ரூபாய் துண்டு விழுந்துள்ளது. அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான மானியங்கள் அடங்கலாக மொத்த வருமானம் 1,689 பில்லியன் ரூபாவாகும். மொத்த செலவு 2,210 பில்லியன் ரூபாவாகும். இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பான சுருக்கமான விளக்கங்களை முதலிலும் இதன் கீழே வரவு செலவுத்திட்டம் 2015 இன்முழுமையான விபரங்களையும் இணைத்துள்ளோம்.
தனியார் ஊழியர்களின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் சம்பளம் எடுப்பவர்களின் மாதாந்த சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்குமாறு யோசனை கூறப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும், விசேட நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் என்று வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
விமான நிலையப் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திகளுக்காக 2015 - 2017ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 17 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும், விசேட நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களில் முக்கியமான சில
பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகஸ்தர்கள், வைத்தியர்கள் மற்றும் நீதிச்சேவை ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவு அதிகரிக்கப்படுகிறது.
வேலை வழங்குவோரினால் வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.
அக்ரஹார காப்புறுதிக் கொடுப்பனவு ரூ. 500,000.அதிகரித்துள்ளது.
அரச ஊழியர்களுக்காக ஆகக்குறைந்த அடிப்படை சம்பளம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2,200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் மற்றும் காவல்துறை சேவையில் பிள்ளைகள் உள்ள பெற்றோருக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 1,000 ரூபாய் எதிர்வரும் 2015 இலிருந்து வழங்கப்படுகிறது.
ஹோட்டல் மற்றும் சிறு, நடுத்தர கைத்தொழில்களுக்கான மின்சாரக்கட்டணம் 25 சதவீதத்தால் குறைப்படுகிறது.
முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் காப்புறுதித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 3000 ரூபாய் வழங்கப்படவுள்ளதுடன், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவாக மாதாந்தம் 750 ரூபாய் வழங்கப்படும்
முதியோர்களுக்கான கொடுப்பனவு 1,000 ரூபாயினால் அதிகரிக்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்வோருக்கு விசேட ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சுயதொழிலாளர்கள் மற்றும் வீதியோர வியபாரிகளுக்கு கடன்வசதி வழங்கப்படும்.
பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சினையை தீர்க்கும் முகமாக புதிய முறையிலான பாடசாலை மட்ட ஆசிரியர் நியமனத்திட்டம் முன்வைக்கப்படும்.
குழந்தைகளுக்கான பால்மா இறக்குமதி மீதான வரி நீக்கப்படுகிறது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் பிரிவு நிறுவப்படுகிறது.
ஊடகவியலாளருக்கு கடன் திட்டம் விரிவாக்கப்படவுள்ளதுடன், சமூர்த்தி பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
- குறைந்த வருமானமுள்ள குடும்பங்களிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லமுடியாத நிலையிலுள்ள மாணவர்களுக்கு 50,000 புலமைப்பரிசில்கள். ஒவ்வொருவருக்கும் 3,000 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
ஆசிரிய உதவியாளர்களுக்கு 9,500 ரூபாய் மாதாந்தப்படி வழங்கப்படவுள்ளது.
மஹாபொல, 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மஹாபொல புலமைப்பரிசில் 4000 ரூபாவினாலும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் 1500 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்த பெண்களினதும் பிள்ளைகளினதும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
பசும்பால் லீற்றருக்கான உத்தரவாத விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்படுவதுடன் யோகட் ஆகியவற்றின் விலை குறைக்கப்படுகிறது.
முழுமையான விபரம்.
1.1. மஹிந்த சிந்தனை அபிவிருத்திக்கான தேசிய தூரநோக்கு வினால் வழிநடத்தப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பத்தாவது வரவு செலவுத் திட்டத்தினை இந்த பாராளுமன்றத்திற்கு இன்று சமர்ப்பிப்பதனையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
1.2. 2005 இல் எமது அரசாங்கத்திற்கு கிடைத்தது யுத்தத்தினால் சின்னாபின்னமாக்கப்பட்ட சுனாமியினால் அழிவுற்ற பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாடே. உட்கட்டமைப்புகள் நாசமாக்கப்பட்டதனால் வளர்ந்து வரும் உலகப் பொருளாதார சூழ்நிலையில் தனித்து விடப்பட்ட பொருளாதாரத்தினைக் கொண்ட நாடொன்றாக அது காணப்பட்டது. புதிய சந்ததி ஒன்றினை கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஆற்றல்களை வழங்குவதற்கு முடியுமான கல்வி காணப்படவில்லை.
சிறந்த வாழ்க்கையினை நாடி உயர் தொழில் புரிநர்கள் வெளிநாடுகளுக்கு சென்றதனால் மூளைசாலிகளின் வெளியேற்றத்தினை நாம் அவதானித்தோம். பல வருடங்களாக 50,000 இற்கு அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பினை எதிர்பார்த்தவர்களாக காத்திருந்தனர். அரசாங்க ஊழியர்கள் இழந்த ஓய்வூதிய உரிமைகளையும் சிறந்த சம்பளங்களையும் பெற்றுக்கொள்வதற்காக எதிர்பார்த்திருந்தனர்.
1.3. உள்நாட்டு உற்பத்திகள் காணப்படாததுடன் உணவு வழங்கல் முழுமையாக வெளிநாட்டில் தங்கியிருந்தது. நெற்காணிகள் நிரப்பப்பட்டன. சிறிய தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் முகாமை செய்து கொள்ள முடியாதளவு கடனில் சிக்கியதனால் அவற்றினை இயற்கையாகவே மூடுகின்ற நிலை ஏற்பட்டது.
1.4. 1985 இலிருந்து தொடர்ந்து வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த தனியார் மயப்படுத்தல் கொள்கைகளின் காரணமாக பெருந்தோட்டக் கைத்தொழில்கள், உராய்வு நீக்கி எண்ணெய், வாயு, உருக்கு, மட்பாண்டங்கள், ரயர், சீமெந்து, தொலைத்தொடர்பு, காப்புறுதி, விமானச் சேவைகள் உள்ளடங்கலான பெரும் எண்ணிக்கையிலான அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பெறுமதி மிக்க அரசாங்க ஆதனங்கள் இக்காலப் பகுதியில் விற்பனை செய்யப்பட்டன.
வளமிக்க புடவைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதுடன் சீனித் தொழிற்சாலைகள் செயலிழந்த போது நாடு முழுமையாக வெளிநாட்டு வழங்கல்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்கள் மயப்படுத்தல் என்ற பெயரில் பல்வேறு கம்பனிகள் உருவாக்கப்பட்ட போதிலும் இலங்கை போக்குவரத்துச் சபை மிக மோசமாக செயலிழந்து காணப்பட்டது. உள்நாட்டு நிர்மாணத்துறை என்றுமில்லாதவாறு வீழ்ச்சி அடைந்தது.
