யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விவசாய
பீடம் இன்று 14-06-2014 கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 03 திகதி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீடம் யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து சென்றது.தொடர்ந்து இன்று வரை அது யாழ்ப்பாணத்திலேயே இயங்கி வந்தது. இந்த நிலையில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் 567 ஏக்கர் நிலத்தில் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்கள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் பொறியியல் பீட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று விவசாய பீடமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இருபது வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கிளிநொச்சியில் விவசாயபீட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய மற்றும் இலங்கை அரசின் 700 மில்லியன் ரூபாக்கள் இது வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை எட்டு மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் எஸ்பி. திஸநாயக்க, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்,
யாழ் பல்கலைகழத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் விவசாய பீட பீடாதிபதி திருமதி சிவமதி சிவச்சந்திரன், ஆகியோர் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய பீட கட்டடத் தொகுதிகளை திறந்து வைத்து விவசாய பீடத்தின் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்துள்ளனர். இதன் போது உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ரனேபுர, அமைச்சின் திட்டப்பணிப்பாளர் அபோன்ஸ், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், வட மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி விஜயலக்சுமி, கிளிநொச்சி
முல்லைத்தீவு பிரதேச பிரதி பொலீஸ்மா அதிபர் திஸநாயக்க,மற்றும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகத்தினர், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.