இலங்கையின் ஜனநாயகம் என்பது, நிறைவேற்று
அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையைக் கொண்டது. பாரா ளுமன்றத்திலும் பார்க்க அதிக அதிகார பலம், இங்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக் கின்றது. இறந்துபோன ஒருவருக்குஉயிர் கொடுப்பது தவிர்ந்த ஏனைய அனைத்து விடயங்களையும் செய்வதற்கு ஜனாதிபதி அதிகார வல்லமை கொண்டிருக்கின்றார் என்று கூறுவார்கள்.
ஆனால், நாட்டின் பொதுவான நன்மைக்கும்,நாட்டின் முன்னேற்றத்திற்கும், எரியும் பிரச்சினையாக உருவெடுத்து, புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்கும், இந்த அதிகாரம் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. இனப்பிரச்சினை காரணமாகவே நாட்டில் மோசமான யுத்தம் ஒன்று உருவாகியிருந்தது. இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி பல வழிகளில் தமது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார்.
அவ்வாறு பயன்படுத்தியதன் மூலம் வெல்ல முடியாத யுத்தம் என்று வர்ணிக்கப்பட்டிருந்த முப்பது வருடகால யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், மானுடத்திற்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி, அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்று யுத்தம் முடிவடைந்த நேரம் முதல் சர்வதேசத்தினாலும் குறிப்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையினாலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
யுத்தம் முடிவடைந்த உடனேயே இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இந்த பொறுப்பு கூறல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுடன் ஓர் இணக்கப்பாட்டைப் பெற்றிருந்தார். அது குறித்து, இணை அறிக்கையொன்றும் அப்போது வெளியிடப்பட்டிருந்தது. ஆயினும் அந்த ஒப்புதலை இன்னும் ஜனாதிபதி நிறைவேற்றவில்லை.
நிறைவேற்று அதிகார பலம் இருந்தும்கூட, அதனை அவர் செய்யாத காரணத்தினால், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டு, பொறுப்பு கூறுவதற்கான போதிய கால அவகாசம் வழங் கப்பட்டிருந்தது. ஆயினும் முறையான வழிகளில் பொறுப்பு கூறப்படவில்லை. நடைபெற்று முடிந்த உரிமை மீறல்களுக்கு பலரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அரசாங்கத்தினாலும், பாதுகாப்பு அமைச்சர் - நாட்டின் முப்படைகளுக்கும் தளபதி என்ற வகையில் உரிய முறையில் ஜனாதிபதியினால் பொறுப்பு ஏற்கப்படவில்லை.
இதனால், ஐ.நா. மனித உரிமைப் பேரவை ஒரு விசாரணையை முன்வைத்து, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றது. ஐ.நா.வின் விசாரணை குழுவை நாட்டிற்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று அரச ஆதரவுடன் இயங்கி வருகின்ற தீவிர அமைப்புக்களும், தீவிர பேரினவாத அரசியல் கட்சிகளும் முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வேளையில் இந்தக் குழுவை நாட்டிற்குள் அனுமதிப்பதா இல்லையா என்பதுபற்றி, பாராளுமன் றமே முடிவெடுக்கும் என்று ஜனாதிபதி பொது நிகழ்வொன்றில் பேசுகையில் கூறியிருக்கின்றார்.
யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறு ப்பு கூற மறுப்பதும், அதற்கென கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு, உப்புசப்பற்ற விசாரணைகளே போதும் என்று உலக நாடுகளையும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையையும் திருப்தியடையச் செய்ய முயற்சிப்பதும் பொறுப்புள்ள இறைமையுடைய ஓர் அரசாங்கத்தின் சரியான நடவடிக்கை என்று எவருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
உள்ளூரில் வேண்டுமானால், அரசாங்கம் நடத்திய உள்ளக விசாரணைகளைச் சரியென வாதிட்டு அதிகாரத்தின் துணைகொண்டு, அழுத்தங்களைப் பிரயோகித்து மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்யலாம். இதன் மூலம், பெரும்பான்மை இன மக்களின் வாக்குப் பலத்தை ஆளும் தரப்பினர் உறுதி செய்து கொள்ள முடியும். ஆனால் சர்வதேச அரங்கில் இந்த அரசியல் புரட்டு வேலை எடுபட மாட்டாது. முறையான ஒரு விசாரணையின் மூலம், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறவேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பை இதன் ஊடாக நிறைவேற்ற முடியாது.
பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்கும் போக்கு
முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவியாக அமைந்திருந்த நிறைவேற்று அதிகார பலத்தைப் பயன்படுத்தி, அந்த யுத்தத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்குப் பொறுப்பான முறையில் ஜனாதிபதி பொறுப்பு கூறியிருக்க வேண்டும். ஆனால், பொறுப்பு கூறுவதற்கான நடவடிக்கைகளை உள்ளூர் பொறிமுறையின் மூலம் மேற்கொள்வதாகக் கூறி கண்துடைப்பு நடவடிக்கைகளுக்கே ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
எல்.எல்.ஆர்.சி. எனப்படும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி, அந்தக் குழுவின் முன் மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்குக் காட்டிய தயக்கம், வேண்டா வெறுப்புடனேயே அந்தக்குழு நியமிக்கப்பட்டிருந்தது என்பதை வெளிப்படுத்தியிருந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவினால் கையளிக்கப்பட்டிருந்த அறிக்கையும்கூட, பலதரப்பினரின் வற்புறுத்தல்களுக்குப் பின்பு, காலந்தாழ்த்தியே பகிரங்கப்படுத்தப்பட்டது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த முன்மொழிவுகளும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் முக்கியத்துவமிக்கதாக, கவனத்தில் எடுக்கப்பட்டிருந்த அந்த அறிக்கையின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
ஆயினும் பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்கும் வகையில், அரசாங்கத் தரப்பினரும் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியும் நடந்து கொண்டார்களே தவிர, யுத்தத்தின் பின்னர் நாட்டில் உண்மையான நல்லிணக்கம் உருவாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு நடந்து கொண்டதாகத் தெரியவில்லை. நல்லிணக்க ஆணைக்குழு தனது பொறுப்புக்களைச் செய்தபோதும், அதில் பல தரப்பினருக்கு திருப்தி ஏற்படவில்லை. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அந்தக் குழுவின் மீது பலருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
குற்றம் இழைத்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்களினாலேயே அந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை அவர்க ளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே அதற்கான காரணமாகும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் கலந்து கொண்டு சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையானவர்கள், அந்த குழுவின் விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைத் தமது சாட்சியங்களிலேயே தெரிவித்திருந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்காக நடத்தப்பட்ட ஒரு விசாரணையில் சாட்சியங்களைப் பதிவு செய்தவர்களையும், விசாரணை நடத்தியவர்களையும் ஏறிட்டு நோக்கி உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று சாட்சிகள் நேரடியாகக் கூறியபோதே, அரசாங்கத்தின் பொறுப்பு கூறல் நடவடிக்கை பொய்த்துப்போய்விட்டது. இருப்பினும் அந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்காக ஜனாதிபதி, ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தார்.
நல்லிணக்க ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு ஆகிய இரண்டு ஆணைக்குழுக்களுமே, தமது அமர்வுகளின்போது, இராணுவத்தினர் மேற்கொண்டிருந்த உரிமை மீறல்களிலும் பார்க்க, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை வெளியில் கொண்டு வருவதிலும், அவற்றைப் பதிவு செய்வதிலுமே அதிக கவனத்தைச் செலுத்தியிருந்தார்கள். விசாரணைகளில் சாட்சியமளித்தவர்கள் பொறுமையிழந்து, எரிச்சலடையும் வகையில் அந்த நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், அச்சமின்றியும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை, பல ஊடகங்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருந்தன.
இத்தகைய ஒரு பின்னணியில் அரசாங்கத்தின் உள்ளூர் பொறிமுறை மூலமான பொறுப்பு கூறல் நடவடிக்கையானது, பொறுப்புக்களைத் தட்டிக்கழித்து, காலத்தை இழுத்தடிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டது என்ற உண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கின்றது. சுயநல அரசியல் நன்மையை நோக்கிய அதிகார பலம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது.
அதற்கு ஒருபோதும் ஒத்துழைக்கப் போவதில்லை என்றும் அரசு கூறியிருக்கின்றது. ஆனால் அதனையும் மீறி அந்த விசாரணை முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியாக நம்புகின்றது. அத்தகைய நடவடிக்கையொன்று இடம்பெறுவதை அரசு விரும்பவில்லை. விரும்பவில்லை என்பதைவிட அதுகுறித்து மிகுந்த அச்சம் கொண்டிருக்கின்றது என்றே கூற வேண்டும். ஏனெனில் ஐ.நா. மன்றத்தின் விசாரணை குழு நாட்டுக்குள் வந்தால், வர முயற்சித்தால் என்ன செய்வது, எப்படி தடுத்து நிறுத்துவது என்பதில் அரசாங்கத்தரப்பில் ஒரு குழப்ப நிலைமை ஏற்பட்டிருப்பதைத் தெளிவாகக் காண முடிகின்றது.
