யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஈபிடியினர் மேற்கொண்ட வன்முறைச் சம்பவத்தால் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைத்தலைவர்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஈபிடிபி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது.
தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசியல் கதைக்க முடியாது எனத் தெரிவித்து, இணைத்தலைவர்களில் ஒருவரான சி.வி.விக்னேஸ்வரன் அரசியல் தொடர்பில் உரையாற்றுவதைத் தவிர்த்து, பொதுவான விடயங்கள் தொடர்பில் உரை நிகழ்த்தியிருக்கின்றார்.
ஆனாலும் தொடர்ந்து உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, கடும் தீவிரமான அரசியல் பேசியிருக்கின்றார். இதற்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, வடக்கு மாகாண சபை தரப்பில் கேட்கப்பட்டிருக்கின்றது.
இருப்பினும் டக்ளஸ் தேவானந்தா சந்தர்ப்பம் வழங்காமையை அடுத்து சிவாஜிலிங்கம், உரையாற்றியிருக்கின்றார். அதன் போது அவருடைய ஒலிவாங்கியை பிடுங்குமாறு டக்ளஸ் தெரிவித்திருக்கின்றார்.
அதற்கு சென்ற ஈபிடியினருக்கும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து எதிர்தரப்பிலிருந்து ஓடிச்சென்ற ஈபிடிபியினர் தண்ணீர் போத்தல்களால் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
இதன் போது ஐங்கரநேசனுடைய உதட்டில் சேதம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறியதாக தெரியவருகின்றது.
இதனை அடுத்து கூட்டத்தைவிட்டு மாகாணசபை உறுப்பினர்களும் கூட்டமைப்பினரும் வெளியேறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.