1.5. 1963 இலிருந்து காணப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்வதனை மட்டுப்படுத்தும் காணிச் சட்டங்கள் 2002 –- 2004 காலப் பகுதியில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் நீக்கப்பட்டதுடன் முறையான வரியெதுவும் செலுத்தப்படாமல் வெளிநாட்டவர்கள் காணிகளை சொந்தமாக்குவது அனுமதிக்கப்பட்டது.
நாட்டுக்கு அறிமுகம் இல்லாத தாவர வர்க்கங்களை அறிமுகம் செய்தமையினால் இயற்கை சூழலிலும் காலநிலையிலும் மோசமான தாக்கம் ஏற்பட்டது. முறையான வன சீவராசிகள் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் காணப்படாமையினால் யானை –மனித பிணக்குகள் ஏற்பட்டன. வரலாற்று புகழ் மிக்க சமய மற்றும் கலாசார தலங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. பிரிவேனா கல்வி, சுதேச மருத்துவம் மற்றும் விளையாட்டுக்கள் என்பன அரசாங்கத்தின் போதிய கவனத்தினை ஈர்த்திருக்கவில்லை.
1.6. 1977 இலிருந்து வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையானது வருடமொன்றிற்கு ஏறக்குறைய 10 சதவீதமாகக் காணப்பட்டது. இதனால் 2004 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் படுகடன் அதிகரிப்பு 102 சதவீதமாக வளர்ந்து இருந்தது. அரசாங்க வங்கிகள், புகையிரத சேவை, சுங்க திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் என்பனவும் தனியார் மயப்படுத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தன.
அக்காலத்தில் அந்நியச் செலாவணி விகிதம் வருடமொன்றிற்கு 10 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தமை பொதுவான விடயமாக காணப்பட்டது. 2005 ஆம் ஆண்டளவில் 2 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட சர்வதேச ஒதுக்கானது நாட்டின் உணவு சக்தி மற்றும் தேசியப் பாதுகாப்பு தேவைப்பாடுகளினை நிவர்த்தி செய்வதற்கு போதியதாக காணப்படவில்லை. இந்த நலிவுற்ற பொருளாதார சூழலில் அக்காலத்தில் இருந்த பிரதமரினால் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை கூட தொடர்ந்தும் மீறப்பட்டதுடன் எல்.ரீ.ரீ.ஈ. யினர் நாட்டினை மென்மேலும் அழிவுற்ற தேசமாக மாற்றியமை ஆச்சரியமான விடயமல்ல.
1.7. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அரசாங்க சேவைகளில் ஆட்சேர்ப்பு செய்யப்படாதிருந்ததனால் கல்வி, சுகாதாரம், விவசாய மற்றும் நீர்ப்பாசன அத்துடன் ஏனைய சேவைகள் முழுமையாக செயலிழந்து காணப்பட்டன. கிராமியப் பாடசாலைகள் ஆசிரியர்கள் இல்லாது காணப்பட்டதுடன் பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. வைத்தியசாலைகளில் மருத்துவர்கள், தாதிமார் மற்றும் ஏனைய அலுவலர்கள் காணப்படாமையினால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய உரிமைகள் பறிக்கப்பட்டமை அரசாங்க சேவைகளை நெறி பிரளச் செய்தது. நெற் சந்தைப்படுத்தல் சபை, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், சந்தைப்படுத்தல் திணைக்களம் என்பன மூடப்பட்டதுடன் அத்தியாவசிய அரசாங்க சேவைகளின் பொருள் வழங்கல் முகாமைத்துவத்தின் தொழிற்பாடுகள் சின்னாபின்னமாக்கப்பட்டன.
1.8. இவற்றினால் கிராமிய மக்களும் குறை வருமானம் பெறுநர்களும் பெரும் துயரத்தினை அனுபவித்தனர். சிறுவர் அபிவிருத்திக்கான முன் பள்ளி மற்றும் சிறுவர் நட்பு பாடசாலைகள் காணப்படவில்லை. மாடி வீட்டுத் தொகுதிகள் புனரமைக்கப்படாததனால் அவை உடைந்து விழும் நிலையில் காணப்பட்டன. பெரும்பாலானவர்களின் வீடமைப்பு மற்றும் துப்புரவேற்பாட்டு தேவைகள் மிகவும் கீழ் மட்டத்தில் காணப்பட்டன.
கொழும்பு நகரில் சில இடங்கள் கொலன்னாவை, ஆட்டுப்பட்டித்தெரு, பெல்லன்வில போன்ற பிரதேசங்கள் குப்பை கொட்டுகின்ற இடங்களாக மாறின. கொழும்பு நகரம் அடிக்கடி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. கிராமப் புறங்களில் மின்சாரம் காணப்படவில்லை. நகர சேரிப் புறங்களில் வாழ்பவர்கள் மற்றும் பெருந்தோட்ட ஊழியர்களில் 50000 இற்கு அதிகமான குடும்பங்கள் சிறந்த வீட்டு வசதிகளைக் கொண்டிருக்கவில்லை.
எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதம் எமக்கு மிக அருகாமையில் இருந்ததனை எம்மால் உணர முடிந்தது. வடக்கிலுள்ள பலர் இடம் பெயர்ந்து அவலங்களுக்குள்ளான நிலையில் அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தனர். அப்பிரதேசங்களைச் சேர்ந்த பிள்ளைகள் சிறுவர் போராளிகளாக மாறினர். பெருந்தோட்ட மற்றும் கிராமிய சனத்தொகையில் வறுமை நிலை 20 சதவீதத்திற்கு அதிகமாகக் காணப்பட்டதுடன் சிறுவர்கள் மிக மோசமான போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
1.9. 2014 யூன் மாதத்தில் மொனராகலையில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரான மதியுரை கூட்டத்தில் அமைச்சர் விஜித முனி சொய்சா மறைந்த பிரபல கவிஞர் சாகர பலன்சூரியவின் பின்வரும் கவிதையினை வாசித்து காட்டி எமது கிராமிய மக்கள் எதிர்நோக்கும் அவல நிலையினை சுட்டிக்காட்டினார்.
