மாவை MPக்கு திறந்த மடல்! – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்! - TK Copy மாவை MPக்கு திறந்த மடல்! – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்! - TK Copy

  • Latest News

    மாவை MPக்கு திறந்த மடல்! – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்!

    “கடந்த தேர்தல்களில் மக்களின் மனங்களை வென்று பெரிய
    வெற்றியீட்டிய நாம் மக்களின் மனங்களை இப்போதுவெல்லத் தவறி பதவிகளுக்காக எங்களுள் மோதிக்கொண்டிருக்கிறோம். சிலர் வேறு கட்சிகளின் தூண்டுகளின் பேரில்கட்சிக்குள் குழப்பங்களை விளைவித்து வருகின்றனர்”. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரில் ஒருவரிடம் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா சுன்னாகத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பின் போது வெளியிட்ட கருத்து.

     நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களே! 

    தாங்கள் இளம் வயதிலிருந்தே ஒரு தீவிர தமிழ் உணர்வாளராகவும், பல போராட்டங்களில் நேரடியாக இறங்கிப் பல இன்னல்களைச் சந்தித்தவர் என்ற வகையிலும், ஒரு கடத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என எதிரிகளால் இலக்குவைக்கப்பட்டவர் என்ற வகையிலும் நாங்கள் உங்களை மதிக்கிறோம்! மனமாரப் போற்றுகிறோம். ஆனால் தங்கள் அண்மைக்கால நடைமுறைகள் தங்கள் கடந்தகாலத்தை மாசுபடுத்தும் வகையிலும் தங்கள் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைச் சிதைக்கும் வகையிலும் அமைத்துள்ளமை மனவருத்தத்துக்குரியது என்பதுடன் மன்னிக்கும் வகையிலும் அமையாதவை என்பதையும் நாம் தங்களுக்குச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. 

    எந்த ஒரு கட்சியிலும் ஜனநாயக மத்தியஸ்துவம் என்பது முக்கியமானது. எந்த ஒரு முடிவும் ஜனநாயக ரீதியாக விவாதித்தே எடுக்கப்படவேண்டும். அவசர சந்தர்ப்பத்தில் சில தலைமைகளால் எடுக்கப்படும் முடிவுகள் பின்பு ஜனநாயக முறையில் விவாதிக்கப்பட்டு சரி, பிழைகள் அலசி ஆராயப்பட்டு தேவை ஏற்படின் அவை திருத்தப்பட வேண்டும். இதுவே ஒரு கட்சியின் திடமான கொள்கை உறுதிப்பாட்டையும் ஐக்கியத்தையும் கட்டிக்காக்கும் ஒரே வழிமுறையாகும். ஆனால் மத்தியத்துவம் இல்லாத ஜனநாயகம் குழப்பத்திலேயே போய் முடியும். 

    அதே வேளையில் ஜனநாயகம் இல்லாத மத்தியத்துவம் சர்வாதிகாரத்துக்கே இட்டுச்செல்லும். தங்கள் உரையில் பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாடு என்ற வார்த்தை கட்டுப்பாடு என்பதை ஜனநாயகம் இல்லாத மத்தியத்துவம் என்று அர்த்தப்படுமளவுக்கு உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். திரு. இரா.சம்பந்தன், திரு.எம்.ஏ.சுமந்திரன், திரு.சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகளே கட்சியின் கொள்கை எனவும் அவர்கள் கீறும் கோட்டைத் தாண்டுபவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிக் குழபங்களை விளைவிப்பவர்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒரு கருத்தை நிலைபெறச் செய்வதில் தாங்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறீர்கள் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியும். 

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதை நான்குவருடங்களாக இழுத்தடிப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியை முதன்மைப்படுத்துவதன் மூலம் அதிகாரங்களை ஒரு சிலர் கைகளில் குவிப்பது போன்ற சில விடயங்கள் மேற்படி நோக்கத்தை நிறைவேற்றுவதின் முயற்சி வெளிப்பாடாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற பெயருக்கு உள்ள சக்தியை வைத்துக்கொண்டு சவாரி செய்து அதன் ஊடாக அரசியல் செய்ய முற்படுவதை உங்களில் யாராலாவது மறுக்க முடியுமா? தற்போது கூட பதிவு செய்ய முனைவதாக எடுக்கப்படும் முயற்சி கூட அந்தப் பெயரை வேறு யாருக்கும் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் எச்சரிக்கைவிடுத்ததன் பலன் என்பது பலருக்கும் தெரியவந்திருக்கிறது. 

