அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 02 - TK Copy அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 02 - TK Copy

  • Latest News

    அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 02

    இன்று பொது இராசதந்திரத்தில் சமூக செயற்பாட்டாளர்களின்
    ஆளுமை அரச பிரதிநிதிகளின் செயற்பாட்டை சிறுமைப்படுத்திவிடும் பொழுது அரச இராசதந்திரிகள் சமூக செயற்பாட்டாளர்களை இராசதந்திர தீவிரவாதிகள் எனும் புதிய பதம் கொண்டு அழைக்க முற்படுவதையும் காண கூடியதாக உள்ளது. 'புதினப்பலகை'க்காக *லோகன் பரமசாமி. அரசியல் சுதந்திரமும், சமாதானமும், பாதுகாப்பும் தமது வாழ்வின் மிக இன்றியமையாத அங்கமென ஈழத்தமிழர்கள் தம்மெண்ணத்தில் கொண்டுள்ளனர். இலங்கைத்தீவில் சிறீலங்கா ஒரு அரசாக உருவகம் எடுத்து விடுவதற்கு முன்பிருந்தே இந்த எண்ணம் உருவகப்பட்டிருந்தது.

    1970களின் பிற்பகுதியில் அன்றைய உலக ஒழுங்கின் போக்கிற்கு ஏற்ப சிறீலங்கா அரசு தனது ஆட்சி முறையையே மாற்றி அமைத்து வெளியுறவுக்கொள்கை மூலம், தனது பேரம் பேசும் மூலோபாய தந்திரமாக பிராந்திய வல்லரசுக்கு எதிராக பலம்மிக்க வல்லரசுகளின்பால் நின்றது. இன்று வரை தனது பேரம் பேசும் பலத்தை பிராந்திய வல்லரசக்கு எதிராகவே உபயோகிக்கிறது. எத்தகைய நிலையை எடுத்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை அரசகளின் மேலைத்தேய அரசியல்தத்துவமும் அதன் கலாச்சாரமும் சிறீலங்காவை பாதுகாத்து வருகிறன. கடந்த ஜெனீவாகூட்டத்தொடர் காலங்களிலும் இன்னமும் அனைத்துலக அரசியல் கட்டமைப்பு இனஅழிப்புக்கு உள்ளாகி கொண்டிருக்கும் தமிழினத்திற்கு பாடம் கற்பிக்கும் போக்கிலேயே உள்ளதாக தமிழ் மக்கள் சார்பில் அக்கூட்டத்தொடரில் கலந்து கொண்டவர்கள் கவலை தெரிவித்திருந்தனர். 

    நாடுகள் மீதான படை எடுப்புகளின் போதும் மேலைத்தேய நாடுகளின் இராணுவ ஆக்கிரமிப்பு காலங்களிலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பெரிதாக எடுத்து கொள்ளாது விடப்பட்டுள்ள அதேவேளை. மனித உரிமை விவகாரம் எனும் ஆயுதம் சிறிய அரசுகளை தமது தேவைக்கேற்ப இராசதந்திர அழுத்தத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்தை கொண்டதாக மட்டுமே இருக்கிறது. பாதிப்பிற்குள்ளான தேசியமான தமிழினம் ஒருபொருட்டாக எடுத்து கொள்ளப்படாது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதற்கு ஒர் உதாரணமாக தமிழ் தரப்பினர் பார்க்கின்றனர். 

    இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனில் அனைத்துலக மனித உரிமைகள் குறித்த சரத்துகள் 1948 டிசம்பரிலேயே ஐக்கிய நாடுகள் சபையால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், 1989ம் ஆண்டு சீனாவின் தியனமன் சதுக்கத்தில் இடம்பெற்ற சனநாயக ஆதரவு போராட்டங்களின் போதே முக்கியத்துவம் பெற்றது. அதாவது அப்போராட்டங:களை நசுக்கும் முகமாக இடம் பெற்ற சீன அரசின் படுகொலைகளில் இருந்தே மனித உரிமையை அரசகளுக்கு எதிராக பயன் படுத்தும் ஆயுதமாக மேலைநாடுகளால் கையாளப்படுவது குறித்து கீழைத்தேய அரசுகளுக்கு ஆதரவாக பேசக்கூடிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலக பொருளாதாரத்தில் தனது முக்கியத்துவத்தின் காரணமாக சீனா தனது படுகொலைகளை மறந்து விடப்பட கூடிய ஒருவிடயமாக ஆக்கிவிட்டுள்ளது. 

