2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட என்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் 45 கோடி ரூபா கையுட்டாக பெற்றுக்கொண்டதாக கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டினை சிவாஜிலிங்கம் பகிரங்கமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம்,
ஞாயிற்றுக் கிழமை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில் நடைபெற்றிருந்தது. அதன் போது கருத்துத் தெரிவித்த சுமந்திரன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவிடம் 45 கோடிரூபா பணம் பெற்றுக்கொண்டே தேர்தலில் போட்டியிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்ததுடன், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை விக்கிலீக்ஸ் தகவல்களில் தான் போட்டியிட்டமை தொடர்பிலான அமெரிக்கத் தூதரக அறிக்கையின் ஆதாரங்களையும் சுட்டிக்காட்டியிருந்தார். அவ்வாறு தான் மோசடியான முறையில் தேர்தலில் குதித்திருந்தால் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.