உள்நாட்டு அசாதாரண நிலைமைகள் எம்மவர்களை
உலகின் சகல திசைநோக்கியும் புலப்பெயர்வுகளுக்கு வித்திட்டது. யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்களாகின்றன. இன்றும் வறுமையின் கோரம், உயிரச்சுறுத்தல்கள், நாகரிகத்தின் வளர்ச்சியால் மில்லியனர்களாக வாழவேண்டும் என்ற எண்ணங்கள் தற்போதும் புலம்பெயர் நாடுகளை நோக்கிய பயணங்களுக்கு மூலகாரணங்களாக அமைகின்றன.
ஆகாயமார்க்கமாக, தரைமார்க்கமாக, கடல் மார்க்கமாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஆயிரமாயிரம் பயணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் வெற்றியான முடிவுகள் கிடைத்திருக்கின்ற போதும் சோகமான முடிவுகளும் மறையாத வடுக்களாகவும் தொடர்கதைகளாகவும் இருக்கத்தான் செய்கின்றன.
அகதி அந்தஸ்து கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கானவர்கள் வெளிநாடுகளை நாடிச்சென்றாலும் அந்நாடுகள் தங்களின் அகதி அந்தஸ்து கொள்கைகளை எமக்காக அந்தளவிற்கு தளர்த்திக்கொண்டதாய் இல்லை. யுத்த காலங்களில் எம்மவர்களுக்கு புகலிடம் வழங்கிய ஐரோப்பிய நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற அறிவிப்பு அகதிகள் மீதான கொள்கைகளை அந் நாடுகள் மேலும்மேலும் கடினமாக்கிக்கொள்ள உதவியாய்ப்போனது.
அதுமட்டுமன்றி அகதிக்கோரிக்கைகளுடன் சட்டத்திற்கு முரணாக ஆயிரக்கணக்கானவர்கள் உலகின் பலபாகங்களிலிருந்தும் நாட்டுக்குள் வருகைதருவதால் அது குறித்த நாட்டில்உள்நாட்டு பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தைச் செலுத்தியதோடு தேசிய பாதுகப்பு ரீதியாகவும் கேள்விக்குறிகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அவ்வவ் நாடுகளின் அரசியல் தளத்தில் இது முக்கிய பேசுபொருளாக உருவெடுக்கவும் இறுக்கமான கொள்கைகள் பிறப்பிற்கும் அமுலாக்கத்திற்கும் வழிசமைத்தது.
ஆம் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மத்திய கிழக்கு நாடுகள், சில ஐரோப்பிய நாடுகளிலிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் எமது வாழ்வில் புத்தொளி பிறக்கும் என்பதுட்பட ஆயிரம் கனவுகளுடனும் பாரிய நம்பிக்கையுடனும் அவுஸ்திரேலிய கரையை ஏதோவொருவகையில் எட்டினால் போதும் என்ற இலக்குடன் சட்டவிரோதமாக உயிராபத்து மிக்க படகுப் பயணத்தை இராட்சத அலைகளுடன் நீண்டு கிடக்கும் பசுபிக் கடற்பரப்பில் மேற்கொள்கின்றார்கள்.
அந்த அலைகளின் சத்தத்துக்கு நடுவே எத்தனையோ அகதிகளின் விசும்பல் ஒலிகள் நம்மையறியாது ஒலித்துக்கொண்டிருக்கின்றன என்பதை பலர் அறிவதில்லை. முகவர்களினதும் மனிதர்களை கடத்தி பெரும்முதலீட்டும் வியாபாரத்தில் ஈடுபடும் பாரிய தொடர்சக்திகளாகவிருப்பவர்களினதும் கவர்ச்சிக்கதைகளில் கட்டுண்டு கடல் சூழ்ந்த இலங்கைத் தீவிலிருந்து அகதியாய் வந்தவர்களின் கண்ணீரையும் அது சுமந்துகொண்டிருக்கிறது என்பதை நம்வர்கள் உணர்வதில்லை.
அவற்றுக்கெல்லாம் மேலாக ஏதோவொருவகையில் அவுஸ்திரேலிய கரையை எட்டினாலும் அந்நாடு எமது புகலிடக்கோரிக்கையை உடனேற்று வாழ்வளிக்கின்றதா? அதன் கொள்கையென்ன? அந்த அரசு என்ன கூறுகின்றது இவை எதனையுமே பொதுமக்கள் சிந்திப்பதில்லை. அதேநேரம் இவர்கள் சிந்திப்பதற்கு சில சக்திகள் இடமளிப்பதில்லை. ஆகவே சட்டவிரோத படகுப்பயணத்தின் விளைவுகள் என்ன? புகலிடக்கோரிக்கை தொடர்பான அவுஸ்திரேலிய அரசின் நிலைப்பாடென்ன? இலங்கையுடன் எவ்வாறான செயற்படுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அவை எவ்வளவு தூரம் நன்மையளித்திருக்கின்றன. என்பது தொடர்பில் இங்கு சற்றே விரிவாக பார்க்கவேண்டியது அவசியமாகின்றது. உலகின் பல்வேறு தேசிய அடையாளத்தை கொண்டவர்கள் அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமாக புகலிடக்கோரிக்கையுடன் வருகை தருகின்றார்கள். குறிப்பாக ஆண்டொன்றுக்கு சராசரியாக ஒருலட்சத்து 37ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வருகை தருகின்றார்கள். இது அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு பொருளாதாரத்தில் தாக்கஞ்செலுத்த ஆரம்பித்தது.