    ஆனால் மனித உரிமை என்பது அதன் அடிப்படை ஒழுங்கு விதிகளின் ஊடாக பார்காது உலகில் வல்லரசுகளின் நலன்களினூடாக பார்க்கப்படும் நிலையானது, மனித உரிமை மீறல்களை தாராள இனஒடுக்குமுறை கொள்கைக்கு சாதகமாக பயன் படுத்திய அரசுகள் கூட அனைத்துலக அரங்கில் வல்லரசகளை எதிர்த்து நிற்கும் துணிச்சலை கொடுத்துள்ளது என்பது பல மனிதஉரிமை கோட்பாட்டாளர்களின் கருத்தாக உள்ளது. அதேவேளை இரண்டு மையங்களை கொண்ட உலக ஒழுங்கு இருந்த காலப்பகுதியில் சிறிய நாடுகளும் வலு குறைந்த நாடுகளும் அனைத்துலக உறவு அரசியலில் தமது உரிமைகள் குறித்து அதிகளவு பேசிக்கொள்வதற்கு இடமளிக்கப்படுவதில்லை என்பது சிறிய நாடுகளின் புகாராக இருந்தது. வல்லரசுகள் தமது நலன்களை சிறிய நாடுகள் மீது மிரட்டல் பாணியான உறவுநிலை வைத்திருந்த காலமாக அக்காலப்பகுதி இருந்ததாகவும் கூறப்பட்டது. 

    ஈராக்கிய ஆப்கனிஸ்தானிய படையெடுப்புகளில் மேலைநாடுகள் எதிர்பார்த்த பலாபலன் கிடைக்காத அதே காலப்பகுதியில் சீன பொருளாதார வளர்ச்சி நீண்ட காலத்திற்கு மேலைத்தேயத்தை பாதிக்ககூடிய வளர்ச்சிநிலையை எட்டியது. கடந்த கட்டுரையில் பார்த்தது போல அமெரிக்க பொருளாதார மந்த நிலையும் புதிய தொலைத்தொடர்பு வளர்ச்சியும் இதனால் உற்பத்தி சந்தையில் புதிய வல்லரசகளின் வருகையும் பன்முகப்படுத்தப்பட்ட மைய உலக ஒழுங்குகளை உருவாக்கி உள்ளது. சிறிய அரசகளிற்கு இத்தகைய தன்மை பதிய தெம்பை கொடுத்துள்ளது. இதன் மறுபுறத்தில் வல்லரசுகள் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் நசக்கப்பட்ட தேசியங்களின் பிரதி நிதிகளாக தேற்றமளிக்க முனைகின்றன. 

    தேசியங்களின் நலன்களில் எந்த ஆர்வமும் காட்டாத மேலைத்தேய வல்லரசகள் வெறும் அரசுகள் மீதான அழுத்த அரசியலையே நடாத்தி வருகின்றன. தேசியங்களை பிரதி நித்துவப்படுத்தும் பாங்கில் வல்லரசுகள் செயற்படும் போது தமது சட்ட அங்கீகார நிலைமைகளை பெற்று கொள்ளும் சந்தர்ப்பத்தை தேசியங்கள் தவறவிட முடியாது. முக்கியமாக திண்ணிய மனதுடன் சதந்திரமான வாழ்வை நாடிநிற்கும் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு குறிப்பாக இது சிறந்த சந்தர்ப்பமாகும். பொது இராசதந்திரம் என்பது அத்துறையின் பண்பாட்டுக்கமைய அரசுகள் சார்ந்தது என்றும் அரசகளின் வெளியுறவுக்கொள்கை உடன் தொடர்புடையதும் என்ற கருத்தே உள்ளது.. உலக மயமாக்கப்பட்ட அரசியல், பொது இராசதந்திரத்தில் புதிய தேசியம் சார்ந்த சமுக செயற்பாட்டாளர்களின் இராசதந்திரதுறை நோக்கிய நகர்வுக்கு உந்து சக்தியாக அமைந்து வருகிறது. 

    உலக அரங்கில் சமுக செயற்பாட்டாளர்கள் தமது செல்வாக்கையும் சக்தியையும் இராசதந்திர வலை கட்டமைப்புகளை முன்னேற்றகரமாகவும் நம்பிக்கைக்கு உரிய முறையிலும் உருவாக்கி வருவது அரசுசார் இராசதந்திர நடவடிக்கைகளுக்கு தொந்தரவளிப்பதாக உள்ளது. இதனை கடுதாசி இராசதந்திரமாக பார்க்கப்பட்டபோதும் அரச இராசதந்திர நடவடிக்கைகளுக்கு எதிரான சட்ட அங்கீகாரத்தை பெற்று கொள்ளும் புதிய பரிமாணத்தை தேசியங்கள் இராசதந்திர துறையில் உருவாக்கி வருகிறன என்பது இத்துறைசார் ஆய்வாளர்களின் கருத்தாக அமைகிறது. இன்று பொது இராசதந்திரத்தில் சமூக செயற்பாட்டாளர்களின் ஆளுமை அரச பிரதி நிதிகளின் செயற்பாட்டை சிறுமைப்படுத்திவிடும் பொழுது அரச இராசதந்திரிகள் சமூக செயற்பாட்டாளர்களை இராசதந்திர தீவிரவாதிகள் எனும் புதிய பதம் கொண்டு அழைக்க முற்படுவதையும் காண கூடியதாக உள்ளது. 

