அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 01 - TK Copy அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 01 - TK Copy

  • Latest News

    அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 01

    மிகப்பெரிய வல்லரசுகள்கூட மென்பல அரசியல் முலம்
    பொருளாதார அழுத்தங்களை உருவாக்குவது, சிறிய அரசுகளை அனைத்துலக அரசியலில் தனிமைப்படுத்துவது, அனைத்துலக நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மூலம் ஏமாற்றுவது, என பல்வேறு இரசதந்திர சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. 'புதினப்பலகை'க்காக *லோகன் பரமசாமி. கடந்த மாதம் இடம் பெற்ற ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடரில் அனைத்துலக நகர்வுகளின் மத்தியிலே குறிப்பாக அமெரிக்க இந்திய அரச நலன்களினதும் இதர எதிர்த்தரப்பு வல்லரசுகளின் நலன்களினதும் அரசியல் மேலாதிக்க போட்டிகளின் மத்தியில் தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கேட்டு போராடும் நிலை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

    இறுதியில் புலம் பெயர் தமிழர்களையும் ஈழத்தில் வாழும் தமிழர்களையும், சிறீலங்கா அரசிடம் நீதி வேண்டி நிற்க வேண்டிய நிலைக்கு இட்டு சென்றது அமெரிக்கா முன்மொழிந்த பிரகடனம். கொடுமைகளுக்கான நீதி என்ற பெயரில் உலக தமிழர்கள் அனைவரையும் சிறிய, சிறீலங்கா அரசினால் கொள்ளடக்கப்பட்டு விடுவதற்கான அடிப்படைகள் அந்த வரைவினால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது சில தமிழ் ஆய்வாளர்களது குறிப்பாகும். இக்கூட்டத்தொடரினால் ஏற்பட்ட நன்மைகளின் பக்கம் பார்ப்பதானால் தமிழினத்தின் ஒரு படிக்கல் முயற்சியாக கருதப்படும் 'இனஅழிப்பு' என்ற பதத்தை நிறுவுவது என்ற முயற்சியில் இந்த கூட்டத்தொடர் சில வாய்ப்புகளை பெற்று கொடுத்திருக்கிறது. 

    அத்துடன் அரசுகளின் இராசதந்திரிகள் மத்தியில் அரசு-அற்ற தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் இராசதந்திர வரைமுறைகளை கற்று கொள்ளவும், அரசுகளின் இராசதந்திர கலாச்சாரத்தை புரிந்து கொள்ளவும் களம் அமைத்து கொடுத்திருக்கிறது. தமிழர்களின் கொடுமைகளுக்கான தண்டனையை பெற்று கொடுப்பதற்கு அப்பால் தமிழர்கள் தமது சொந்த முயற்சிகளிலே ஒரே நோக்கத்தோடு கடமைகளை பகிர்ந்து கொண்டு செயலாற்ற வேண்டுமென்பதையும், இன்னும் நிறுவனமயப்படுத்தப்பட வேண்டிய தேவையையையும் இத்தகைய நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன. இங்கே அனைத்துலக நாடுகளின் நிலைகள் குறித்தும் உலக ஒழுங்கு மாற்றத்திற்கேற்ப தமிழினத்தின் போராட்டம் புதிய பரிணாமத்தை பெறவேண்டியது குறித்தும் புரிந்து கொள்வதாக இக்கட்டுரைத்தொடர் அமைந்துள்ளது. 

    இந்த வகையிலே அனைத்துலக நாடுகளின் போக்குகள் குறித்தும் குறிப்பாக வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அமெரிக்க அணுகுமுறை, இந்திய அரசியல் மாற்றம் என்பன இனிவரும் காலங்களில் தமிழர் உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் செய்ய வேண்டிய நகர்வுகள் குறித்தும் ஆய்வது சிறந்ததாக தெரிகிறது. ஓவ்வொரு நான்கு வருடமும் 'பென்ரகன்' - அமெரிக்க இராணுவ தலைமையகம் - அமெரிக்கப் பாதுகாப்பு கொள்கையின் மைய அதிகார முன்னேற்றங்கள் குறித்த அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிடுவது வழமையாக உள்ளது. 2014ம் ஆண்டு மார்ச்மாதம் வெளிவந்த அறிக்கையில், அவாகளால் 2011 ஆண்டு கொண்டு வரப்பட்ட பாதுகாப்பு நிதி முடக்கத்தின் பிரதி பலன்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு வரவுசெலவு அறிக்கைகள் இரண்டு வகையான செலவீனக்குறைப்பு திட்டங்களுக்குள் வரையறை செய்யப்பட்டுள்ளது. 