1.10. மறைந்த டி.எம். ராஜபக் ஷவை அடியொட்டி வந்த எமது மறைந்த தந்தை டி.ஏ. ராஜபக் ஷ அரச பேரவையில் இருந்த காலத்திலிருந்து கிராமிய விவசாய சமூகத்திற்காக குரல் கொடுத்ததுடன் விவசாய மற்றும் நீர்ப்பாசன செயற்பாடுகளுக்கு நீங்களும் முக்கியத்துவம் வழங்கி வருகின்றீர்கள் என்ற வகையில் இந்த கவிதைகளின் பின்னணியில் பொதிந்திருக்கின்ற ஆழமான அர்த்தத்தினை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
எமது பெறுமதி மிக்க தலைவர்களான மறைந்த கலாநிதி எஸ்.ஏ. விக்கிரமசிங்க மறைந்த பிலிப் குணவர்த்தன, மறைந்த என்.எம். பெரேரா, மறைந்த கொல்வின் ஆர்.டி. சில்வா, மறைந்த சேர் வைத்தியலிங்கம் துரைசாமி, மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான், மறைந்த ரி.பி. ஜாயா, மறைந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அதேபோன்று எமது முதல் பிரதமர் மறைந்த டி.எஸ். சேனாநாயக்க போன்ற தலைவர்கள் கூட கிராமிய சமூகத்தினை வலுப்படுத்தும் விவசாயப் பொருளாதாரத்தினை ஊக்குவித்துள்ளனர்.
1.11. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த பிரதமர் எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் கொள்கையானது பஞ்ச மகா சக்திகள் என்ற சமயத் தலைவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரினை வலுவூட்டுவதாக அமைந்திருந்தது.
உலகத்தில் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் பாரிய கைத்தொழில் மயப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்ததுடன் முன்னேற்றகரமான காணி மறுசீரமைப்புக்களை முன்னெடுத்து அணி சேரா கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட மூன்றாம் உலக நாடுகளின் குரலாக செயற்பட்டதுடன் மாத்திரமல்லாமல் பெண் சமத்துவம் தொடர்பாக காணப்படும் மேலைத்தேய எண்ணக் கருவினை விட நாம் முன்னணியில் நிற்கின்றோம் என்பதனை நிரூபித்துக் காட்டினார்.
1982 இல் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்கள் மறைந்த ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் உள்நாட்டுப் பொருளாதாரம் தொடர்பான சுதந்திரக் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டிற்கு அங்கீகாரம் வழங்கினர். அத்தகைய பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட எமது சிறுவர்களுக்கான நவீன பொருளாதாரம் ஒன்றினை கட்டியெழுப்புவது எமது பொறுப்பாக காணப்படுகின்றது.
1.12. 2005 இல் எமது அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த எதிர்பார்க்கையானது பயங்கரவாதத்தினை வெற்றி கொள்வதும் ஜனநாயகத்தை மீள பெறுவதுமாக காணப்பட்டது. இரண்டாவது எமது மக்களின் சுபீட்சத்தினை உறுதிப்படுத்துவதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகளில் அபிவிருத்தியினை பிரயோகிப்பதற்கான சரியான இடமொன்றினை பெற்றுக் கொள்வதாக காணப்பட்டது. உயர்ந்த பொருளாதாரமொன்றினை உருவாக்குவதற்கும் மனித வளங்களை திருப்திகரமான முறையில் எமது சிறுவர்களின் நீண்ட கால எதிர்பார்க்கைகளை நிறைவேற்றுவதாகவும் காணப்பட்டது.
1.13. அது தான் மஹிந்த சிந்தனை. புதியதொரு இலங்கைக்கான தூர நோக்கு என்பதாகும். அது நகர வசதிகளை கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் அதேவேளை கிராமியப் பெறுமானங்களை நகர வாழ்க்கைக்கு எடுத்துச் செல்வதனையும் இலக்காகக் கொண்டுள்ளது. பல்வேறுபட்ட அழுத்தங்கள் காணப்பட்ட போதிலும் அவற்றினை நாம் எதிர்கொண்டது உயர்ந்த குறிக்கோள்களுடனாகும். எமக்கு முடியுமானவற்றிலிருந்து நாம் அதனை ஆரம்பிக்கும்போது அது ஒருபோதும் தோல்வியடைய மாட்டாது என நம்பினோம்.
1.14 அதனால் தான் கொடூர எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதத்தினை எம்மால் வெற்றி கொள்ள முடிந்தது. அதனால் தான் உட்கட்டமைப்பு அபிவிருத்தி முன்னெடுப்புகளை துரிதமாக மேற்கொள்வதற்கும் இயலுமாக இருந்தது. அதன் அடிப்படையில் எமது சிறுவர்களுக்கு புதிய நம்பிக்கையினை உருவாக்கும் வகையிலும் எமது மக்களுக்கான வாழ்வாதார அபிவிருத்தியினை விரிவாக்குவதற்கும் எமது பொருளாதாரத்தினை பிராந்தியத்தில் முன்னணியில் திகழும் நாடாக மாற்றுவதற்கும் முடியுமாக இருந்தது.
02. முன்னேற்ற மீளாய்வு: 2006 – 2014
2.1. எமது பத்து வருட பயணமானது உண்மையில் ஒரு முன்னேற்றகரமான பயணமாகும். பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருந்த பிரதேசங்கள் தற்பொழுது தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களினால் சனநாயகத்தினையும் சுதந்திரத்தினையும் அனுபவிக்கின்றன.
சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று வீடு திரும்புகின்ற பொழுது எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளின் கைகளில் அகப்பட்டு இறுதியில் சிறுவர் போராளிகளாக மாறி விடுவார்களா என்ற பயம் இல்லாது போயுள்ளது. இப்பிரதேசங்களில் தாய், சேய் இறப்பு வீதங்கள் பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளன. கண்ணி வெடிகள், புதைக்கப்பட்டிருந்த நிலங்கள் செழிப்பு மிக்க பசுந்தரைகளாக மாறியுள்ளதுடன் மக்களுக்கான வருமான வாய்ப்பினையும் வழங்குகின்றது. ஏறக்குறைய 30 வருடங்களாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதமாக காணப்பட்ட பாதுகாப்புச் செலவினம் தற்பொழுது 3 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதுடன் அபிவிருத்தி மற்றும் அரசாங்க சேவைகளுக்கு செலவிடுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
2.2 இந்த மாற்றத்தினை நாம் அடைந்து கொண்டது அனைத்து தரப்பினரும் பங்குபற்றிய அபிவிருத்தியின் மூலமாகும். அக்காலத்தில் நகரப் புறங்களுக்கு மாத்திரம் கிடைக்கக்கூடியதாகவிருந்த மின்சாரத்தினை தற்பொழுது ஒவ்வொரு குடும்பமும் அனுபவிக்கின்றது. போக்குவரத்து துறையானது பாடசாலைகள் வைத்தியசாலைகள் சந்தைகள் மற்றும் வேலைத்தளங்கள் என்பவற்றினை இலகுவாக அடைந்து கொள்ளும் வகையில் முன்னேற்றமடைந்துள்ளது. முழு சனத்தொகையும் தொலைத்தொடர்பு வசதிகளை அனுபவிக்கின்றது. நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் சிறந்த கல்வி மற்றும் சுகாதார நலன்புரியினை வழங்கும் வகையில் தரமுயர்த்தப்பட்டுள்ளன.