இதன் காரணமாக இவ்வாறு சட்டவிரோதமாக பிரவேசித்து புகலிடக்கோரிக்கைகளை முன்வைப்போரை தடுக்க வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெறவும் அவை உள்நாட்டு அரசியலிலும் தாக்கஞ்செலுத்தின. இதற்கமைவாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது பிரதான கட்சிகளான தொழிற்சங்க, கன்சர்வேடிவ் ஆகிய இரு கட்சிகளும் சட்டவிரோத புகலிடக்கோரிக்கையை கட்டுப்படுத்தல் விடயத்தை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கியிருந்தன.
கன்சர்வேடிவ் கட்சி பொருளாதார வளர்ச்சி, சட்டவிரோத புலிடக்கோரிக்கை நிறுத்தம் தொடர்பில் இறுக்கமான கொள்கைகளை முன்வைத்திருந்தமையால் 2013ஆம் ஆண்டு செப்ரம்பர் 7ஆம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தல் வாக்கெடுப்பில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று ரொனி அபொட் பிரதமரானார். அதனைத் தொடர்ந்து தேர்தலில் அளித்த வாக்குறுதிக்கமைவாக சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவை அடைபவர்களை நிர்வகிப்பதற்கு 18ஆம் திகதி செப்பரம்பர் மாதம் 2013ஆம் ஆண்டு இறையாண்மை எல்லைகள் நடவடிக்கை (Operation Sovereign Borders) என்ற புதிய கொள்கையை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இக்கொள்கையானது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விதிகளுக்கும் சர்வதேச சட்டங்களும் அமைவாக ஒரு நாட்டின் இறைமையை மையப்படுத்தி அமைக்கப்பட்டதாகும். இறையாண்மை எல்லை நடவடிக்கை என்பது படகுகளை நிறுத்தவும், குற்றவாளிகளின் கைகளிலே தமது உயிர்களை கடலிலே பணயம் வைப்பதனைத் தடுக்கவும் அத்துடன் அவுஸ்திரேலியாவின் நேர்மையான குடிவரவு திட்டத்தினைப் பாதுகாப்பதற்குமான ஒரு இராணுவ முனைப்புடன் மேற்கொள்ளப்படும் கரையோர பாதுகாப்பு முன்னேற்பாடாகும்.
வீசா இல்லாமல் படகில் பயணிக்கும் புகலிடம் கோருவோர் அவுஸ்திரேலியாவைச் சென்றடைய முடியாது. குடும்பத்தார், சிறுவர்கள், துணையின்றி தாமாகவரும் சிறுவர்கள், படித்தவர்கள், தேர்ச்சிபெற்ற தொழிலாளர் போன்ற எல்லோருக்குமே இந்த விதிகள் பொதுவானவை. விதிவிலக்குகள் கிடையாது. அவுஸ்திரேலியா அதனுடைய எல்லைகளைப் பாதுகாப்பதில் மிகவும் கடுமையாக உள்ளது என்பதுடன் சட்டவிரோதமாக படகிலே வர முயற்சிப்பவர்களைத் தடுத்து நிறுத்தும்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் பயணம் செய்ய ஆலோசனை செய்பவர்களுக்கு, சட்டங்கள் மாறிவிட்டன என்ற ஆட்கடத்துவோரின் பொய்களை நம்பவேண்டாம் அத்துடன் அவுஸ்திரேலியாவை தமது வாழ்விடமாக்க வழிகிடையாதென தெரிவிப்பதற்காக அதிகமான பல கரைகடந்த அறிவித்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச் செயற்பாடுகள் சர்வதேச தொடர்புகள், கடல் எல்லைக்குள் வெளியிலான செயற்பாடுகள், கடல் எல்லையில் செயற்பாடுகள் சட்டரீதியான செயற்பாடுகள், கட்டுப்பாடுகள் என அனைத்து நடவடிக்கைகளையும் அவுஸ்திரேலிய இராணுவம், பெடரல் பொலிஸ், சுங்கத்திணைக்களம் உட்பட அவுஸ்திரேலியாவின் 16 அமைப்புக்கள் கூட்டிணைந்து (OSB Joint Agency Taskforce) மேற்கொள்கின்றன.
