யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நடந்தது என்ன? - TK Copy யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நடந்தது என்ன? - TK Copy

  • Latest News

    யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நடந்தது என்ன?

    யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் காலை 9.15மணியளவில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆரம்பமானது.

    இந்நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயலாளரும், அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம்  இன்றைய கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவோ, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பாகவோ பேச முடியாது என சுட்டிக்காட்டியிருந்தார்.

    அரசாங்க அதிபரின் இந்த விளக்கத்துடன் இன்றைய கூட்டம் ஆரம்பமாகிய நிலையில், ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன் தனது உரையினை நிகழ்த்தினார்.இதன்போது, இன்றேனும் இக் கூட்டம் நடை பெறுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். பல தாமதங்களின் பின்னர் இன்று எம்மால் கூட்டம் கூட முடிந்துள்ளது.


    இன்றும் எம்மிடையே எதிர்ப்பு அரசியல் கலாசாரமே மேலோங்கி நிற்பதாக உணர்கின்றேன். எமது அரசியல் பயணமானது மக்களின் குறை தீர்க்கும் பயணமாகவே அமைய வேண்டும்.அரசாங்க அமைச்சரும் நாமும் ஒன்று சேர்வது எம்முடைய தனிப்பட்ட கட்சிகளின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த அல்ல.மக்களின் பிரச்சினைகளை நாம் ஒன்று சேர்ந்தேனும் தீர்த்து வைக்கவே என்ற எண்ணம் எம் ஒவ்வொருவர் மனதிலும் மேலோங்கினால்தான் விடிவு காலம் வரும். ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் அடிப்படையில் நாங்கள் மாறுவோமா என்ற கேள்வி பூதாகரமாக எழுந்துள்ளது.

    ஆனால் எம் மனோநிலையில் மாற்றம் அவசியம் என்பதைக் கூறி வைக்கின்றேன்.மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் இருக்கும் உறவு முறை இன்னமும் சரியாக ஒழுங்கு செய்யப்படவில்லை என்பதே எனது கருத்து.எனினும் தேர்தலின் பெறுபேறுகளைப் பாதிக்கும் வண்ணம் பேச வேண்டாம் என்று தேர்தல் ஆணையாளர் விடுத்த அறிக்கைக்கு அமைவாக நான் கூறவந்த சில விடயங்களை இத் தருணத்தில் தவிர்த்துக் கொள்கின்றேன்.

    தம்மைத் தாமே தக்கவாறு பரிபாலிக்க, நிர்வகிக்க, பாதுகாக்க  மாகாணம் எத்தனிக்கும் போது அதற்குத் தடையாக நடந்து கொள்வது வருங்காலத்தில் பாரிய விளைவுகளைக் கொண்டுவரக் கூடும் என்பதையே உங்களுக்கு இத்தருணத்தில் எடுத்துக் கூற விரும்புகின்றேன்.

    அரசியல் காரணங்களுக்காக வடமாகாணத் தமிழ்ப் பேசும் மக்களாகிய நாம் ஒருவருடன் ஒருவர் முட்டி மோதி முரண்பட்டுக் கொள்வது எம்மை நாமே பலவீனப் படுத்துவதாகவே அமையும்.

    முரண்பாடுகள் அரசியல் ரீதியாக இருக்க வேண்டும். ஆனால் நாம் யாவரும் எமது மக்கள் நலன் கருதியே பயணிக்கின்றோம் என்ற எண்ணம் எம் யாவருள்ளும் மேலோங்க வேண்டும்.

    இணைத் தலைவர் அவர்கள் நான் பேசி முடித்தவுடன் வழக்கமாக நான் அரசியல் பேசுவதாகவும் இது பொருளாதார ரீதியான ஒருங்கிணைப்புக் கூட்டம் என்பதையும் எமக்கு நினைவுபடுத்துவார்.

    ஆனால் நான் கூறுவது பொருளாதார ரீதியான கூட்டங்களில்கூட அரசியல் வேறுபாடுகளையும் வன்மங்களையும் உட்புகுத்தாதீர்கள் என்பதையே. வெறும் அரசியல் கட்சிகள் ரீதியான கண்ணோட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மக்கள் நலம் சார்பான மனோ நிலையுடன் இனி வருங் காலங்களிலேனும் நாம் பயணம் செய்ய வேண்டும்.