புதிய தோற்றத்தில் நிர்மாணிக்கப்படும் வாராந்தச் சந்தைகள் வியாபாரச் சந்தை வசதியினை விருத்தி செய்துள்ளன. 2017 அளவில் தரமான குடிநீரினை ஒவ்வொரு வீட்டுரிமையாளரும் பெற்றுக்கொள்வதனை உறுதிப்படுத்தும் வகையில் துரிதப்படுத்தப்பட்ட குழாய் நீர் வசதிகள் விரிவாக்கப்பட்டுள்ளன. திவிநெகும, கமநெகும மற்றும் மகளிர் தொழில் முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களினூடாக கிராமிய அபிவிருத்தி உபாயங்களுக்கு பெறுமதி சேர்க்கப்படும் வகையில் அரசாங்கம் இவற்றினை மேற்கொள்கின்றது.
2.3 இந்த வரவு செலவுத்திட்டமானது ஜப்பானியப் பிரதமர் மற்றும் மக்கள் சீனக்குடியரசின் ஜனாதிபதி ஆகிய இருவரும் எமது நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டதன் பின்னராகும். பெரும்பாலான நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள், நிதி அமைச்சர்கள், சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் எமது நாட்டிற்கு இவ்வருடத்திற்குள் விஜயம் செய்துள்ளனர். இலங்கையுடன் மேற்கொள்ளும் அபிவிருத்தி பங்களிப்புக்களை உறுதிப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரும் எமது நாட்டிற்கு விஜயம் செய்தார்.
இவ்வருடத்தின் செப்டெம்பர் மாதத்தில் இரண்டு நாட்கள் ஆசியாவின் அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டினை நாம் நடத்தினோம். கடந்த வருடம் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கு பற்றிய பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் மாநாட்டினையும் நாம் நடத்தினோம். சர்வதேச உறவுகளை உயர்ந்த மட்டத்தில் பேணுகின்றளவு எமது அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை வெற்றியளித்துள்ளமை இதன் மூலம் தெளிவாகின்றது. ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையினை பயன்படுத்தி ஒரு சிலரின் ஒத்துழைப்புடன் மறைமுகமான பின்னணிகளுடன் இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகத்தினை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பொய்ப்பிரசாரங்கள் மற்றும் தவறான வழிநடத்தல்கள் எந்தளவிற்கு பிழையானவை என்பதனை எடுத்துக் காட்டுவதற்கு இது உதவியது.
2.4 எல்.ரீ.ரீ.ஈ. இனரின் பிடியிலிருந்து எமது மக்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது நாம் இன ரீதியான எந்தவொரு இராணுவ செயற்பாட்டினையும் மேற்கொள்ளவில்லை. அனைவருக்கும் சமாதானமும் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் அவர்களது வாழ்வாதாரங்களை விருத்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
வரவுசெலவுத்திட்ட வளங்களைக் கொண்டு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. போராளிகளுக்கு புனர் வாழ்வளிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது குடும்பங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3000 இற்கு அதிகமானவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சேவையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் கடின போராட்டத்திற்கு மத்தியில் பெற்றெடுக்கப்பட்ட சமாதானத்தினை வளர்த்தெடுப்பதற்கான நல்லிணக்க செயன்முறைகளினை நாம் ஆரம்பித்துள்ளோம்.
2.5 எமது நாடு பல வருடங்களாக அவசர கால ஒழுங்கு விதிகளின் கீழ் எவ்வாறு ஆளப்பட்டது என்பதனை நாம் அனைவரும் நன்கறிவோம். அவசர கால நிலைமைகள் நீக்கப்பட்டதுடன் நாடு முழுவதிலும் அரசாங்க சேவைகள் மீள அமுல்படுத்தப்பட்டு வட மாகாண சபை தேர்தல்கள் உள்ளடங்கலாக கிரமமான தேர்தல்கள் நடத்தப்பட்டதுடன் ஊடக சுதந்திரமும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி சூழலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. 1987இல் மாகாண சபைகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முதல் தடவையாக தற்பொழுது 9 மாகாண சபைகளும் செயற்பட்டு வருகின்றன.
2.6 எமது உள்நாட்டு பிரச்சினைகளை விளங்கிக் கொண்ட நிலையில் சர்வதேச சமுதாயம் வழங்கிய கூட்டு ஒத்துழைப்பினை பாராட்டும் அதேவேளை தேசியப்பாதுகாப்பு சமாதானம் மற்றும் அபிவிருத்தியில் சர்வதேச தலையீடுகள் எதுவும் இருக்கக்கூடாது என்பதனை இந்த பாராளுமன்றத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் நாம் அடிக்கடி விளக்கியுள்ளோம்.
ஜனநாயக வழிமுறையில் எமது நாட்டில் பன்முகத்தன்மையினை வெற்றிகரமாக பேணி வருவதனை உலகம் பாராட்டுதல் வேண்டும். தேர்தல்கள் மூலம் ஏற்கனவே மாகாண சபைகள் தொழிற்பட்டு வருகின்றன என்ற வகையில் இலங்கையின் பின்புலத்தில் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட குழுக்கள் பாராளுன்ற தெரிவுக் குழுவுடன் இணைந்து செயற்படுவது அவசியமாகும்.
2.7 தனியான 9 மாகாண சபைகளுக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பான அதிகாரப் பரவலாக்கலுக்கான நியாயப்படுத்தலினை என்னால் அவதானிக்க முடியாதுள்ளதுடன் இது சட்டம் மற்றும் ஒழுங்கு தேசியப்பொருளாதாரம் என்பவற்றின் சிறந்த நலனுக்கு எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதனை என்னால் அவதானிக்க முடிகின்றது.
தரத்தினை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி, சுகாதாரம், வறுமை தணிப்பு மற்றும் சமூக சேவைகள் என்பவற்றிற்கான தேசிய தராதரங்களை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. இதற்காக பிரதேச சபைகள், மாகாண சபைகளில் மக்கள் சபைகளை நாம் எவ்வாறு வடிவமைப்பது என்பதனையும் அர்த்தமுள்ள செலவு குறைந்த அரசாங்க வேலைச்சட்டகமொன்றின் ஊடாக அரசாங்கத்துடன் ஒருங்கிணைப்பினை ஏற்படுத்துவது எவ்வாறு என்பதனையும் நாம் ஆராய வேண்டியுள்ளது.
