மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்படுவதை
ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் நடை முறைப்படுத்தப்படுமானால் அதை விடுத்து ஏனைய அம்சங்களே நடைமுறைப்படுத் தப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது இலங்கை அரசு.அண்மையில் இந்தியா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் '13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்ததை நடைமுறைப்படுத்தி அதற்கு அப்பாலும் சென்று தீர்வு காண வேண்டும்' என்று அந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கும் நிலையிலேயே இலங்கை அரசின் நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்
அமைச்சரவைப் பேச்சாளர் ஹெஹகலிய ரம்புக் வெல. கடந்த மே மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றிருந்தார். இதன் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இந்தச் சந்திப்பில் 13 ஆவது திருத்தம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு அப்பால் சென்று தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் காணி பொலிஸ் அதிகாரங்களும் பகிரப்பட வேண்டும் என்றும் குறிப்பிட் டிருந்தார். ஆனாலும் இந்தச் சந்திப்புத் தொடர்பில் இலங்கை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் 13 ஆவது திருத்தம் நடை முறைப்படுத்தப்படுவது தொடர்பில் எதுவும் கூறப்பட்டிருக்க வில்லை. ஆனாலும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சுஜாதா சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேற்படி விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் 13 ஆவது திருத்தத்தின் முக்கிய சரத்தான காணி பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிரும் விடயத்தில் இலங்கை அரசு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் ரம்புக்வெல 'மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் ஒரு போதும் வழங்கப்பட மாட்டாது. ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
சில அமைச்சர்கள் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிப்பதானது அது அவர்களது தனிப்பட்ட கருத்து என்றும் இலங்கை அரசின் நிலைப்பாடு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.