நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ள ஜனாதிபதி; மகிந்த ராஜபக்சவிற்க்கு எதிராக டெல்லியில் வைகோ தலைமையில் மதிமுகவினர் இன்று கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். இதில் ஜனாதிபதி ; மகிந்த ராஜபக்சவும் ஒருவர். ஆனால் மகிந்த ராஜபக்சவை அழைத்ததற்கு தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான மதிமுக பொதுச்செயலர் வைகோ டெல்லி சென்று ராஜ்நாத்சிங், மோடியை நேரில் சந்தித்து ராஜபக்சேவை அழைப்பதை தவிர்க்க கோரினார். அப்படி இல்லையெனில் போராட்டம் நடத்துவோம் என்றும் வைகோ எச்சரித்தார்.
இந்நிலையில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று கறுப்புக் கொடி ஏந்தி மதிமுகவினர் வைகோ தலைமையில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மதிமுகவினர் கலந்து கொண்டனர். இதன் போதே வைகோ கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.