இப்புதிய கொள்கையின் பிரகாரம் பப்புவா நியூகினியா மற்றும் நௌறு அரசாங்கங்களுடன் இணக்கப்பாடுகளையும் ஒப்பந்தங்களையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. அதன் பிரகாரம் கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் வருபவர்களை மதிப்பீடுகளாக 48மணிநேரங்களில் அங்கு அனுப்பி வைப்பதுடன் அங்கு உண்மையாக அகதி அந்தஸ்துக்குரியவரா என்பது தனித்தனியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் ஆராயப்படும். அதன் பின்னர் அவர்கள் அகதிகள் என அடையாளம் காணப்பட்டால் மட்டுமே அங்கு தொடர்ந்தும் வசிக்க அனுமதியளிக்கப்படும் இல்லாது விட்டால் சுயவிருப்பத்துடன் அல்லது கட்டத்துடன் அவர்கள் தமது நாடுகளுக்கே அனுப்பிவைக்கப்படுவார்கள்.
அத்துடன் புதிய கொள்கையின் பிரகாரம் பப்புவா நியூகினியா மற்றும் நௌறுவில் அகதி நிலையங்களை விஸ்தரித்தல், சட்ட விரோத புகலிடக்கோரிக்கையாளர்களை விரைவாக திருப்பியனுப்பவது தொடர்பான நடவடிக்கையை துரிதப்படுத்தல் ஆகியனவும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதான பங்காளியாக இலங்கை
2009ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே முதற்தடவையாக இலங்கையிலிருந்து முதலாவதாக சட்டவிரோதமாக பொதுமக்களையேற்றி படகொன்று அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றது.
அதனைத் தொடர்ந்து அவ்வவ்போது படகுகள் அவுஸ்திரேலிய கரையை நோக்கிச் சென்றவண்ணமிருந்தன. இறையாண்மை எல்லை நடவடிக்கை செயற்படுத்துவதற்கு முன்னரான 12மாத காலப்பகுதியில் 4829இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குச் சென்று புகலிடக்கோரிக்கையை முன்வைத்திருந்தனர். பின்னர் இறையாண்மை எல்லை செயற்திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி செயற்படுத்தப்பட்டது முதல் 106 இலங்கையர்களே சட்டவிரோதமாக சென்றிருக்கின்றனர் என்பதுடன் கடந்த பத்து மாதங்களாக எந்தவொரு இலங்கையைச் சேர்ந்த படகோ அல்லது நபரோ சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி செல்லவில்லை.
நௌறு அல்லது மானெஸ் பகுதிகளில் கூட 26 மே 2014இற்குப் பின்னர் இலங்கையைச்சேர்ந்த சட்டவிரோத கடல்வழி பயணிகளுக்கும் சாதகமான வதிவிட வசதிகள் கிடைத்திருக்கவில்லை என இலங்கையிலுள்ள அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதிக்கும் 2013ஆம் ஆண்டு செப்டரம்பர் 18ஆம் திகதிக்குமிடையிலான காலப்பகுதியில் 1247 பேர் மீளவும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதோடு, 44 இலங்கையர்கள் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் உதவியுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் கிறிஸ்மஸ் தீவில் 49பேரும், பிரதான தீவில் 441பேரும் மெனுஸ் தீவில் 27பேரும் நௌறு தீவில் 24பேருமே 2014 மே 26ஆம் திகதி வரையில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களாகவுள்ளனர். குறிப்பாக இலங்கையில் இருந்து கடந்த பத்து மாதங்களாக எந்தவொரு சட்டவிரோத பயணங்களும் அவுஸ்திரேலியா நோக்கி இடம்பெறாமைக்கு அந்நாட்டு அரசாங்கத்துடன் இலங்கை அரசு பங்காளியாக மேற்கொள்ளும் நடவடிக்கையே காரணமாகவுள்ளதாக இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவுஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லை நடவடிக்கைகளை ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று நடைபெற்றது. இதன்போது அவுஸ்திரேலிய அரசும் இச்சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதாக இலங்கையுடன் இணைந்து எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டிருகின்றது. அவை எவ்வளவு தூரம் வெற்றியளித்திருக்கின்றன என்பது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான தூதுவர் ரொபின் மூடி தலைமையிலான உயர்அதிகாரிகள் குழு தெளிவுபடுத்தியிருந்தமையை இங்கு எடுத்துக்காட்டவேண்டியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான தூதுவர் ரொபின் மூடி கூறுகையில்; இலங்கையுடன் அவுஸ்திரேலியா நீண்ட உறவுகளை வைத்துக்கொண்டிருக்கின்றது. கடந்த பத்து மாதங்களாக இலங்கையிலிருந்து சட்டவிரோத பயணங்களும் இடம்பெற்றிருக்கவில்லை. இதற்கு இலங்கை அரசு ஆஸி. அரசிற்கு அளித்த ஒத்துழைப்பு பாராட்டப்படவேண்டியது. மேலும் ஆஸி.