தமிழில் இடம்பெறும் சொற்கள் பல்வகைப் பொருளோடு சம்பந்தப்பட்டவை. சில சொற்கள் கதைகளோடும் மனிதர்களின் பெயர்களோடும் தொடர்புபட்டவை.
அந்த வகையில் திரிசங்குநிலை என்று நாம் கூறிக் கொள்ளும் சொல்லின் பின்னணியில் முக்கியமான கதை இருப்பதைப் பலரும் அறிந்திருப்பர்.
திரிசங்குநிலை என்றால் இரண்டும் கெட்டநிலை என்பது பொருள். அங்குமில்லை; இங்குமில்லை என்றும் பொருள் கொள்ளலாம்.
திரிசங்கு என்பது ஒரு மன்னனின் பெயர். பூலோகத்தில் அரசாட்சி புரிந்து வந்த திரிசங்கு மன்னனுக்கு நீண்டநாளாக ஓர் ஆசை.
பொதுவில் சொர்க்கம் என்பது ஆன்மாவுக்கானது. உயிர் பிரிந்து போக, உடல் பூலோகத்தில் சடலம் என்ற பெயரோடு தகனமாகிக் கொள்ளும்.
உயிர் மட்டுமே சொர்க்கம் அல்லது நரகத்தை சென்றடைகின்றது. ஆனால் மன்னன் திரிசங்கு தன் உடலோடும் உயிரோடும் சொர்க்கத்தை அடையவிரும்பினான்.
அதற்காக வசிட்டமுனிவரை அணுகி, சுவாமி! இந்த உடலோடு நான் சொர்க்கத்திற்குச் செல்லவேண்டும் என்று வேண்டினான்.
அதற்கு வசிட்டமுனி மன்னா! இது நிறைவேறாத ஆசை. இதைக் கைவிட்டுவிடு. பூலோகத்தில் பிறந்தவர்கள் உடலோடு சொர்க்கம் செல்லமுடியாது என்றார்.
மன்னன் திரிசங்கு வசிட்டமுனிவரின் பதிலை ஏற்பதாக இல்லை. தொடர்ந்து விசுவாமித்திரரைச் சந்தித்தான்.
சுவாமி! நான் எனது உடலோடு சொர்க்கம் செல்ல வேண்டும். வசிட்டமுனிவர் இது சாத்தியமில்லை என்று கூறிவிட்டார். நீங்கள்தான் இதற்கு உதவவேண்டும் என்று மன்றாடினான்.
வசிட்டரும் விசுவாமித்திரரும் போட்டி மனம்கொண்டவர்கள். எனவே வசிட்டரால் முடியாததை தான் செய்ய வேண்டும் என்று விசுவாமித்திரர் நினைத்தார்.
மன்னன் திரிசங்குவை நோக்கி, மன்னா! என் தவவலிமையால் உன்னை உன் உடம்போடு சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன் என்று உறுதி வழங்கினார்.
காலநேரம் வந்தபோது விசுவாமித்திரர் தன் தவவலிமையால் மன்னன் திரிசங்குவை அவனின் உடலோடு சொர்க்கத்திற்குச் செல்ல ஏவுகிறார்.
மன்னன் திரிசங்குவும் பூலோகத்தில் இருந்து வானுலகை நோக்கிச் செல்கிறான்.
மானிடன் ஒருவன் தன் மனித உடம்போடு சொர்க்கத்தை நோக்கி வருவதை அறிந்த தேவலோகத்து அரசனாகிய தெய்வேந்திரன் கடும் கோபம் கொண்டான்.
சொர்க்க வாசலை நெருங்கும் வேளை மன்னன் திரிசங்குவை தன் ஆயுதத்தால் ஒரே அடிஅடித்தான்.
அவ்வளவுதான் திரிசங்கு, சொர்க்க வாசலில் இருந்து பூலோகத்தை நோக்கி விழுந்து கொண்டிருக்கிறான்.
இதை அறிந்த விசுவாமித்திரர், திரிசங்கு மன்னன் பூலோகத்தை வந்தடைந்தால் தனக்கு அவமானம் என்று கருதி அவனை சொர்க்கலோகத்திற்கும் பூலோகத்திற்கும் இடையில் தடுத்து நிறுத்தினார்.
இப்போது மன்னன் திரிசங்கு பூமியிலுமில்லை. சொர்க்கத்திலுமில்லை. இரண்டும் கெட்டநிலையில் இடைநடுவில் நிற்கிறான். இதைத்தான் திரிசங்கு நிலை என்றனர்.
இந்த நிலை இலங்கை அரசுக்கும் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. அதனாலேயே இந்தக் கதையை இங்கு கூறினோம்.
ஆம்; மன்னன் திரிசங்கு விசுவாமித்திரரை நம்பியது போல, இலங்கை அரசு சுப்பிர மணிய சுவாமியை நம்பினால், நிலைமை இதுதான். இந்தியாவும் காப்பாற்றாது. சர்வதேசமும் ஏற்காது.
தமிழில் இருக்கக் கூடிய திரிசங்குநிலை என்ற சொல்லின் பொருளை இலங்கையின் ஆட்சித் தரப்புக்கு யாராவது எடுத்தக் கூறினால் நன்மை பயக்கும்.