எனவே மாகாண சபைகளை எமது மக்கள் அனைவரினதும் அபிவிருத்திக்கு இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு யதார்த்த பூர்வமாக அரசியல் முன்மொழிவுகளை கண்டறிவதற்கான அனைத்து விதமான சிந்தனை ரீதியான தடைகளை விட்டும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். மிகவும் கடினமாகப் பெறப்பட்ட சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திலிருந்து நாம் நல்ல பல பயன்களையே பெற்றுக்கொள்ளும் அதேவேளை சமுதாய அரசியல் எண்ணக்கருக்களை முன் நிறுத்துவதற்குப் பதிலாக பிராந்தியத்தில் உறுதியான பொருளாதாரத்துடன் கூடிய இணைந்த சமுதாயம் ஒன்றினை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் செயற்பட வேண்டியுள்ளது.
2.8 அரசாங்கம் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்திற்காக அரிசியினை அன்பளிப்புச் செய்ததுடன் உலக சுகாதார நிறுவனத்தினூடாக ஆபிரிக்காவில் எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருத்துவ கையுறைகளையும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மக்களுக்காக மருத்துவ உதவி சூடானில் மனிதாபிமான நடவடிக்கைகளில் எமது பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்தியமை பலஸ்தீன் மக்களுக்காக வழங்கப்பட்ட 1 மில்லியன் ஐ.அ. டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவிகள் என்பவற்றினையும் அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்த வகையில் எமது நாடு மனிதாபிமான உதவிகளைப் பெறும் நாடு என்ற நிலைமையிலிருந்து மனிதாபிமான உதவிகளை வழங்குகின்ற நாடுகளின் அந்தஸ்திற்கு மாறியுள்ளது என்ற வகையில் இது பெருமைப்படக்கூடிய விடயமொன்றாகும். இவை உலகத்தில் மனிதாபிமானத்தினை ஊக்குவிப்பதற்கும் சமாதானத்தினை கட்டியெழுப்புவதற்கும் நாம் எடுத்த முயற்சிகள் என்பதுடன் உலக சமாதானத்தினை உறுதிப்படுத்துவதற்கான எமது விருப்பமுமாகும்.
2.9 எமது பாதுகாப்புப் படையினர் எமது விவசாயிகள் எமது ஊழியப்படை, வெளிநாட்டில் பணியாற்றுகின்ற எமது பெண்கள் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்கள் நாடு முழுவதிலுமுள்ள எமது ஆசிரியர்கள் எமது சுகாதாரப் பணியாளர்கள் எமது கிராமிய மட்ட அரசாங்க ஊழியர்கள் எமது சமயத் தலைவர்கள் எமது கலைஞர்கள் வளர்ந்து வரும் பொருளாதார சமுதாயம் மற்றும் சிறிய, நடுத்தர தொழில்முயற்சிகள் உலக நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் அனைவரும் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் மாத்திரமே இவை அனைத்தினையும் எம்மால் மேற்கொள்ள முடியும்.
மேலே குறிப்பிட்ட எமது அனைத்து மக்களும் உலகத்திலுள்ள முன்னேற்றமடைந்த எந்தவொரு சனநாயக நாட்டிலும் காணப்படுகின்ற நல்லாட்சியின் ஜனநாயக நிறுவன ஏற்பாட்டிற்கு பெறுமதி சேர்க்கக்கூடிய சமாதானமான தேர்தல் ஒன்றில் பங்குபற்றுவதன் மூலம் சனநாயகத்தில் கொண்டுள்ள நம்பிக்கையினை அதிகரித்தல் வேண்டும். சமாதானம் தேசிய நல்லிணக்கம் மற்றும் பயங்கரவாத யுத்தம் நிறைவடைந்ததிலிருந்து நாம் பெற்றுக்கொண்ட ஜனநாயக வழிமுறையில் தொடர்ந்து அடையப்பெற்ற பொருளாதார முன்னேற்றம் என்பவற்றினை ஊக்குவிப்பதற்கு எவ்வித நிபந்தனைகளுமற்ற வகையில் அவர்கள் வழங்கிய பங்களிப்புக்கு எமது மனப்பூர்வமான பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
2.10 நாட்டிலுள்ள மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 47 சதவீதத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மூன்று மாகாணங்களில் இவ்வருடத்தில் இடம்பெற்ற தேர்தல்களில் 54 சதவீதமானவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு வாக்களிக்கப்பட்டதாகும். எமது சிறுவர்களின் எதிர்காலத்திற்காகவும் நாடு முழுவதிலும் சமாதானம் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்பவற்றை கட்டியெழுப்புவதற்குமாக வடிவமைக்கப்பட்ட மஹிந்த சிந்தனை எதிர்காலத்திற்கான தேசிய தூர நோக்கு இல் பெரும்பாலான மக்கள் தமது நம்பிக்கையினை வைத்திருக்கின்றனர் என்ற விடயம் எமது அரசாங்கத்தினை பெரிதும் ஊக்குவிக்க கூடியதாகவிருக்கின்றது.
2.11 இந்த வரவு செலவுத்திட்டத்தினை நான் சமர்ப்பிக்கின்ற 2015 ஆம் ஆண்டின் தலா வருமானம் 4000 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது 2005 இல் காணப்பட்ட நிலையினைவிட 4 மடங்கு அதிகமானதென்பதுடன் எமது எதிர்பார்க்கைகள் ஒரு வருடம் முந்தியதாக காணப்படுகின்றது. பொருளாதாரமானது ஏறக்குறைய 8 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது. ஏற்றுமதிகள் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு ஊழியர் பெறுகைகளிலிருந்து வருமானம் மக்களின் வருமான மூலங்களை அதிகரித்துள்ளதுடன் வியாபார சமுதாயத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இவை மொ.உ. உற்பத்தியில் ஏறக்குறைய 3 சதவீத பற்றாக்குறையுடைய குறைந்த வருமான கணக்கொன்றினை உருவாக்குவதற்கு எமது வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களை ஸ்திரப்படுத்தியுள்ளன. சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டதுடன் உள்நாட்டு உற்பத்தியினை நாம் அதிகரித்துள்ளோம் என்ற வகையில் வெளிநாட்டு ஒதுக்குகள் 10 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை அண்மித்துக் காணப்படுகின்றன. 2005 இல் காணப்பட்டதை விட வரவு செலவுத்திட்டப்பற்றாக்குறையானது அரைவாசியினால் குறைவடைந்துள்ள அதேவேளை 2005 உடன் ஒப்பிடுகையில் பொதுப்படுகடன் மொ.உ. உற்பத்தியில் 30 சதவீதத்திற்கு குறைவாகக் காணப்படுகின்றது.
