பலத்த பொலிஸ் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன் கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி வழமைபோல இன்று அதிகாலை நடைபெற்றது. இன்றைய வேள்வியில் 40ற்கு மேற்பட்ட கடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. 150ற்கும் மேற்பட்ட கோழிகள் வெட்டப்பட்டன.
அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் உயிருடன் ஆலய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டன.
நள்ளிரவில் இடம்பெற்ற பொங்கல் வழிபாடுகளைத் தொடர்ந்து அதிகாலையில் கடாக்கள் வெட்டும் நிகழ்வு ஆரம்பமாகியது. ஆலய வாயிலில் மிகவும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்ட இடத்தில் பொது மக்கள் பார்வையிடா வண்ணம் இம்முறை கடாக்கள் வெட்டப்பட்டன.
கடாக்கள் வெட்டும் இடத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் நின்று கடாக்களைப் பரிசோதித்து வெட்டுவதற்கு அனுமதித்தனர். ஒவ்வொரு கடாக்களும் பரிசோதிக்கப்பட்டே வெட்டுவதற்கு கொண்டுசெல்லப்பட்டன. ஓர் இடத்தில் ஒரு கடா வெட்டப்பட்டு அந்தக் கடா அகற்றப்பட்ட பின்னரே அடுத்த கடா வெட்ட அனுமதிக்கப்பட்டது. இதனால் அதிக நேரகால தாமதங்கள் ஏற்பட்டன.
இம்முறையும் அதிக எண்ணிக்ககையானவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். நள்ளிரவுக்கு முன்னரே ஆலய சுற்றாடலில் கடாக்களுடன் பொது மக்கள் கூடினார்கள். நேற்று மாலை முதல் ஆலய சுற்றாடலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.