அந்தக் குழுவின் வருகையை எப்படி தடுத்து நிறுத்துவது என்பது குறித்து அரசாங்கம் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருப்பதையும் அறிய முடிகின்றது. இதற்கான முடிவு பாராளுமன்றத்திலேயே எடுக்கப்படும் என்று ஜனாதிபதி பொது நிகழ்வொன்றில் பேசுகையில் கூறியிருக்கின்றார். இந்த முடிவை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட, சர்வவல்லமையையுமுடைய ஜனாதிபதி தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி மேற் கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
அதனைச் செய்வதற்கு அவர் விரும்பவில்லை, தமக்குரிய வல்லமையைப் பயன்படுத்தி முடிவெடுக்கக் கூடிய ஒரு விடயத்தைத் தட்டிக்கழித்து, பாராளுமன்றத்தின் பொறுப்பில் - பாராளுமன்றத்தின் தலையில் சுமத்துவதற்கு அவர் முனைந்திருக்கின்றார் என்று எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றம் சுமத்தியிருக்கின்றன. யுத்தம் என்பது மோசமானது. யுத்த தர்மம் என்று சொல்லப்படுகின்ற நியதிகளைக் கூடிய வகையில் கடைப்பிடித்தாலும்கூட, அங்கு எல்லை மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்க முடியாது.
எல்லை மீறல்களும், உரிமை மீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறத்தான் செய்யும். இது யுத்தகாலச் செயற்பாடுகளின் யதார்த்தமாகும். இந்த யதார்த்தம் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது. இதனடிப்படையில் மனம் திறந்து நடைபெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று, அதற்கான பரிகாரங்களைத் தேடுவதற்கு முயற்சிப்பதையே பலரும் எதிர்பார்த்திருக்கின்றார்கள். அத்தகைய முயற்சியொன்றே மோசமான யுத்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வழியை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமையும். இதுவே, பொறுப்பு கூறலுக்குத் தேவையான நடவடிக்கையாகும். நிறைவேற்று அதிகாரத்தையும், பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையையும் கையில் வைத்துள்ள ஓர் அரசாங்கம் தனது அதிகாரத்தை, நன்மையான நோக்கத்திற்காகப் பயன்படுத்த தவறுவது நல்லதல்ல.
அத்தகைய செயற்பாடுகளை எவரும் வரவேற்க முன்வரமாட்டார்கள். அதிகார பலத்தை சில வேளைகளில் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்துவதென்பது தவிர்க்க முடியாது. தேன் எடுப்பவன் புறங்கையை நக்குவதைத் தடுக்க முடியாதுதானே? அரசியலில் அது ஏற்றுக்கொள்ளக் கூடிய அல்லது எதிர்பார்க்கப்பட வேண்டிய ஓர் அம்சமாகும். இருந்த போதிலும், நிறைவேற்று அதிகாரத்தையும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தையும் ஆளும் தரப்பினரின் சுயநலஅரசியல் நலன்களுக்காக மாத்திரமே பயன்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
நிறைவேற்று அதிகார பலமும், பாராளுமன்ற அறுதிப் பெரும்பான்மை பலமும், பேரின வாத அரசியல் போக்கில், மீட்சியில்லாத வகை யில் திளைத்திருப்பதையே காண முடிகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையைக் கொண்ட ஜனநாயக ஆட்சி முறையில் சிறுபான்மையினரின் உரிமைகள், அவர்களின் இருப்பு என்பன உறுதிப்படுத்தப்படாவிட்டால், அது உண்மையான ஜனநாயகமாகாது அது சர்வாதிகாரம் மேலோங்கிய, ஜனநாயக விரோதப் போக்குடைய முரண்பட்ட செயற்பாடாகவே அமையும்.
ஜனநாயகத்தின் போர்வையில் சர்வாதிகாரம் கோலோச்சினால் நாட்டில் ஒருபோதும் அமைதி நிலவமாட்டாது. அங்கு நல்லிணக்கம் தானாகவே அற்றுப் போகும். மோசமான ஒரு யுத்தத்தின் பின்னர், நாட்டில் அமைதி நிலவுவதாகக் கூறினாலும், உண்மையான நல்லிணக்கம் ஏற்படாத வரையில், அங்கு யுத்தகாலத்துச் சூழலைப் போன்ற சந்தேகமும், அச்சமும், மோசமான பகைமை உணர்வுமே தலைதூக்கியிருக்கும். இந்த நிலைமையானது யுத்தகாலத்து நிலைமைகளிலும் பார்க்க நாட்டின் அரசியல் ஸ்திரத்தையும், நிர்வாகச் செயற்பாட்டின் வல்லமையையும் குலைத்து நாசமாக்கவல்லது. இத்தகைய நிலைமையானது விரும்பத்தக்கதல்ல.
