இல்லையென்று அவர்களிற்கு சொல்லிவிட்டிருந்தான்.
பின்னர் ராமிற்கும் எனக்கும் நடந்த உரையாடல்களின்போது அதை தெரித்திருந்தான். அன்றைய கால கட்டத்தில் தான் இலங்கை வான்படையின் உலங்கு வானுர்தியொன்று காலநிலை காரணமாக கட்டுப் பகுதியில் விபத்திற்குள்ளாக அதனை ராமின் தாக்குதலிற்குள்ளானதாக வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யவும் அனைத்துலகம் முயன்றிருந்தது. பின்னர் சில காலங்கள் தெய்வீகனின் தொடர்பு அறுந்து பேயிருந்ததோடு தென்னவன் (கரிகாலன் )பிரான்ஸ் வந்து சேர்ந்ததும் மீண்டும் அனைத்துலக செயலகம் மற்றும் பழைய வெளிநாட்டு கட்டமைப்பை சேர்ந்தவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துகிறார். அப்பொழுது மீண்டும் என்னுடன் ஒரு தொடர்பையும் ஏற்படுத்தியிருந்தார். இவர்தான் தற்சமயம் அனைத்துலக செயலகத்தோடு சேர்ந்து நின்று தெய்வீகனால் அடுத்த கட்ட ஆயுத போரை வழிநடத்த முடியும் என்று அவர்களையும் நம்பவைத்து தெய்வீகனோடு தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஆயுதப் போர் நடக்கிதா இல்லையா அனைத்துலகம் மக்களையும்... தெய்வீகன் அனைத்துலகத்தையும் ஏமாற்றுகிறாரா என்பதை யெல்லாம் விட்டு விட்டு பார்த்தால். இறுதியாக மாவீரர் தினத்தின் போது யாழ் பல்கலைக்கழகத்து பிரச்சனைகளின் பின்னால் யாழில் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டிலும் சில கைதுகள் நடந்து செய்திகளில் வெளிவந்தவைதான். ஆனால் அதன் பின்னால் இருந்த தெய்வீகனும் புகழேந்தியும் தமிழ் நாட்டில் மதுரையில் சுதந்திரமாகத்தான் நடமாடுகின்றார்கள். அதாவது இந்தியாவின் இலங்கை மீதான அடுத்த கட்ட மேலாதிக்க நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் பலியாக போவது நாங்களா?? அதற்கு அனுசரணை புலிகளின் வெளிநாட்டு கிளைகளான அனைத்துலக செயலகமா?? இது கேள்வி மட்டும் தான் பதில் எனக்கும் தெரியாது காலம்தான் பதில் சொல்லும். என சாஸ்த்திரி 2013 ஜனவரியில் எழுதியதற்கு 2014 ஏப்ரல் 11ல் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு பதில் சொல்லியிருக்கிறது. இவையாவும் இப்படி அதிர்ச்சிகரமான தகவல்களோடு தொடர ஏப்ரல் 11ஆம் திகதி சம்பவத்தில் கொல்லப்பட்டதாக கூறப்படும் மற்றுமொருவரான குருநாகலைச் சேர்ந்த தமிழ்ப் புலனாய்வு அதிகாரியே தெய்வீகன் தொடர்பான விடயங்களை கவனித்து வந்ததாக சொல்லப்படுகிறது. கொக்காவில் முகாமில் கடமையாற்றிய இந்த புலனாய்வு அதிகாரி புலிகள் இயக்கத்திலும் புலனாய்வு செயற்பாட்டில் இருந்தவர் எனக் கூறப்படுகிறது. அதனாலேயே கொல்லப்பட்ட மூவர் தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட தகவல்கள் எக்காலத்திலும் வெளிவரக் கூடாது என்பதற்காக அவரும் சேர்த்துக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கு மற்றுமொரு விடயம் சுட்டிக் காட்டப்படவேண்டியது. சுட்டுக் கொல்லப்பட்ட குறித்த இராணுவப் புலனாய்வு அதிகாரி தான் புலிகளின் போராளி எனவும் படையினரின் அச்சுறுத்தல் காரணமாகவே இராணுவத்திற்காக தொழிற்படுவதாகவும் தெரிவித்ததோடு புலிகளை மிளக் கட்டி அமைத்து போராட வேண்டும் என்ற உத்வேகத்தை தெய்வீகன் உள்ளிட்ட மூவருக்கும் வழங்கியதாகவும் இவர்களுடன் தொடர்புடைய தரப்புகள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையிலேயே புலிகளை மீளக் கட்டி அமைப்பதற்கான செயத் திட்டங்களை மூவரும் வகுத்துள்ளனர். அதன் முதற்கட்ட நடவடிக்கையாகவே துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து ஒட்டப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை ஆரம்பமாகி இருந்தன. இதற்கிடையில் இந்தியாவில் இருந்த கலையனின் குடும்பமும் அழைத்து வரப்பட்டு திருமலையில் தங்க வைக்கப்பட்டனர். நகரப் பகுதியில் அதிக விலைகொடுத்து வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தியதோடு வாகனக் கொள்வனவுகளையும் மேற்கொண்ட நிலையில் கலையனின் நடவடிக்கைகள் மீது அப்பன் கோபி ஆகியோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை கலையனுக்கு புலம்பெயர் தேசத்தில் இருந்து பெருமளவு பணம் கிடைக்கப் பெறுவதாகவும் அப்பன் தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து குறித்த மூவரும் தன்னிச்சையாக தொழிற்பட தொடங்கியதாகவும, புணர்வாழ்வுக்கு உட்பட்டு விடுவிக்கப்பட்ட பலருடன் தனிப்பட்ட தொடர்புகளை இவர்கள் பேணியதாகவும், அவர்களே பின்னர் கைது செய்யப்பட்ட 65 பேர்களில் அடங்குவதாகம் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் இலங்கைப் படையினருக்கும் கலையனுக்கும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து கலையன் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் கூறுகையில் ' நாமே உருவாக்கிவிட்ட இவர்கள் எமக்கே