    முதலாவதாக வரவுசெலவு திட்டத்தினூடான கட்டுப்பாடு. அதாவது 2011ம் ஆண்டிலிருந்து அடுத்த பத்தாண்டுகளுக்குள் 487 பில்லியன் டாலர் பணத்தை இராணுவ செலவீனத்திலிருந்து மீதப்படுத்தி கொள்வது. இரண்டாவாதக அமெரிக்க காங்கிரசின் இரண்டு கட்சிகளும் அமெரிக்கத்தலைவரும் உடன்பாட்டின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்து கொள்ளக்கூடிய அரசாங்க செலவீன பணத்திலிருந்து 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருடா வருடம் மீதப்படுத்தி கொள்வது. இவ்வாறு செலவைக்குறைக்கும் திட்டங்களே நான்காண்டு அறிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்ட நிலை இருந்தாலும் இதன் பின்விளைவுகள் பாரிய அளவு பூகோள கையாள்கை நிகழ்ச்சிகளை தாக்காத வகையில் இருக்கும் என்பதில் நிட்ச்சயப்படுத்தப்பட்ட தன்மையை காணகூடியதாக உள்ளது. 

    நேரடி இராணுவ நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தயங்கி உள்ள இந்த அறிக்கை அவ்வப்போது பல்வேறு பிராந்தியங்களிலும் ஒரே நேரத்தில் எழக்கூடிய நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்ள பரிந்துரை செய்கிறது. பலாத்கார இராணுவ அரசியல் பிரயோகிக்கப்பட வேண்டிய நிலையில் இன்னுமோர் பிராந்தியத்திலும் அத்தகைய நிலையை உருவாக்குவதை தவிர்த்து கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த செலவீனக்குறைப்பு ஆளணிக்குறைப்பிலும் பெரும் தாக்கத்தை உருவாக்கி உள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இராணுவ வேலை வாய்ப்பை இழக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. 

    அமெரிக்கத் தலைமை உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியிலேயே தற்பொழுது பெருமளவு தங்கி உள்ளது என்பதை இந்த அறிக்கை மிகத்தெளிவாக காட்டி நிற்கின்றது. அமெரிக்கப் பொருளாதாரம் உலக நாடுகளின் கூட்டு பொருளாதார வளர்ச்சியிலேயே பெருமளவில் நம்பிக்கை கொண்டு உள்ளது. உலகில் தொழில்நுட்ப முடிவுப்பொருட்களின் தேவை அதிகரிப்பதானது, அமெரிக்க ஏற்றுமதி பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய தூண்டுவதன் மூலம், அமெரிக்க உள்நாட்டு சேமிப்பை அதிகரிக்க வைப்பதற்கு வியாபார ஒப்பந்த முனைப்புகள் நடைபெற்று வருகிறது. உலக நாடுகளுடன் தன்னை இணைத்து கொண்டு கூட்டு பொருளாதார வளர்ச்சி மூலம் அமெரிக்க தொழில்நுட்ப பொருட்களின் தேவையை உலக நாடுகள் மத்தியில் மேலும் உருவாக்குவது என்பது அதன் திட்டமாக இருக்கிறது. 