    இதனை தொடர்ந்து பேசிய மற்றைய இணைத்தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

    வடமாகாண சபைக்கு அரசாங்கம் பெருமளவு நிதியினை கொடுத்ததாகவும் அவர்கள் அதனை பயன்படுத்தாமல் மாகாண சபையை புழுதியில் எறிந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியதுடன், தொடர்ச்சியாக மாகாண சபை குறித்த விமர்சனங்களை முன்வைத்தார்.

    இந்நிலையில் அமைச்சர் டக்ளஸின் விமர்சனங்களை ஒத்துக் கொள்ள மறுத்த மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் அமைச்சர் ஐங்கரநேசன், சிவாஜிலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோர் சபையில் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அரசாங்கத்திற்கு வாக்குச் சேகரிக்கும் நடவடிக்கை இங்கே வேண்டாம் என சுட்டிக்காட்டினர்.

    இதனால் சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக சபையில் குழப்பம் நிலவியது. இந்நிலையில் மீண்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது உரையினை தொடர்ந்த நிலையில்,

    தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் அந்த இடத்தில் கூட்டமைப்பு உறுப்பினர்களை அநாகரிக வார்த்தைகளினால் திட்டித்தீர்தனர்.

    எனினும் ஒருவாறாக அமைச்சர் டக்ளஸ் தனது உரையினை நிறைவு செய்த நிலையில் மீண்டும் அமைச்சருக்கு பதிலடி கொடுத்தார் முதலமைச்சர்.அதில் குறிப்பாக, திட்ட அறிக்கையும் அதன் முன்னேற்றங்களும் என்று நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவை எதனைக் குறிப்பிடுகின்றன என்பது பற்றி எனக்குத் தெரியாது.

    கணனியில் இவ்வருடத்தைய நிதி சம்பந்தமான அறிக்கைகள் 30.11.2014 வரையில் தரப்பட்டுள்ளன. வருட முடிவில் அவற்றைப் பிரதி எடுத்து இங்கு கொண்டு வந்து வாசிக்க வேண்டிய அவசியம் எதுவும் எமக்கில்லை என்று கருதுகின்றேன்.

    ஒன்றை மட்டும் கூறி வைக்கின்றேன். இவ்வருடம் மீண்டுவரும் செலவீனமாகத் தரப்பட்ட முழுத் தொகை – 14580 மில்லியன் ரூபாய். இது எமக்கு அபிவிருத்திக்காகத் தரப்பட்ட செலவீனம் அல்ல.

    அலுவலர்களுக்கான செலவீனம். அடுத்தது செயற் திட்டங்களுக்கு தரப்பட்ட தொகை 3955 மில்லியன் ரூபாய். இது அபிவிருத்திக்காகத் தரப்பட்ட தொகை என்றாலும் எங்கள் வசம் தரப்பட்ட தொகையல்ல. அதனை செலவழிப்பது, செலவு செய்யும் முறைகளை நிர்ணயிப்பது, செயற்படுத்துவது யாவுமே மத்திய அரசாங்கமே.

    மத்திய அரசாங்கம் மாகாண அலுவலர்களை வைத்துத் தாமே நடாத்தும் கைங்கரியந்தான் இது. எமக்கும் இப்பணத்திற்கும் எது வித சம்பந்தமுமில்லை.

    அண்மையில் ஊழல் நிகழ்ந்ததும் அந்தப் பணத்தைச் செலவழிக்கையிலேயே. எமக்கென மூலதனச் செலவீனம் சார்பாகத் தரப்பட்ட தொகை 1876 மில்லியன் ரூபாய்.

    மீண்டும் மீண்டும் சகல ஊடகங்களுக்கும் நாம் கூறி வருவது இதைத்தான். எமக்கென அரசாங்கம் ஒதுக்கிய தொகை 1876 மில்லியன் ரூபாய் மட்டுமே.  குறைநிரப்பு ஒதுக்கீட்டை  உடன் சேர்த்து ஒக்ரோபர் மாதத்தில் கிடைத்த தொகை 2014.78 மில்லியன் ரூபாய்.