டிமிக்கி விட்டு தனியாக செயற்பட முற்படுகிறார்கள் எனக் கூறியுள்ளார். காரணம் கலையன் ஊடாக புலிகளை மீள இணைப்பதன் மூலம் அவர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என படையினரும், கோபி, அப்பன், தெய்விகனூடாக பல நடவடிக்கைகளில் இறங்குவதன் ஊடாக புலம்பெயர் அமைப்புகளிடம் இருந்து பெரும் பணத்தினை பெறமுடியும் என கலையனும் நம்பியிருந்தனர். மறுபக்கம் இவ்வாறு உருவாக்கப்படும் அமைப்பிற்கு முன்னாள் போராளிகள் எந்த வகையில் ஆதரவுகளை வழங்குவார்கள், என்ற ஆய்வைப் பெறுவது. புலிகள் மீள உருவாகினால் பொதுமக்கள் தரப்பில் எத்தகைய ஆதரவு இருக்கிறது, மனநிலை எப்படி என்பது பற்றி அறிவது, புலம்பெயர் அமைப்புகள் செயற்பாட்டாளர்கள் எப்படி ஆதரவு வழங்குவர்கள், புலிகளின் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் சொத்துக்கள் வெளிவருமா? என்ற கோணத்தில் எல்லாம் அரசாங்க தரப்பு பயனை எட்ட நினைத்தது.. அதில் ஓரளவு பயனைப் பெற்றும் இருக்கிறது. இந்த நிலையில் தெய்வீகன் படையினரது கட்டுப்பாட்டில் தொடர்ந்து செயற்பட்ட போதும், கலையனதும் படையினரதும் நடவடிக்கைகளை விளங்கி, இனம் கண்டு, கோபியும் அப்பனும் தனித்து செயற்பட தொடங்கியுள்ளனர். இவ்வாறான சூழலில் கலையனையும் படையினரையும் விட்டு விலகி தொடர்புகளை துண்டித்த போதுதான் இவர்களை கைது செய்ய படையினர் சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டு உள்ளனர். முக்கியமாக வட்டுக்கொட்டை சுற்றிவளைப்பின் போது, மன்னாரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மறுநாள் அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் அப்பன் பயணித்ததாகவும், பின்னிருக்கையில் பயணித்தவர் கோபியாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட பகுதியில் சென்று மறைந்திருப்பது ஆபத்தில்லை என உணர்ந்து பெரும் பொதியுடன் சென்று இவர்கள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வன்னியிலும் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை, சித்தங்கேணிப் பகுதிகளில் சுற்றி வளைப்பை மேற்கொண்ட போதே கோபி மற்றும் அப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விட்டனர். கோபி கொல்லப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே (08.04.14) அவர்கள் கைது செய்யப்பட்டதை தாம் உறுதிப்படுத்தியாக யாழ்ப்பாணதின் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றும் ஒரு முன்னாள் போராளியும் இவரது கைதை உறுதிப்படுத்தியுள்ளார். இவர்களுடன் ஏற்கனவே தமது கட்டுப்பாட்டுள் இருந்த தெய்வீகனும் கொல்லப்படுவதற்குத் தயார்ப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்தார். அதன் வழி 10.04.14) அன்று இரவே இவர்கள் அருகாமையில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டனர் எனினும் மறுநாள் காலை பெரும் எண்ணிக்கையிலான படையினருடன் பெரும் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதான பீடிகையுடன் ஊடக மாநாட்டிற்கான ஒளிப்படங்களுடன் 11ஆம் திகதி 8.30 மணியவிலேயே கோபி, அப்பன், தெய்வீகன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டதாகவும் தமது தரப்பிலும் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் வடக்கிலும் தெற்கிலும் படைப் புலனாய்வாளர்கள் தகவலை கசிய விட்டு இருந்தனர். கொல்லப்பட்ட பின்பு கூட இவர்களின் சடலங்கள் முல்லைத் தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைத் தாண்டி பதவியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கேயே பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நீதவான் விசாரணையும் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு நாடகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அது மட்டும் அல்லாமல் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படாமல் அரச செலவிலேயே அடக்கமும் செய்யப்பட்டது. அரசாங்கத்தினதும் படைகளதும் புலனாய்வாளர்களதும் அனைத்து நடவடிக்கைகளுமே இந்தக் கொலைகள் கூட்டுப் படுகொலைகள் என்பதனை நினைவுபடுத்துவதோடு புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா என்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் சொன்னார் 'ஜெனீவா முடிந்ததும் இரண்டு ஒரு பேருக்கு யாழ்ப்பாணத்தில் வெடி விழும் என்று' மூன்று மாத்திற்கு முன்பாக முற்கூட்டியே குறிப்பிட்டிருந்ததாக கூறியுள்ளார். ஆயின் இவர்களை அரசாங்கம் பலியாக்கப் போகிறது என்பதனை கருணா முன்னரே அறிந்திருந்தார். இதன் மூலம் பலரது சந்தேகங்களுக்கும் அதனையும் தாண்டிய விவாதங்களுக்கும் இலங்கை அரசாங்கத்தின் கோமாளித் தனங்களே சரியான பதிலையும் தெளிவையும் அம்பலப்படுத்தல்களையும் தந்திருக்கின்றன.