2.12 வர்த்தகம் மற்றும் சுற்றுலாக்களை கவரும் வகையிலும் இட அமைவின் விசேட தன்மையின் மூலம் கிடைக்கப் பெற்ற நன்மையினையும் அடிப்படையாகக் கொண்டு நாட்டின் சர்வதேச துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை சர்வதேச தரத்தில் எமது அரசாங்கம் அபிவிருத்தி செய்துள்ளது. அனைத்து பிரதான நகரங்கள் மற்றும் அபிவிருத்தி மையங்களை கைத்தொழில் விவசாய மற்றும் சுற்றுலா மையங்களுடனும் தகவல் தொழில்நுட்ப மற்றும் பல்கலைக்கழக நகரங்களுடனும் இணைக்கும் வகையில் அதிவேக பாதை வலையமைப்பினை மிகத்துரிதமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
வடக்கிற்கான அதிவேகப் பாதை மற்றும் றுவன்புர அதிவேக பாதை அத்துடன் இரத்தினபுரிக்கான சமாந்தர புதிய புகையிரதப் பாதை என்பன 2017 இல் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசியப் பெருந்தெருக்கள் பெரும்பாலானவை அடுத்த தசாப்தத்திற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு முடியுமான வகையில் புதிய கொள்ளளவுடன் முழுமையாக நவீன மயப்படுத்தப்பட்டுள்ளன. தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தை இணைக்கின்ற வடக்கு புகையிரதப் பாதை மீண்டும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கொழும்பு -மாத்தறை புகையிரதப்பாதை தரமுயர்த்தப்பட்டுள்ளது. மாத்தறை, - கதிர்காமம் புதிய புகையிரதப் பாதை நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருவதுடன் பெலியத்தை பிரிவு 2015 இன் இறுதியில் நிறைவு செய்யப்படவுள்ளது.
2.13 2005 மற்றும் 2015 ஆண்டுகளுக்கிடையில் மின் உற்பத்தி ஏறக்குறைய 5000 மெகாவோட்டாக இரட்டிப்பாக அதிகரித்துள்ளதுடன் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தில் ஏறக்குறைய 300 மெகாவோட்டினை சேமிப்பதன் மூலம் மின் ஊடுகடத்தல் நட்டங்கள் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன. மாற்று புதுப்பிக்கக்கூடிய சக்தி மூலங்களும் நாட்டில் ஏறக்குறைய 300 மெகாவோட் மின்சாரத்தினை உற்பத்தி செய்கின்றன. குறைந்த செலவினத்தில் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதை நோக்கி எம்மால் படிப்படியாக பின்பற்றப்படும் உபாயங்களின் மூலம் எமது 4.5 மில்லியன் வீட்டுப்பாவனையாளர்கள் அனைவரும் நன்மையடையும் வகையில் கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து மின்சார செலவினை 25 சதவீதத்தினால் குறைப்பதற்கு அரசாங்கத்தினால் முடியுமாக இருந்தது.
2.14 மொறகஹகந்தை, உமா ஓயா, தெதுறு ஓயா மற்றும் யான் ஓயா திசை திருப்பல் திட்டங்கள் வடக்கு, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலுள்ள வரண்ட வலயங்களுக்கு 2016ஆம் ஆண்டளவில் நீர்ப்பாசனம் செய்வதற்கு முடியுமாக இருக்கும். வெஹெரகல, றம்புக்கன் ஓயா நீர்த்தேக்கம் போன்ற பல்வேறு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய பாதுகாப்புத் தராதரங்களுடன் கூடிய பராக்கிரம சமுத்திரம், மின்னேரியா, கிரித்தலே, றிதியகம, தப்போவ, இங்கினிமிட்டிய போன்ற அனைத்து பிரதான நீர்த்தேக்கங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன. வரட்சியினை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. விவசாயம், மீன்பிடி, கால்நடை, மின் உற்பத்தி, உயிரியல் பல்வகைத்தன்மை என்பவற்றின் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு 2005 இலிருந்து இத்துறையில் செய்யப்பட்டுள்ள முதலீடானது மிகவும் அதிகமானதாகும்.
2.15 தற்பொழுது காணப்படும் மீன்பிடி துறைமுகங்களின் வசதிகளை புனரமைத்தல், சிலாபத்துறை, குருநகர், கந்தறை, களமெட்டிய புதிய மீன்பிடித்துறைமுகங்களின் புனரமைப்பு நிறைவடைந்துள்ளதுடன் வென்னப்புவ, கப்பறத்தொட்ட, தொடந்துவ, ஹிக்கடுவ மற்றும் நீர்கொழும்பு வாவி என்பவற்றில் மீன்பிடி துறைமுகம் மற்றும் நங்கூரத் தளங்களின் அபிவிருத்தி இந்நாட்டில் அடிப்படையான மீன்பிடி வளங்களை விருத்தி செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 4,374 பந்நாள் படகுகள் 24,364 தினசரி படகுகள் மற்றும் 20863 சாதாரண படகுகள் உள்ளடங்களான மீன் படகுகள் பராமரிக்கப்பட்டுள்ளதுடன் இத்தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ள 186,939 மீனவர்கள் பல்வேறுபட்ட அபிவிருத்தி உதவித்திட்டங்களின் மூலம் உதவியளிக்கப்பட்டுள்ளனர்.
2.16 அரசாங்க முதலீட்டு உபாயத்தின் அடிப்படையில் காலி, கொழும்பு, பொலனறுவை, திருகோணமலை போன்ற நகரங்களில் அரசாங்கம் நீர் வழங்கல் முறைமைகளை நிறைவு செய்துள்ளதுடன் கம்பஹா, குருநாகல், புத்தளம், மாத்தளை, அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை, கண்டி, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பிரதான நீர் வழங்கல் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சமுதாய நீர் வழங்கல் திட்டங்கள் சிறிய நகரங்கள் மற்றும் கிராமிய பிரதேசங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட சமுதாய நீர் வழங்கல் திணைக்களத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
2.17 எமது அரசாங்கம் மனித வளங்கள் அபிவிருத்திக்காக விசேட முக்கியத்துவத்தினை வழங்கியுள்ளது. உயர் கற்கைகளுக்காக புதிய பாடங்களை வழங்குவதன் மூலம் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் விரிவாக்கலுக்கான புதிய வசதிகளை விருத்தி செய்துள்ள வகையில் பல்கலைக்கழக நகரமாக்கல் முன்னெடுப்பானது முன்னேற்றகரமாக மேற்கொள்ளப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 25,000 இற்கு அதிகமானவர்களுக்கு விடுதி வசதி நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான சம்பளங்கள் மற்றும் ஆராய்ச்சி ஊக்குவிப்பு தொகைகள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன.
