எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அக்கரைப்பற்றில் காணாமல் போனார். அப்போது அந்தப் பகுதி முழுவதும் கருணாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது எனவே எனது மகனை அவர்களே கடத்தியிருக்க வேண்டும் என காணாமற் போனோர் தொடர்பான விசாரணைக் குழு முன் தந்தை ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு இன்று செட்டிக்குளம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெறுகின்றது.
இதன்போது சாட்சியமளித்த குறித்த தந்தை வவுனியா செட்டிகுளம் மினிக்பாமில் தான் வசித்து வருகிறார் என்றும் வேலை நிமித்தம் தனது மகன் அக்கரைப்பற்றில் தங்கியிருந்த சமயம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காணாமல் போனார் என்று தெரிவித்தார்.
இதன்போது "அக்கரைப்பற்று யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது" என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பினர். அதற்கு கருணா அம்மானின் கட்டுப்பாட்டில் இருந்தது என சாட்சியம் அளித்த தந்தை தெரிவித்தார்.
கருணா வடபகுதியில்தானே இருந்தார் என ஆணைக்குழு மீண்டும் கேட்க, இல்லை அவர் கிழக்கு மாகாணத்தில் இருந்தார் அம்பாறை மாவட்டத்தில் முகாம்களை அமைத்து அவர்கள் தங்கியிருந்தனர் அந்தக் காலப்பகுதியில் எனது மகன் காணாமல் போனார் என தந்தை தெரிவித்தார்.
எனவே, கருணா குழுவினரே எனது மகனைக் கடத்தியிருக்க வேண்டும் என்றார். வழமை போல அரச உதவிகள் குறித்து விசாரித்த ஆணைக்குழு மரணச் சான்றிதழ் பெறவில்லையா என்றும் கேட்டனர். இன்றைய அமர்வில் சாட்சியமளிப்பதற்கு 52 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.