    அத்தொகை நல்ல முறையில் செலவழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அநேகமாக நாங்கள் அதனை முற்றிலும் உரியவாறு வருட முடிவுக்கு முன்னர் செலவழித்து விடுவோம். அதில் சந்தேகம் வேண்டாம்.

    மேலதிக விபரங்களை கூகுள் NPC தரவில் பார்த்துக் கொள்ளலாம். சகல அமைச்சர்களின் விபரங்களும் அதில் தரப்பட்டுள்ளன. என்றார்.

    இதனை தொடர்ந்து மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மாகாண சபை குறித்த அமைச்சர் டக்ளஸின் விமர்சனத்திற்குப் பதில் சொல்ல வேண்டும் என கூறிக்கொண்டிருந்த நிலையில்,மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையிலிருந்த ஒலிவாங்கியை வாங்கிக் கொண்டு பேசத் தொடங்கினார்.

    அதன் போது அமைச்சர் டக்ளஸ் மீண்டும் சிவாஜிலிங்கத்தை உட்காருமாறு கேட்டுக் கொண்டார்.

    ஆனால் மாகாணசபை எதிர்க்கட்சி தலைவரான ஈ.பி.டி.பி தவராசா சபையில் எழுப்பி மீண்டும் மாகாணசபை குறித்து விமர்சிக்க முற்பட்டபோது அதற்கு போதுமான இடம் கொடுக்கப்பட்டது.இந்நிலையில் சிவாஜிலிங்கம் தொடர்ந்தும் பேசுகையில் ஒரு கட்டத்தில் அவருடைய ஒலிவாங்கியை வாங்கிக் கொள்ளுங்கள் என அமைச்சர் டக்ளஸ் கூறினார்.

    இதனையடுத்து டக்ளஸின் தம்பியாரும், ஈ.பிடி.பி அடிவருடி ஒருவரும் சேர்ந்து சிவாஜிலிங்கத்திடமிருந்து ஒலிவாங்கியை பிடுங்க முற்பட்டனர். இந்நிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் ஒலிவாங்கியை பிடுங்க நீங்கள் யார்? என கேட்டனர்.

    அதற்குள் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் ஆகியோரின் ஆசனப் பகுதிக்குள் நுழைந்து விட்டனர். மறுபக்கம் ஈ.பி.டி.பியின் பிரதேச சபை உறுப்பினர் போல் என்பவரும் அந்தப் பகுதிக்குள் வந்து கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதையடுத்து, எதிர்ப்பக்கத்தில் அமர்ந்திருந்த ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து வந்து கூட்டமைப்பினரை சூழ்ந்துவிட,

    வெளியிலிருந்து சபைக்குள் முன்னரே கொண்டுவரப் பட்டு உட்கார வைக்கப்பட்டும், புகைப்படக் கருவிகளுடன் களமிறக்கப்பட்டிருந்தவர்களும் சேர்ந்து கூட்டமைப்பினர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்த தொடங்கினர்.

    இதில் கூட்டத்தின் ஆரம்பத்தில் அமைச்சர் டக்ளஸின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் ஐங்கரநேசன் மற்றும் விந்தன், சர்வேஸ்வரன், சிவாஜிலிங்கம் மீது கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்த ஈ.பி.டி.பி யினர் கடுமையான தாக்குதல் நடத்த முற்பட்டனர்.

    ஆனாலும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் மறுபக்கம் அமைச்சர் டக்ளஸின் பாதுகாப்பு பொலிஸார் அவரை பாதுகாத்து நிற்க, முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் முதலமைச்சரை பாதுகாப்பாக வெளியேற்றி விட்டனர்.

    பின்னர் இதனையடுத்து கூட்டமைப்பு சபையிலிருந்து வெளியேறியதையடுத்து ஊடகவியலாளர்களும், அரசாங்க உத்தியோகஸ்த்தர்கள் பலரும் சபையிலிருந்து வெளியேறினர்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நடந்தது என்ன? Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top