    உங்களை சந்திக்கும் நபர்களிடம் தமிழரசுக்கட்சி தனித்து தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறது என்று தெரிவிக்கும் நீங்கள், அதனை ஒரு முறையேனும் துணிந்து முயன்று பார்க்கலாமே? மற்றைய கட்சிகள் தனித்து நின்று வெல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பும் நீங்களும் உங்கள் சகாக்களும் அதே கேள்வியை உங்கள் மத்தியிலும் கேட்டுப்பார்க்கலாமே? இரா.சம்பந்தனாக இருக்கலாம் அல்லது சி.வி.விக்னேஸ்வரானாக இருக்கலாம் முடிந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கைவிடுகிறோம் என்று பகிரங்கமாக அறிவித்து உங்கள் அரசியல் பலத்தினை மக்கள் வாக்குகள் மூலம் நிரூபித்துக்காட்டலாமே? 

    பதவிகளுக்காகச் சண்டையிடுவது, வேறு கட்சிகளின் தூண்டுதலால் குழப்பங்களை விளைவிப்பது போன்ற தங்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எவர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுவருகின்றன என்பதை சாதாரண அரசியல் அறிவுள்ளவர்களே புரிந்துகொள்ள முடியும். இப்படியான வஞ்சகத்தனமான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தமிழ்மக்களின் பலத்தினைப் பிளவு படுத்திப் பலவீனப்படுத்தி விடும் என்பதை அரசியல் அனுபவம் வாய்ந்த உங்களால் அறிய முடியாததல்ல. 

    உங்களைப் பொறுத்தவரையில் உங்கள் கட்சியே ஆதிக்கம் செலுத்தவேண்டும், உங்கள் கட்சியில் இருக்கும் சம்பந்தன் முதல் சுமந்திரன் வரையானோர் ஆயுதப் போராட்டங்களை விமர்சிக்கவேண்டும் ஆனால் ஆயுதப் போராட்டத்தினால் போடப்பட்ட பிச்சைப்பாத்திரமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு ஒற்றைச் சொல்லை வைத்து பிழைப்பு நடத்துவதையும் கைவிடவும் முடியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இன்று தமிழ் மக்களின் பலமாக தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கணிக்கப்படுகிறது என்பதே மறுக்கப்பட முடியாத உண்மை. 

    எனவே இதைப் பிளவுபடுத்துவது மஹிந்த ராஜபக்சவின் நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய விடயமாக விளங்குகிறது. அதே சமயம் இது விடுதலைப்புலிகளால் வலுப்படுத்தப்பட்டமையால் இதைச் சிதைத்துவிட இந்திய உளவு நிறுவனமும் பல வழிகளில் முயன்றுவருகிறது. அவர்களின் அந்த நோக்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில தலைமை உறுப்பினர்கள் நிறைவேற்ற முயல்கிறார்களோ என்ற பலத்த சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. தற்போதைய நிலையில் பதவிக்காக மோதிக்கொள்வதாக யார் செயற்படுகிறார்கள்? என்ற கேள்வியை எழுப்பினால் அதுவும் உங்கள் கட்சியினை நோக்கியே பதிலாக அமைகிறது. 

    குறிப்பாக வடக்கு மாகாணத்திற்கான தேர்தலுக்கு முன்பாக பிரதான வேட்பாளர் நியமனத்திற்காக உங்களுக்காக போராடிய ஏனைய கட்சியின் பிரதிநிதிகளை நீங்களே இறுதியில் கை கழுவிவிட்ட பரிதாபத்தை அவர்கள் மறந்திருக்கமாட்டார்கள். அதேவேளை தற்போதைய தவிசாளரும் உங்கள் தமிழசுக்கட்சியின் முக்கியஸ்தருமான சி.வி.கே.சிவஞானம் போர்க்கொடி தூக்கியிருந்த நிலையில் இன்றுவரையில் உங்கள் நம்பிக்கைக்குரிய நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கட்டுப்பட மறுப்பதுடன் தான் நினைப்பது போல நடந்துவருவதாக நம்பரமாக தெரியவருகிறதே? 

