இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் பதவி பறிக்கப்பட்டு, உலகக்கிண்ண அணியிலும் இடம் கிடைக்காததால் அலாஸ்டர் குக் வேதனையில் இருக்கிறார்.
ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியான சொதப்பல் காரணமாக குக் விமர்சிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் இலங்கை தொடரை இங்கிலாந்து இழந்ததற்கு பிறகு அவரது அணித்தலைவர் பதவி பறிக்கப்பட்டது.மேலும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ண தொடரில் இருந்தும் கழற்றிவிடப்பட்டார். இதனால் அவர் வருத்தத்தில் இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டதால் வருத்தமும் வெறுப்பும் அடைந்துள்ளேன்.ஜனவரி 2016 வரை இங்கிலாந்து அணி 17 டெஸ்டுகளில் ஆடவுள்ளது. இதில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடர்கள் முக்கியமானவை.
இந்தத் தொடர்களில் நன்றாக விளையாடி மீண்டும் கிரிக்கெட்டை விரும்ப ஆரம்பிப்பேன் என நினைக்கிறேன்.சிலநேரங்களில் இப்படி நடக்கும். இதிலிருந்து நாம் மீண்டுவரவேண்டும். இங்கிலாந்து அணி வீரர்களுக்கு என் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.