    உலக நாடுகளிடையே சமநிலைப்படுத்தப்பட கூடிய பொருளாதார வளர்ச்சியானது பொருளாதார இடைவெளியை நிரப்புவதாக கொள்ளப்படுகிறது. இடைவெளிகளற்ற பொருளாதார சமநிலையும் பொருளாதார ஒப்பந்தங்களுடாக பெறக்கூடிய செல்வாக்கும், குறிப்பிட்ட பிராந்தியங்களில் மேலைத்தேய கோட்பாடுகளை ஏற்று கொண்டு உள்ளக அரசியலை வரை முறை செய்து கொள்ளக்கூடிய அரசுகளை இனங்காண கூடியதாக இருக்கும். இதன் முலம் பாதுகாப்பு முன்முன்முயற்சிகளை நகர்த்தவும் பல்துறைசார் பொருளாதார வளர்ச்சிகளை உயர்த்தி கொள்ளவுமான முனைப்புகளுக்கு ஏற்கனவே 2010 பாதுகாப்பு அறிக்கைகளில் பரிந்துரைகள் வகுக்கப்பட்டுள்ளன. 

    பல்வேறு அமெரிக்க ஆய்வாளர்களின் அறிக்கைகளின் சாராம்சங்களும் இன்று அமெரிக்கா தனது பலத்தையும் செல்வாக்கையும் உத்தரவாதப்படுத்தி கொள்ள வேண்டுமாயின் இன்றய உலகின்; தலைமை வகிக்கும் தன்மையை, புதுப்பித்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது என்று கூறி வருகின்றனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு என்பது அதன் தனித்துவமான தேசிய தாரதரங்களை முன்நகர்த்த கூடிய செய்திறனிலேயே தங்கி உள்ளது என்பதையே மையமாக கொண்டுள்ளது என்பது அவர்களின் பார்வை. ஒருகாலத்தில் பிரித்தானியா தனது கடற்பலத்தை கொண்டு உலக நாடுகளை பயமுறுத்தி இராசதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வந்தது. Gunboat diplomacy என்று அழைக்க கூடிய இந்த இராசதந்திரம் சக்தி மிக்க நாடுகள் பாரிய கப்பல்களை சிறிய நாடுகளின் கடற்பரப்புகளில் நிறுத்தி தமக்குரிய சலுகைகளை பெற்றுகொண்டது. 

    20ம் நூற்றாண்டில் அமெரிக்கா, உலக கடற்பலத்தை பெற்று கொண்ட போது பல்வேறு சந்தர்ப்பங்களில் இதேபாணியில் பயமுறுத்தி காரியங்களை சாதிக்கும் நிலைப்பாட்டை கொண்டிருந்தது. இந்த போக்கு இன்றுவரை Power projection என்ற மறு பெயரில் தமது பலத்தை வியாபகப்படுத்தி காட்டும் தன்மை அனைத்துலக இராணுவ அரசியலில் இருந்து வருகிறது. அனைத்துலக அரசியலில் செயற்திறன் மிக்க அரசு ஒன்றின் பலத்தை காட்டும் முக்கியமான ஒரு தனிமமாக அந்த அரசின் பலம் காட்டும் வியாபகம் காணப்படுகிறது. அரசுகளின் தரை கடல் ஆகாய பலத்தின் வியாபகத்தை எடுத்துகாட்டும் இந்த தனிமம் வன்முறைப் பலத்தின் சொத்துகளாக பார்க்கப்படுகிறது. பாரிய பீரங்கிகள், காலாட்படைகள; பல் வகைப்பட்ட ஆகாயப்படை குழுக்கள், கடற்கலன்கள் இவை அனைத்தையும் நகர்த்துவதற்குரிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் நிலைகள் என அனைத்து பாதுகாப்பு ஆர்ப்பரிப்பு தன்மையும் அனைத்துலக உறவு அரசியலில் இன்றும் மிகமுக்கியமாக காணப்படுகிறது. 