    ஆகவே சமூக செயற்பாட்டாளர்கள் மிக முக்கியமான இரண்டு விடயங்களை தமது கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியவர்களாக உள்ளனர் ஒன்று சட்ட அங்கீகாரம் இரண்டாவது காத்திரமான கருத்தியல் மற்றங்களை ஏற்படுத்தகூடிய தன்மை, இந்த இரண்டு விடயங்களும் சமூக செயற்பாட்டு இராசதந்திரிகளை தமது சமூகம் சார்ந்தவர்களின் நியாயத்தை பாதுகாப்பதுடன் அனைத்துலகின் முன்னால் கொண்டு செல்லுதலுக்காகவும், அனைத்துலக கருத்துகள் கொள்கைகள் பார்வைகள் ஆகியவற்றை தமது சமூகத்தில் தெளிவுக்குள்ளாக்குதல் ஆகிய இரு தொழிற்பாடுகளுக்காகவும் தேவையானதாக ஆக்கியுள்ளது. ஒரு பண்பாட்டு பிரதேசத்தை தமக்காககொண்டு ஒரே மொழியை தமதாக கொண்டுள்ள அரச அல்லாத தேசியங்களுக்கு பல்வேறு இடங்களில் பேரம் பேசும் பலம் அதிகமாக உள்ளதாக இத்துறை குறித்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

    அதேவேளை செயற்பாட்டாளர்களிடையே ஆன கருத்து முரண்பாடுகளும் தீர்மானங்களை நிறுவ முடியாத தன்மையும், நிரந்தர பிரதிநிதிகளால் கையாளப்படாத கொள்கை கருத்துகளாலும் பலவீனங்கள் உருவாகுவதாகவும் கருதப்படுகிறது. இந்த வகையிலே ஒரு அரசு அல்லாத தேசியம் ஒரு பிராந்தியத்தை தனது பலத்தின் அடிப்படையில் கட்டுக்குள் வைத்து ஆட்சி செய்யும் அரசுபோல் செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது ஏனெனில் தம்மையும் தாம் சார்ந்த மக்களையும் எதிரிகளின் ஆட்சிப்பலம், இராசதந்திர சூழ்ச்சி ஆகிவற்றிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு தமக்கு சட்ட அங்கீகாரம் பெற்று கொள்ள விளையும் தேசிய செயற்பாட்டாளர்களிடம் தன்னிச்சையாக வந்து சேர்கிறது. 

    இப்பொழுது… சில இந்திய ஆய்வாளர்களின் கட்டுரைகளுக்கு இணங்க ஐக்கிய அமெரிக்கா சிறீலங்காவில் இராணுவ தள நிலைகளை உருவாக்கவதற்கு ஏற்ப இடம் ஒதுக்கி தரும்படியான வேண்டுகோளை விடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.. அமெரிக்காவின் 'ஆசியா நோக்கிய திருப்பம்' என்ற கொள்கைக்கு இணங்க அமெரிக்க கடற்படையில் அறுபது சதவிகிதமான பாதுகாப்பு சொத்துகளை 2020ம் ஆண்டளவில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நிலை கொள்ள வைக்க தீர் மானித்திருப்பதாக பென்ரகன் அறிவுறுத்தி உள்ளது.  
    ஆமெரிக்காவின் இராணுவ தளபாட நிலைகளுக்கான வேண்டுகோள் வல்லரசுகளுடனான பேரம் பேசுதலிலேயே தனது பௌத்த சிங்கள அபிலாசைகளை தீர்த்துக்கொள்ளும் போக்குடைய சிறீலங்கா அரசும் பௌத்த சிங்கள இனவாதத்திலேயே அரசியல் செய்யும் அரச தலைவர்களும், தற்பொழுது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தமிழ் புலம்பெயர் சமுதாயத்தின் மீது நிச்சயம் திருப்பிவிடமுனைவார்கள். அப்படியான நிலை ஏற்படுமிடத்து. புலம் பெயர் தமிழர்கள் எதிர்பார்த்த புலம் பெயர் மக்களுக்கான முள்ளிவாய்கால் வெகு தூரத்தில் இல்லை.

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 02 Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top