பயமுறுத்தும் பதின்மூன்றும், ஐ.நா விசாரணையும்
ஐ.நா. விசாரணை குழுவை நாட்டிற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தி, அதனைச் செயலற்றதாக அல்லது வலுவற்றதாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் குழப்பகரமான நிலைமையிலேயே காணப்படுகின்றது. பாராளுமன்றத்தில் இந்த விடயத்தைப் பரிசீலனை செய்து மக்கள் பிரதிநிதிகளின் முடிவாக அதனை வெளிப்படுத்துவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக இருந்தாலும், ஜனாதிபதி இந்த முடிவை மேற்கொள்வதிலும் பார்க்க, பாராளுமன்றத்தின் முடிவாக அது வெளிப்படுத்தப்படும் போது, அது கனமாக இருக்கும் என்று அவர் கருதுகின்றாரோ தெரியவில்லை.
அவ்வாறு வரும் போது, அதற்கு ஓர் அரசியல் ரீதியான ஒரு கனம் இருக்கும் என்பது அவருடைய எதிர்பார்ப்பாக இருக்கலாம். இதற்கான முன்மொழிவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. ஐ.நா விசாரணை குழுவை நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இந்தப் பிரேரணையை சமர்ப்பித்திருக்கின்றார்கள். ஐ.நா. விசாரணை என்பது சர்வதேச மட்டத்திலானது.
அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்காக பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வருவதும், அதுபற்றி விவாதிப்பதும் பயனில்லாத ஒரு முயற்சி என்பது பிரதான எதிர்க்கட்சியின் நிலைப்பாடாகத் தெரிகின்றது. யுத்தத்தில் பெற்ற வெற்றிக்கு உரிமை கொண்டாடுகின்ற ஜனாதிபதியும், அரசாங்கமும், அதற்கான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதைவிடுத்து, அதனை ஏனைய கட்சிகள் மீது சுமத்துவதற்காகவே பாராளுமன்றத்தில் முடிவெடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டிருக்கின்றது என்று ஜே.வி.பி. சாடியிருக்கின்றது.
அரச ஆதரவு கட்சிகளான பேரின தீவிரவாத கட்சிகளைத் தவிர்ந்த ஏனைய கட்சிகளும் இதனை விரும்பவில்லை என்பதையே சமிக்ஞை காட்டியிருக்கின்றது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக அழித்தொழிக்க வேண்டும் என்பதில் அரசாங்கத்துடன் இணைந்து குரல் கொடுத்துச் செயற்பட்டிருந்த பல அரசியல் கட்சிகள், அந்த யுத்தத்தின் உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத ஒரு போக்கையே காண முடிகின்றது.
யுத்தகாலத்து உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டபோது, இந்தியாவின் உதவியைப் பெரிதாகக் கருதி, அதனைப் பெற்றுக்கொள்வதற்காகப் பகீரத முயற்சிகளை மேற்கொண்டிருந்த அரசாங்கமும், அதற்கு முண்டு கொடுத்திருந்த பேரின தீவிரவாத அமைப்புக்களும், ஐ.நா. விசாரணை குழுவை நாட்டிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இந்தியாவைக் கருத்திற் கொள்ளவில்லை. ஐ.நா. விசாரணை குழுவைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்தியாவின் உதவியை அவர்கள் நாடவில்லை.
மாறாக, பதின்மூன்றாவது அரசியல் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இந்தியாவின் புதிய அரசாங்கத்தைக் கண்டிப்பதிலேயே கவனமாக இருக்கின்றன. இந்திய அரசுக்கும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் எதிராக அந்த பேரின தீவிரவாத அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கொடும்பாவி எரித்திருக்கின்றன. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகளைத் தணிப்பதற்கு இந்தியாவின் உதவியை நாடியிருந்த, இலங்கை அரசும் அதன் தீவிர அரச ஆதரவு அமைப்புக்களும், ஐ.நா. விசாரணை குழுவின் வருகை என்ற மோசமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள வேளையில் இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் வகையிலான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன.
இந்தியாவில் பதவியேற்றிருக்கின்ற புதிய அரசாங்கம் இலங்கை இந்திய உறவுகளில் எத்தகைய நிலைப்பாட்டை முன்னெடுக்கும் என்பதுபற்றிய தெளிவாகத் தெரியாத ஒரு நிலையில் அந்த அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று தயான் ஜயதிலக்க போன்ற ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றார்கள்.
அச்சுறுத்தல்களாக வந்துள்ள ஐ.நா. மன்ற விசாரணை குழுவையும், முற்றாக இல்லாமல் செய்வதுவிட வேண்டும் என்று விரும்புகின்ற பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்ற இந்தியாவின் புதிய அரசாங்கத்தையும் பேரின தீவிரவாத சிந்தனையில் மூழ்கியுள்ள அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-செல்வரட்ணம் சிறிதரன்-