அரசாங்கம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் வறுமையொழிப்பிற்கும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக சுகாதாரம், தொழில் வாய்ப்புக் கல்வி, புலமைப்பரிசில்கள், கழிவகற்றல் மீள்சுழற்சித் திட்டங்கள் போன்ற பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் மனிதக் கடத்தல்களில் ஈடுபடுவோர் இலக்கு வைக்கும் வறுமையாளர்களை குறைப்புச் செய்து சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார். அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தெற்காசிய பிராந்திய நிறைவேற்று அதிகாரி ஒஸ் அல்வாரெஸ் கூறுகையில், அவுஸ்திரேலியாவில் பிரதான நிரலப்பரப்பிற்குள் ஒருபோதும் சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பப்புவா நியூகினியா மற்றும் நௌறுவிலேயே அவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள். இது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிராந்தியம் என பிரசாரம் செய்யப்படுகின்றது. உண்மையில் அது வேறு அரசாங்கமாகும். ஐ.நா அகதிகள் விதிகளுக்கு அமைவாக அங்கு சட்டவிரோதமாக எமது நாட்டிற்குள் வருகை தருபவர்கள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குரிய உதவிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தொண்டர் நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. நாம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அதிகாரிகளை நியமித்து அவர்களின் அகதிக்கோரிக்கை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்.
அவர்களின் தகவல்கள் பொய்யாக இருக்கும் பட்சத்தில் அவர்களை உடனடியாக நாட்டிற்கு திருப்பி அனுப்புகின்றோம். சட்டவிரோதமாக நாட்டிற்குள் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் அவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீண்டநாட்கள் எடுகின்றன. இதனாலேயே நீண்ட காலத்திற்கு பின்னர் பலர் சொந்த நாடுகளுக் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். அவ்வாறானவர்கள் சுயவிருப்பத்துடன் நாடு திரும்புவார்களாயின் அதற்குரிய விமான செலவை மட்டுமே நாம் வழங்குகின்றோமே தவிர சில ஆட்கடத்தும் முகவர்கள் கூறும் முகமாக இலட்சக்கணக்கான பணங்களை வழங்கவில்லை.
நாம் உண்மையான புகலிடக்கோரிக்கையாளர்கள் அல்லது முறையான கல்வித் தகமைகளைக் கொண்டவர்களை உள்வாங்க தயாராக இருக்கின்றோம் என்றார். இறையாண்மை எல்லை நடவடிக்கைகளுக்கான கூட்டமைப்பின் ஊடகச் செயற்பாடு நிறைவேற்றதிகாரி கூறுகையில், தற்போதைக்கு இந்த இறையாண்மை எல்லைப்புற நடவடிக்கையானது நிறுத்தப்படமாட்டாது. இலங்கையில் இருந்து வருகைதரும் சட்டவிரேத பயணங்கள் தடுக்கப்படுவது வெற்றியளிக்கப்பட்டிருக்கின்றபோதும் தொடர்ச்சியாக அதனைப் பேணவேண்டியுள்ளது.அத்துடன் ஏனைய நாடுகளில் இருந்து வருகை தருபவர்களை தடுக்கவேண்டியுள்ளது.
ஆகவே எமது இலக்கு நிறைவடையும் வரை இந்த நடவடிக்கை தொடரும். பிரதமர் ரொனி அபோட் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிமாறிய பின்னர் இந்தக் கொள்கை மாற்றமடையும் என கருதமுடியாது. காரணம் ஏனைய கட்சிகளும் இந்த சட்டவிரோத பிரவேசத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளன. ஆகவே அரசாங்கம் மாற்றமடைந்தாலும் ஒருபோதும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாது என்றார். பெரடல் பொலிஸ் உயர்அதிகாரி டான் எவன்ஸ் கூறுகையில், இலங்கையில் நாம் பிராந்திய அலுவலகமொன்றை நியமித்துள்ளோம்.
இதன் மூலம் பங்களாதேஷ் நாட்டையும் கண்காணிக்கின்றோம். குறிப்பாக மனிதக் கடத்தல்களில் ஈடுபடுவோரை கண்டறிவதற்காக விசேட புலனாய்வு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸின் விசேட பிரிவொன்றுடன் இணைந்து முன்னெடுத்துவருவதுடன் இலங்கை பொலிஸாருக்காக நவீன தொழில் நுட்பத்துடன் தொடர்புடைய விசேட நிகழ்சித்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். இதன் மூலம் சில முயற்சிகள் தடுக்கப்பட்டிருகின்றன என்றார்.
-நன்றி வீரகேசரி-