இங்கிலாந்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் மைதானத்தில் கோல் போட்ட மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் மைதானத்திலேயே உயிரிழந்த சோக சம்பத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்தில் உள்ள மென்செஸ்டர் என்ற இடத்தில் உள்ள ஒரு உதைப்பந்தாட்ட மைதானத்தில் மெத்தியூ பேர்கஸ் என்ற 20 வயது இளைஞர் உள்ளூர் போட்டி ஒன்றில் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். இதன்போது அவரது நண்பர்கள் கடத்திய பந்தை மிக லாவகமாக விளையாடி கோல் போட்டார். கோல் போட்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்த மெத்தியூக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனால் மைதானத்திலேயே நினைவிழந்தார்.
மெத்தியூ பேர்கஸின் நண்பர்கள் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர். வைத்தியசாலையில் அவரை பரிசோதித்த பின் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர்தான் அவர் மைதானத்திலேயே இறந்துவிட்டது தெரிய வந்தது. மெத்தியூ பேர்கஸின் மரணமடைந்த செய்தியை கேட்டதும் அவரது தாய் சாரா, பாட்டி ஹல்டா கிரகரி மற்றும் அவரது சகோதரி எமி ஆகியோர் கதறி அழுதனர்.
சரியாக ஏழு வருடங்களுக்கு முன் இதே நாளில்தான் மெத்தியூ பேர்கஸ், தந்தையும் நெஞ்சு வலியால் மரணம் அடைந்ததாக அவரது தாய் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.