    இதற்கு பதில் என்ன என்பதை நீங்கள் தெளிவுறுத்தலாமே? ஆனால் உங்களைப் பொறுத்தவரையில், ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் அதற்காக கொடுக்கப்பட்டவிலைகளுக்காக இன்றுவரை துணிந்து குரல்கொடுப்பவர்கள் வாய் திறக்கக்கூடாது, அவ்வாறு அவர்கள் மௌனமாக இருக்காது எமது உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் அவர்களை விமர்சித்து இம்சித்து ஒதுக்குவதன் மூலம் எதனைச் சாதித்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்? சிங்கள அரசாங்கத்துக்கும் உங்களுக்கும் ஒரே ஒற்றுமை உள்ளதை சுட்டிக்காட்டலாம். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் உண்மையைப் பேசுபவர்கள், நீதிக்காக குரல்கொடுப்பவர்கள், அரசாங்கத்தின் தவறுகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் அனைவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக முத்திரைகுத்தி அதிலிருந்து மீள்வதற்கு முற்படுவது, விடுதலைப்புலிகள் பலமாக இருந்தகாலம் தொடக்கம் இன்றுவரை அதனை அரசு தமது எழுதப்படாத விதியாகவே கைக்கொண்டுவருகிறது. 

    அரசாங்கத்தின் விசுவாசிகளாக விளங்கிவருகின்ற கூட்டமைப்பின் தலைமைப்பீடமும் அதேபாணியிலான நடவடிக்கையினையே முன்னெடுத்துவருகிறது என்பதையே உங்களின் உரை காட்டி நிற்கிறது. “சிலர் வேறுகட்சிகளின் தூண்டுகளின் பேரில் கட்சிக்குள் குழப்பங்களை விளைவித்து வருகின்றனர்”. இதன் சாராம்சம் என்ன என்பதை பகிரங்கப்படுத்த முடியுமா? உங்களைப் பொறுத்தவரையில் அனந்தி சசிதரனை அவருடைய அரசியல் முன்னேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றீர்கள். திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் அனந்தியை சுமந்திரன் வஞ்சித்ததை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட முடியும். 

    குறிப்பாக அந்த இடத்தில் சுமந்திரன் ஒரு பெரீய… கதை சொல்லி அங்கிருந்தவர்களை ஏமாற்றியிருந்ததை நீங்கள் நேரடியாக பார்த்திருந்தீர்கள் தானே? அந்தச் சம்பவத்தை மீளவும் நினைவுபடுத்துகிறோம், அவருடைய கதைச் சுருக்கம் இதுதான், “அனந்தி வெளிநாட்டுத் தூதர்களுக்கு கருத்துச் சொல்வதற்கு நான் தடை விதிக்கவில்லை. ஆனால் அவர்கள் (வெளிநாட்டுப் பிரதிநிதிகள்) என்னிடம் கோரினார்கள், அந்தப் பெண் (அனந்தி) கதைக்கும் விடயங்களை செவிமடுத்து தன் (சுமந்திரன்) ஊடாக தமக்கு தெரிவிக்கும்படி அது தான் நடந்தது”, இந்த இடத்தில் சுமந்திரன் அனந்தியை தான் கட்டுப்படுத்தியதை தந்திரமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். 

    அவர் கூறியதை நம்பி ஏமாந்த நீங்கள் உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் வாயடைத்து நின்றிருந்ததுடன் சுமந்திரன் கூறியதை எந்தக் கேள்வியும் இன்றி ஏற்றுக்கொண்டுமிருந்தனர். அனந்தி தெரிவிக்கும் கருத்துக்களை செவிமடுப்பதற்கு பிரநிதிகள் தயார் நிலையில் இருந்தார்கள். மொழிப் பிரச்சினை இருந்தால் அதனை மொழி பெயர்ப்பதற்கும் மொழிபெயர்ப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆக, அனந்தியின் கருத்துக்களை தணிக்கை செய்வதற்கு சுமந்திரனுக்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அனுமதி கொடுப்பதற்கான எந்தத் தேவையும் இருந்திருக்காது என்பது வெளிப்படை. 

     ஆக, அனந்தியின் வளர்ச்சியை மக்கள் மத்தியிலிருந்து குறைக்க முடியாது என்ற ஒரே நோக்கத்துக்காக அனந்தியை த.தே.ம.முன்னணியுடன் கோர்த்துக் கதைவிடுவதற்கு மூத்த அரசியல் வாதிகளாகச் சொல்லிக்கொள்கின்ற தமிழரசுக்கட்சியினர் தீவிரம் காட்டிவருகின்றனர். இதனையே திருகோணமலைச் சம்பவமும் எடுத்துக்காட்டியிருந்தது. அந்தக் கூட்டத்தில் அனந்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றிய போது அதனை இடைமறித்த சுமந்திரன் ‘கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுதித் தந்த அறிக்கையை வாசிக்கிறாயா?‘ என்று கேட்டு இம்சித்ததை நீங்களும் பார்த்துக்கொண்டு தானே இருந்தீர்கள்? கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒருவிடயத்தினை எழுதிக்கொடுத்திருந்தாலும் அதனை அனந்தி வாசித்திருந்தாலும் அதனை தவறென்று சொல்வதற்கான எந்த அடிப்படைத் தகுதியும் சுமந்திரனிடம் இல்லை. 

    கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈழவிடுதலைப் போராட்டத்துக்காக தனது தந்தையின் உயிரையே பறிகொடுத்தவர். ஈழமண்ணில் இன்னல் சுமந்த மக்கள் ஒவ்வொருவருடைய வலியினையும் நேரடியாக உணர்ந்துகொள்ளும் அறிவும் அனுபவமும் அவரிடம் உள்ளது. அவரை மஹிந்தராஜபக்ஷவோ, வாசுதேவ நாணயக்காரவோ அரசியலில் ஈடுபடுத்தவில்லை. இதனிடையே அனந்திக்கு ஆலோசனை வழங்குவதற்கோ, அவருடைய அரசியல் தொடர்பில் சிந்திப்பதற்கோ பெருமளவான புத்திஜீவிகளும், துறைசார்ந்தோரும் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். 

    அதேபோல இறுதிப்போரில் நிகழ்ந்த அவலங்கள் தொடர்பில் கதைப்பதற்கான அனைத்து தகுதியும் பெற்றவர் அனந்தி. ஒரு பெண் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான சமூக நெருக்கடிகளையும் எதிர்கொண்டவர் அனந்தி. முள்ளிவாய்க்கால் வரையில் அவர் அனைத்து நெருக்கடிகளையும் கடந்தே கரை சேர்ந்தார். ஆக, சுமந்திரன் அனந்தியை கொச்சைப்படுத்திவரும் நிலையில் ஈழவிடுதலைப் போராட்டம் தொடங்குவதற்கு தூண்டிய அரசியல் தலைவர்களுக்கு அருகிருந்தவரான மாவை அவர்களே, நீங்கள் எதற்காக தற்போது இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான அரசியல் நகர்வினை முன்னெடுக்க முற்படுகிறீர்கள்? கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் செயலென்றால் சிங்கள அரசின் அநீதிகளை மறைப்பது தான் கட்சியின் கட்டுப்பாடா? மாகாண சபை முன்றலில் அனந்தி, சிவாஜிலிங்கம் ஆகியோர் சுடரேற்றினார்கள் என்பதை அரச சார்பு தொலைக்காட்சியில் சி.வீ.கே. சிவஞானம் விமர்சித்திருந்தாரே?, 

    அனந்தி, சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி குழப்பங்களை விளைவிக்கின்றனர் எனத் தெரிவித்தாரே, அதேவேளை கண்துடைப்புக்காக பின்னர் மாகாணசபை வளாகத்தில் சுடரேற்றப்பட்டபோது தான் தவிசாளர் எனத் தெரிவித்துவிட்டு சுடரேற்றப் போவதில்லை என ஒதுங்கிக்கொண்டு டக்ளஸ் தேவானந்தாவின் நெருக்கத்துக்கும் அபிமானத்துக்குமுரியவரான சி.வீ.கே.சிவஞானத்துக்கு வாக்களித்தது சிங்கள மக்களா? அவர் மீது உங்கள் நடவடிக்கை என்ன? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சுடரேற்ற மறுத்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனீஸ்வரன் மற்றும் சி.வீ.கே. சிவஞானம் ஆகியோருக்கு எதிரான உங்கள் நடவடிக்கை என்ன? அல்லது அவர்களும் வேறு கட்சியின் தூண்டுதல்களினால் தான் அவ்வாறு நடந்துகொண்டார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? 

     மதிப்புக்குரிய மாவை சேனாதிராஜா அவர்களே? 

     உங்களுக்கென ஒரு பெருமை மிக்க வரலாறு உண்டு. இதில் சம்பந்தனும் அவரால் வலிந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரும் செல்லும் சரணாகதி பாதையில் நீங்களும் போய் தமிழ் மக்களின் நம்பிக்கையையும் அவர்களின் கனவுகளையும் சிதைக்க முற்படவேண்டாம் என்று அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தலைமை அது என்றும் தமிழ் மக்களின் தலைமையாக இருக்கவேண்டுமேயொழிய சுகபோகங்களுக்காக விலை போகும் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிவிடக்கூடாது. 

     -தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்-
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: மாவை MPக்கு திறந்த மடல்! – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்! Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top