திமுகவிலிருந்து விலகுவதாக பிரபல நடிகை
குஷ்பு அறிவித்துள்ளார். அவர் விரைவில் பா.ஜனதாவில் சேருவார் எனத் தெரிகிறது.இது தொடர்பாக அவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக்கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொதுவாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.
அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள்.
ஆனால், என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ள போது நான் தேர்ந்தெடுத்த பாதையும் பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தும், அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக குஷ்பு திமுகவில் சேர்ந்ததிலிருந்தே திமுகவில் ஒருதரப்பில் அவரது வருகை கசப்புணர்வுடன் பார்க்கப்பட்டது.குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி வீட்டிலேயே அவர்களது வீட்டு பெண்கள் மத்தியில் குஷ்பு வெறுப்புக்குள்ளானதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குஷ்பு, ” திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும். தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் ( மு.க. ஸ்டாலின்) இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்” என்று கூறியிருந்தார்.
அவரது இந்த பேட்டி வெளியானதும் திமுக இரண்டாம் மட்டத் தலைவர்களிடையே, குறிப்பாக ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் திருமணம் ஒன்றிற்கு திருச்சிக்கு சென்ற குஷ்பு, அங்குள்ள ஓட்டலில் வைத்து திமுகவினரால் தாக்கப்பட்டார். அவர் மீது செருப்பும் வீசப்பட்டது. அதுமட்டுமல்லாது சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப்பட்ட கார் கண்ணாடிகள் உடைந்தன. தாக்குதல் நடந்தபோது குஷ்பு கணவர் சுந்தர் சி. இல்லாத நிலையில், அவர்களது குழந்தைகள் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தை பெரிதுபடுத்தாத குஷ்பு, தனது பேட்டி தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறியிருந்தார். ஆனாலும் அப்போதிருந்தே குஷ்பு திமுகவில் ஓரம்கட்டப்பட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இருப்பினும் கருணாநிதியின் தலையீடால், திமுக மாநாடு போன்ற, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குஷ்பு அழைக்கப்பட்டார்.
ஆனால் இதனை ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆதரவாளர்கள் விரும்பவில்லை எனக்கூறப்பட்டது. இதனிடையே நடந்தமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் குஷ்புவுக்கு சென்னையில் போட்டியிட வாய்ப்பளிக்க கருணாநிதி விரும்பியதாகவும், ஆனால் அதற்கு ஸ்டாலின் தெரிவித்த கடும் எதிர்ப்பு மற்றும் வேட்பாளர் தேர்வு முழுவதும் அவரது விருப்பப்படியே அமைந்தது போன்ற காரணங்களால் அது நடக்காமல் போனது.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கான அறிவிப்பு பட்டியலிலும் முதலில் குஷ்புவுக்கு வாய்ப்பளிக்கப்படாமல், பின்னர் கருணாநிதியின் தலையீட்டின் பேரிலேயே திமுகவின் முன்னணி பிரசாரகர்களின் லிஸ்டில் குஷ்பு இடம்பெற்று, அவரும் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில்தான் கட்சியில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது மற்றும் அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அடைந்த படுதோல்வி போன்றவை குஷ்புவை இனியும் திமுகவில் நீடிக்கவேண்டுமா? என்று யோசிக்க வைத்ததாக தெரிகிறது. இதற்கிடையேதான் அவர், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள சுஷ்மா சுஷ்மா சுவராஜுக்கும், ஸ்மிருதி இரானிக்கும் தனது டுவிட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். அப்போதே இது அரசியல் வட்டாரத்தில் பலரது புருவத்தை உயரச்செய்தது.
இந்நிலையில்தான் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதியைப்பற்றி சர்ச்சை எழுந்தபோது, ” சாதிப்பதற்கு கல்வி தகுதி அவசியம் இல்லை. சச்சின் டெண்டுல்கர், பில்கேட்ஸ், ரஜினி, கமல் உள்ளிட்டோர் உலக அளவில் புகழ் பெற்றுள்ளனர். இவர்கள் பட்டபடிப்பு படித்தவர்கள் அல்ல. திறமைதான் முக்கியம்; படிப்பு அல்ல” என்று இரானிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் குஷ்பூ. இதனால் அப்பொழுதே குஷ்பு பா.ஜனதாவில் சேரலாம் என செய்திகள் வெளியாகின.
தற்போது குஷ்பு திமுகவில் இருந்து விலகிவிட்டதால், அவர் விரைவில் பா.ஜனதாவில் சேருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே தெரிகிறது. ஸ்மிருதி இரானி போன்ற நடிகைகள் மற்றும் நஜ்மா ஹெப்துல்லா போன்றவர்களுக்கு பா.ஜனதாவில் அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றவற்றை பார்க்கும்போது தாமும் பா.ஜனதாவில் சேர்ந்தால் தமக்கும் அரசியலில் நல்ல எதிர்காலம் அமையலாம் என்ற முடிவுக்கு குஷ்பு வந்திருக்கலாம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக பா.ஜனதாவிலும் மக்களை கவரும் ‘ மாஸ் லீடர்’ இல்லை என்பதால் குஷ்புவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்படலாம் என்றே தெரிகிறது.