2.18 இளைஞர்களை இலக்காகக் கொண்ட திறன் விருத்திக்கான முன்னெடுப்புக்கள் கடந்த காலங்களில் முன்னேற்றகரமாக வளர்ச்சியடைந்து வரும் தொழில்பயிற்சி கல்வியில் பிரதான விடயமாகும். புதிய வியாபார முகாமைத்துவ பாடசாலை ஒன்றின் நிர்மாணப்பணி மற்றும் மாலபையில் அமைந்துள்ள தொழில்நுட்ப நிர்வாகம், முல்லைத்தீவில் உயர் தொழில்நுட்ப நிறுவகம், தகவல் தொழில்நுட்ப பாடசாலைகளின் விரிவாக்கம், மாலபையில் அமையப்பெறும் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி அத்துடன் தொழில்நுட்ப கல்வியினை முன்னேற்றுவதற்கான பல்வேறுபட்ட உயர் பல்கலைக்கழக கல்லூரிகளின் நிர்மாணப்பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. மீன்பிடி மற்றும் சமுத்திர வளங்கள் முகாமைத்துவம் தொடர்பான கேள்வியுடைய ஆற்றல் விருத்தி கல்வியினை முன்னெடுப்பதற்காக சமுத்திரவியல் பல்கலைக்கழகமொன்றினை தாபிப்பதற்கான ஏற்பாடுகள் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2.19 ஒவ்வொரு வருடமும் பாடசாலைகளுக்கு அனுமதி பெறும் ஏறக்குறைய 350,000 சிறுவர்களை உள்வாங்கும் வகையிலான சிறுவர் நட்பு பாடசாலை அபிவிருத்தி முன்னெடுப்பொன்றினை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. 6,500 இரண்டாம் நிலைப் பாடசாலைகளின் வசதிகள் தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன் ஏனைய அனைத்து ஆரம்ப பாடசாலைகளும் சிறுவர் நட்பு பாடசாலை, சூழல் துப்புரவேற்பாட்டு வசதிகள் மற்றும் ஆசிரியர் வசதிகள் உள்ளடங்கலாக முன்னேற்றமடையச் செய்யப்பட்டு வருகின்றன.
அனைத்து பாடசாலை செல்லும் சிறுவர்களது ஆங்கிலம், கணிதம், தகவல்தொழில் நுட்பம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதிலுமுள்ள 1000 பாடசாலைகளில் புதிய மஹிந்தோதய ஆய்வுக்கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன தூரப் பாடசாலைகளில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு குறிப்பீடு செய்யப்பட்ட பாடசாலை ஆட்சேர்ப்பு முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், கற்பித்தல் சாதனங்கள், பரீட்சைகளின் தராதரம் மற்றும் வெளிக்கள செயற்பாடுகள் என்பன சிறுவர்களின் நன்மைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2.20 இந்த முன்னெடுப்புக்களின் காரணமாக ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி, மட்டக்களப்பு, பொலன்னறுவை, பதுளை போன்ற தூர பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலை மாணவர்களின் சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைதல் விகிதம் 2005 இல் காணப்பட்ட 46.6 சதவீதத்திலிருந்து தற்பொழுது 62.4சதவீதமாக அதிகரித்துள்ளது.
இவ்வருடம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் 10 சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களில் 9 பேர் இந்நாட்டிலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் காணப்படும் ஆரம்ப பாடசாலைகளை சேர்ந்தவர்கள் என்பது எம் அனைவருக்கும் பெருமை தரும் விடயமாக இருப்பதானது கிராம பிரதேசங்களில் கல்வித்துறை மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. அறநெறிக் கல்வியினை பெறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு கடந்த வரவு செலவுத்திட்டத்தில் பிரிவெனா கல்வி மற்றும் அறநெறிப் பாடசாலைக் கல்வி என்பவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
2.21 கிராமியப் பிரதேசங்களில் 900 நனசெல நிலையங்களையும் பெருந்தோட்டப் பிரதேசங்களில் 26 பிரஜாசக்தி தொழில்நுட்ப நிலையங்களையும் உருவாக்கியதன் மூலம் கிராமிய மட்டத்தில் தகவல் தொழில்நுட்ப கல்வியினை ஊக்குவிப்பதற்காக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவு மிகவும் ஊக்கத்தினை நாம் பெற்றுள்ளோம். இது 2005 இல் கவனிப்பாரற்று இருந்த தகவல் தொழில்நுட்ப அறிவு விகிதம் தற்பொழுது 45 சதவீதமாக அதிகரிக்குமளவு பங்களிப்பு செய்தது. இலத்திரனியல் நூலக நனசெல முன்னெடுப்பு வெற்றியளித்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் 140 இற்கும் அதிகமான உலகளாவிய விண்ணப்பங்களில் உலகில் மிகவும் பிரபல்யமான மிலிந்த மற்றும் பில்கேட்ஸ் நிறுவன விருது இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
2.22 உணவு, தொழில்நுட்பம், தொற்றா நோய்கள், குறைந்த செலவின நிர்மாண தொழில்நுட்பம், புதுப்பிக்கக்கூடிய சக்தி, சுதேச மருத்துவத்துறை போன்ற துறைகளில் எமது விஞ்ஞானிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கத்தக்களவு காணப்படுகின்றன. நனோ தொழில்நுட்ப முன்னெடுப்புக்களில் தனியார் - அரசாங்க பங்குடமையானது உயர்தர விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
2.23 இலவச சுகாதார பராமரிப்பு முறையொன்றினை பேணிப்பாதுகாத்தல் மஹிந்த சிந்தனை வேலைச்சட்டகத்தில் மிகவும் முன்னுரிமை அளிக்கப்பட்ட விடயமொன்றாக காணப்படுகின்றது. தேவையான விசேட நிபுணர்கள், மருத்துவர்கள், தாதிமார்கள் மற்றும் உப மருத்துவ பதவியினர் போன்றவர்களை புதிதாக ஆட்சேர்ப்பு செய்ததுடன் அவர்களது சம்பளங்கள் மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளை திருத்தியுள்ளது. வைத்தியசாலை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு மருந்துப் பொருட்கள், அன்பியூலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான செலவு அதிகரித்துள்ளது.
மருத்துவத்துறைக்கான புதிய ஆட்சேர்ப்புக்கள் மாத்திரம் ஏறக்குறைய 50,000 ஆகும். அரசாங்கம் உள்ளூர் மருந்துப் பொருட்கள் தயாரிப்பாளர்களின் உற்பத்தி ஆற்றலினை அதிகரிப்பதற்கு அவர்களுக்கு ஊக்குவிப்பதற்கு மேலதிகமாக அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் தயாரிப்பதற்கான ஆற்றலினையும் விரிவாக்கியுள்ளது. இதனால் இலவச மருத்துவ வசதியினை வழங்குவதற்காக இதுவரை அரசாங்கம் வருடமொன்றிற்கு ரூபா 150 பில்லியனை செலவிட்டுள்ளது.
2.24 பொதுவான சிறுவர் மற்றும் இளைஞர் அபிவிருத்தி உபாயத்தில் விளையாட்டு மற்றுமொரு முன்னுரிமை அளிக்கக்கூடிய விடயமாகும். அனைத்து பாடசாலைகளிலும் விளையாட்டு ஆசிரியர்களுடன் கூடிய மைதானமொன்று இருப்பது அவசியமாகும். அவர் மாணவர்களுக்கு மத்தியில் ஆரோக்கிய மற்றும் விளையாட்டு வாழ்க்கை முறைமை விருத்தியினை ஊக்குவிப்பார்.
