தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவின் பல்வேறு உயர்மட்டப் பிரமுகர்களுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்தவாரம் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.அவர் மருத்துவ சிகிச்சைக்காகவே இந்தியா சென்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், புதுடெல்லியில் இரா. சம்பந்தன் பல்வேறு உயர்மட்டப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதற்கிடையே, வரும் அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு வேட்பாளரையும் நேரடியாக ஆதரிக்காது என்றும், தொடர்ந்தும் சுதந்திரமாக இயங்கும் என்றும் நம்பப்படுகிறது .
இதற்கிடையே, அதிபர் தேர்தல் தொடர்பான தமது தெளிவான நிலைப்பாட்டை இன்று வெளியிடுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தனது ஆதரவை நாடிய வேட்பாளர்கள், தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டுக்கு சரியாகப் பணியாற்றவில்லை என்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.இரண்டு பிரதான வேட்பாளர்கள் தொடர்பாகவும் சந்தேகம் வெளியிட்டுள்ள அவர், யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் நாட்டுப்பாக பணியாற்றுவார்களா என்று தாம் சந்தேகம் கொள்வதாகவும் அவர் கூறியிருக்கிறார்.