    இருந்த போதிலும் வன்முறை பலம் காட்டும் வியாபகத்தின் முக்கியத்துவத்ததை தேவைக்கு தகுந்தாற்போல் முடக்கி வைக்க வேண்டிய நிலைக்கு தற்போதய உலக ஒழுங்கில் மென்முறை பலம் காட்டும் அரசியலின் வளர்ச்சி, அமெரிக்க உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவத்தில் முன்னுரிமை பெற வைத்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் அதாவது தொண்ணூறுகளின் கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் பிற்பாடு சுதந்திரமான பண்டங்களின் நகர்வும் மூலதனப்பரிமாற்றமும் பிராந்தியங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி உள்ளன. புதிய பிராந்தியங்கள் உலக அரசியலில் புதிய ஒழுங்கை உருவாக்கி உள்ளன. தனிப்பட்ட நிறுவனங்களும், அரசு சார்பு நிறுவனங்களும் புதிய தொழில் நுட்ப வசதிகளால் புத்துயிர் பெற்று நிற்கின்றன. 

    தகவல் தொடர்பு தொழில் நுட்பம் இதற்கு பல்வேறு வசதிகளை கொடுத்துள்ளது. பிராந்திய அரசுகள் ஒன்றுடன் ஒன்று பொருளாதார நிலையில் தங்கி உள்ள நிலையை எட்டி விட்டிருக்கின்றன. இந்த நிலையில் அனைத்துலக அரசியல் நகர்வுகள்யாவும் மென்பலத்தை அடிப்படையாக கொண்டே நிகழ்கின்றது. மிகப்பெரிய வல்லரசுகள்கூட மென்பல அரசியல் முலம் பொருளாதார அழுத்தங்களை உருவாக்குவது, சிறிய அரசுகளை அனைத்துலக அரசியலில் தனிமைப்படுத்தப்படுவது, அனைத்துலக நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மூலம் ஏமாற்றப்படுவது, என பல்வேறு இரசதந்திர சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. மென் பலத்தின் அதிகாரம் அதிக செல்வாக்கை செலுத்தும் நிலையில் பல சகாப்தங்களாக அனைத்துலக அரசியலில் தனது ஏகாதிபத்திய தலைமைத்துவத்தை நிலை நாட்டும் பொருட்டு பயமுறுத்தி காரியம் சாதிக்கும் அனைத்துலக அரசியலை நடாத்தி வந்த அமெரிக்க அரசு கூட இன்றய அனைத்துலக அரசியல் சூழ்நிலையில் மென் பலத்தை கொண்டே தனது மேலாதிக்க போக்கை தக்க வைத்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. 

    இந்நிலையை வைத்து பார்க்கும் போது ஈழத்தமிழர்கள் கூட கடந்த முப்பதாண்டு காலங்களாக தீவிரவாதத்தையே தமது பிரதான உபாயமாக கையாண்டு பல வேளைகளில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்திருக்கின்றனர். இதன் விளைவாக இன்று தமிழர்களின் நேர்மையான அரசியல் கோரிக்கைகளையும் அந்த கோரிக்கைக்காக உழைக்கும் தமிழ் பிரதிநிதிகளையும் தீவிரவாதத்தின் ஆதரவாளர்களாக பலதரப்பினரும் சித்தரிக்க முற்படுகின்றனர். இந்திலையை மாற்றி அமைக்க தமிழர்களும் சில முன்னுதாரண நடவடிக்கைகளை செயலில் காட்ட வேண்டிய தேவை உள்ளது. 

    அனைத்துலக அரசியலில் இராசதந்திர நடவடிக்கையில் இறங்கி உள்ள நடவடிக்கையாளர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக கூட இந் நடவடிக்கைகள் அமையலாம். தீவிரவாத போக்கு கொண்டவர்கள் தமிழர்கள் என்ற பேச்சை வாய்மூட வைப்பதற்கு இது நிச்சயமாக பயன்படும். உதாரணமாக ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஒரே நேரத்தில் பகிரங்கமாக பாதுகாப்பையும் சமாதானத்தையும் வேண்டி நிற்பதுடன் தமிழ் மக்கள் பயங்கரவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல என்பதை பிரகடனப்படுத்துவதுடன். இந்தப்பிரகடனத்தை உலகின் அனைத்து நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களுக்கும் எட்டுவற்கான நடவடிக்கைகள் எடுப்பது ஒருமுறையாகலாம். தொடரும்…
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 01 Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top