விளையாட்டு தற்பொழுது கல்வியின் ஒருங்கிணைந்த பகுதியென்பதுடன் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கென வெளிக்களச் செயற்பாடொன்றாகும். அரசாங்கம் பல்வேறு மாவட்டங்களில் சர்வதேச விளையாட்டரங்குகளையும் நவீன விளையாட்டு வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் நாட்டில் ஒரு சில நகரங்களில் மாத்திரம் விளையாட்டு வசதிகள் காணப்பட்டன.
2.25 எமது நாடு மிகவும் வளமிக்க கிராமிய மரபுரிமைகளை கொண்டுள்ளது. எமது மக்களின் பெரும்பாலானோர் கிராமிய வாழ்க்கை முறையில் வாழ்கின்றனர். எமது கிராமிய வாழ்க்கையில் தேசியப் பெறுமானங்களையும் உறுதியான கலாசார ஒருங்கிணைப்பினையும் மதிப்பளிக்கும் வகையில் எமது அபிவிருத்தி கொள்கைகள் கமநெகும உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் திவிநெகும வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் என்பவற்றின் மூலம் கிராமங்களை வலுவூட்டுவதனை எமது அபிவிருத்தி கொள்கைகள் மையப்படுத்தியுள்ளன.
முன்னுரிமை அடிப்படையில் கிராமிய மின் வழங்கல் நிகழ்ச்சித்திட்டம், மக நெகும கிராமிய பாதை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றின் செயற்பாடுகளினை துரிதப்படுத்தியுள்ள அதேவேளை நாடு முழுவதிலும் பரவியுள்ள அனைத்து கிராம சேவை அலுவலர் பிரிவுகளுக்கும் தொலைத்தொடர்பு வசதிகளை விரிவாக்குவதனையும் நாம் துரிதப்படுத்தியுள்ளோம்.
சிறிய நீர்ப்பாசன வசதிகள், தாய் மற்றும் சேய் பராமரிப்பு நிலையங்கள், ஆரம்ப பாடசாலைகள் என்பவற்றினை கிராமிய மட்டத்தில் நாம் விரிவுபடுத்தியுள்ளோம். குறை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மத்தியில் வாழ்வாதார முன்னெடுப்புக்களை விருத்தி செய்வதற்கு 2.5 மில்லியன் குடும்பங்களை உள்ளடக்கும் வகையில் மனைப்பொருளாதாரங்களை ஊக்குவிப்பதற்கு 6 சுற்றுக்களில் திவிநெகும உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2.26 2006 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நெற்செய்கைக்கான உரப்பசளை 50 கி.கிராம் பொதியொன்றினை ரூபா 350 இற்கும் சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு, பாசிப்பயறு, மரக்கறி மற்றும் பழங்களின் பயிர்செய்கையினை பிரசித்தப்படுத்துவதற்காக ஏனைய பயிர்களுக்கான உரப்பசளை 50 கி. கிராம் பொதியொன்று ரூபா 1,200 இற்கும் வழங்கப்பட்டதுடன் அதே போன்று குறை வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதார வாய்ப்புக்களை விரிவாக்கும் வகையில் கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கருவாடு போன்ற சிறிய கைத்தொழில் முயற்சிகளுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.
திவிநெகும சமுதாய வங்கி தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய வங்கிகளினூடாக சிறிய நிதியளிப்பு வசதிகள் விரிவாக்கப்பட்டுள்ளன. திவி நெகும மற்றும் சமுர்த்தி பயன் பெறுநர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமிய மட்டத்தில் அரசாங்க சேவைக்கு புதிய அங்கீகாரத்தினை வழங்கும் வகையில் கிராமங்களிலுள்ள வெளிக்கள ஊழியர்களுக்கு 100,000 இற்கு அதிகமான மோட்டார் சைக்கிள்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. விவசாய ஓய்வூதியத்திட்டம் மீள அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் தானிய காப்புறுதி மற்றும் வனவிலங்கு தொடர்பான அழிவுகளுக்கான நட்ட ஈடும் விரிவாக்கப்பட்டுள்ளன.
2.27 கடந்த 8 வருடங்களின்போது மோசமான நிலையில் காணப்பட்ட வீடுகள் புனரமைக்கப்பட்டதுடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காகக் கொண்டு புதிய நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டமையினாலும் குறை வருமானம் பெறுநர்களுக்கான வீடமைப்பு ஏறக்குறைய 750,000 ஆக அதிகரித்தது. மேலும் அரசாங்கம் பழைய வீடமைப்பு தொகுதிகளை முன்னேற்றகரமான பொது வசதிகளுடன் புனரமைப்பினை மேற்கொள்வதற்கு ஆரம்பித்துள்ளது. மாளிகாவத்தை, ஆட்டுப்பட்டித்தெரு, குணசிங்கபுர வீடமைப்பு திட்டங்கள் 22 வீடமைப்பு திட்டங்கள் ஏற்கனவே முழுமையாக நவீன மயப்படுத்தப்பட்டுள்ளன. சொய்சாபுர என்டர்சன் உள்ளடங்கலாக இன்னும் 23 வீடமைப்பு திட்டங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
2.28 பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தியுடன் கூடிய கிராமிய மற்றும் நகரங்களில் புதிய வசதிகள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கை ட்ரக்டர்கள், சிறிய கார்கள், நீர் பம்பிகள், மீன்பிடி படகுகள் என்பவற்றினை கொள்வனவு செய்வதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு பல்வேறுபட்ட குறை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவியாக அமைந்தது. பெரும்பாலான குறை வருமானம் பெறுநர்கள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டுள்ளனர். குறை வருமானம் பெறுநர்களுக்கு மத்தியில் வருமான வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரங்கள் என்பன வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களிடத்தில் வீழ்ச்சியினை காட்டுகின்றது.
2.29 தேசிய வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற மக்களின் எண்ணிக்கை 2012/13 இல் 8.7 சதவீதத்திலிருந்து 2006/7 இல் 15.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. கிராமிய வறுமை 15.7 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்த அதேவேளை பெருந்தோட்டத் துறையில் வறுமை 32 சதவீதத்திலிருந்து 10.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. நாளொன்றுக்கு 2 டொலருக்கு குறைவான வருமானம் பெறும் மக்கள் 28.3 சதவீதத்திலிருந்து 18.9 சதவீதமாகக் குறைவடைந்தது. 2013இல் தாய் இறப்பு விகிதம் ஒரு இலட்சம் உயிர்ப் பிறப்புகளுக்கு 12.1 இலிருந்து 7.2 ஆக குறைவடைந்தது.