புதுடெல்லியில் இன்று நடக்கும் இந்தியப் பிரதமரின்
பதவியேற்பு நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பை அனுப்புவதற்கு, பாஜகவும், இந்திய வெளிவிவகார அமைச்சும் மறுத்து விட்டதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.இன்று மாலை நடக்கவுள்ள நரேந்திர மோதடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பை அனுப்ப வேண்டும் என்று, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், அங்கம் வகிக்காத தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்திருந்தன.
எனினும் பாஜகவும், இந்திய வெளிவிவகார அமைச்சும் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டன. வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு மட்டுமே, அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்சவுடன், விக்னேஸ்வரன் வருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு தனியான அழைப்பு அனுப்புவது, சிறிலங்காவின் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கும் கடப்பாட்டை இந்தியா மீறுவதாகி விடும் என்பதாலேயே அவருக்கு அழைப்பு விடுக்க மறுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முன்னதாக பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க தன்னுடன் வருமாறு சிறிலங்கா அதிபர் விடுத்த அழைப்பை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நிராகரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.