தமிழீழ விடுதலைக்கான அத்தனை சாதகங்களும்
இப்போது ஒன்றுகூடி வருகின்றது. இது ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கும், சிங்கள இனவாதிகளுக்கும் பெரும் கலக்கத்தைக் கொடுத்துள்ளது. அதன் காரணமாக, குறைந்த பட்சத் தீர்வு ஒன்றுக்குள் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளைப் புதைத்து விடுவதற்கான முயற்சிகளும் சிங்கள ஆட்சியாளர்களிடம் வெளிக்கிளம்பியுள்ளதையும் உணர முடிகின்றது. அதற்குச் சாதகமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வளைத்தெடுக்கும் முயற்சியும் சிங்களத் தரப்பால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்தச் சாதகங்கள் அத்தனையையும் சரித்திரங்களாக மாற்றும் பொறுப்புக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே உள்ளது. ஏனெனில், அனைத்துலக ஜனநாயகப் பார்வையில் தமிழீழ மக்களுக்குத் தலைமை தாங்குபவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே உலகம் நோக்குகின்றது. அந்த முடிசூடலுக்குத் தாம் பொருத்தமானவர்கள்தான் என்பதை நிரூபிக்கும் கட்டாயமும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு தளங்களின் இயங்கு சக்தி, தமிழ்த் தேசிய விடுதலைக்கான சாத்தியப்பாடுகளை அதிகரித்து, அதனை உச்ச நிலைக்குத் தள்ளியுள்ளன.
அது, தற்போது உடனடியாகவே தீர்வு காணவேண்டிய தவிர்க்க முடியாத பிரச்சினையாக உலகத் தளத்திலும், பிராந்திய அரசியலிலும் பலத்த அழுத்தங்களை உருவாக்கியுள்ளது. இது, தமிழீழ மக்களுக்குக் கிடைத்துள்ள மூன்றாவது சந்தர்ப்பமும், இறுதிச் சந்தர்ப்பமுமாக இருக்கலாம். இதனைக் கையாள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதி உச்ச அரசியல் சாணக்கியம் எவையும் தேவையில்லை. தடுமாற்றங்களற்ற நேர்மையான அரசியல் சிந்தனை மட்டுமே போதுமானதாக இருக்கும்.
வரலாற்றுப் பாதையின் நிதர்சனங்களூடாக, சிங்கள - தமிழ் முரண்பாடுகள் சரியாகப் புரிந்துகொண்டிருந்தால், இலங்கைத் தீவிற்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் வழங்க முற்பட்டபோது, ஜின்னா பாகிஸ்தானை மீட்டது போல், அன்றைய எங்கள் தமிழ்த் தலைவர்கள் எங்களுக்கான நாட்டை மீட்டுத் தந்திருப்பார்கள். அந்த வரலாறு வழங்கிய சந்தர்ப்பம் தமிழர் தரப்பால் தவறவிடப்பட்டது.
அதன் பின்னரான 30 ஆண்டு காலத்தில் தமிழர்களுக்கான மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக நடாத்தப்பட்ட அத்தனை சாத்வீகப் போராட்டங்களும் சிங்கள அரசுகளால் வன்முறைகள் கொண்டு அடக்கப்பட்ட காரணத்தால், அதன் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் அதி உச்சம் பெற்றிருந்த வேளையில், அதை முன்னகர்த்திப் பெற்றிருக்க வேண்டிய தமிழீழ விடுதலையும் சர்வதேச சதியினாலும், துரோகங்களினாலும் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பு யுத்தத்தினால் சாத்தியமற்றதாக்கப்பட்டது.
அப்போது சாதித்த மெனங்களின் தவறுகளின் தவறுகள் காலம் தாழ்த்தியே உலக நாடுகளால் உணரப்பட்டது. விடுதலைப் போர்க் களத்தில் தமிழீழ மக்கள்மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களின் ஆதாரங்கள் தமிழீழ விடுதலைக்கான தளத்தை இன்னொரு பரிமாணத்திற்கக் கொண்டு சென்றுள்ளது. அது, சிறிலங்கா ஆட்சியாளர்கள் மீதான ஐ.நா. மனித உரிமைகள் மையத்தின் விசாரணைக்கும் வித்திட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களது தொடர் போராட்டங்கள் விடுதலைத் தளத்தின் ஒரு போர் முனையை அனைத்துலக தளத்தில் முன்நகர்த்திய சம காலத்தில், தமிழகம் இன்னொரு போர்முனையைத் திறந்தது.
இறுதிப் போர் காலத்தில் இடம்பெற்ற அவலங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீகக் கடமையிலிருந்து தாம் தவறியதான குற்ற உணர்ச்சியில் ஆழ்ந்த தமிழகம் அதற்குப் பிராயச்சித்தம் தேட முற்பட்டது. முத்துக்குமாரன் முதல், செங்கொடி வரை தம்மைத் தாமே எரித்து, தமிழகத்து மக்களைப் போர்க் களம் நோக்கி நகர்த்தினார்கள். தமிழகத்தின் பல்வேறு அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் தமிழகத்தின் முதன்மைப் பிரச்சினையாக ஈழப் பிரச்சினையை முன்நிறுத்தினார்கள். தமிழினப் படுகொலையின் சூத்திரதாரிகளான காங்கிரஸ் கட்சியும், மௌனம் காத்தே தமிழினப் படுகொலையை அங்கீகரித்த தி.மு.க. கட்சியும் தமிழகத்திலிருந்தே துடைத்தெறியப்பட்டது.
வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களுடன் செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சர் ஆனார். ஈழத் தமிழினத்திற்கு நீதியும், நிச்சயமான எதிர்காலமும் கிடைக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தீர்மானங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றார். அண்மையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புது டெல்லியில் சந்தித்த தமிழக முதல்வர், அவரிடமும் ஈழத் தமிழர்கள் சார்பான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
‘இந்தியா ஐ.நா. வில் ஒரு தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என்று நான் கோருகிறேன். அதில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையைக் கண்டிப்பதோடு அதில் தொடர்புடையவர்கள் அனைவரும் பொறுப்பாக்கப்படுவதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதோடு மேற்படி தீர்மானமானது சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் உலக பூராகவும் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் தனித் தமிழ் ஈழத்துக்கான ஒரு பொது வாக்கெடுப்பையும் கோர வேண்டும்’ என அவர் பிரதமரிடம் கையளித்த மனுவில் கோரியுள்ளார்.
தமிழீழ மக்களுக்கு எந்த வகையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் புலம்பெயர் தமிழர்கள் உறுதியாகவே உள்ளார்கள். தமிழீழம் என்பதைத் தவிர அதற்கும் குறைவானதொரு தீர்வை அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தயாராக இல்லை என்பதை இன்றுவரை தொடர்ந்தும் வலியுறுத்தியே வருகின்றார்கள். தமிழக மக்களின் தமிழீழ மக்கள் சார்ந்த தீர்மானம் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் இடைவெளிகளற்ற இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் வாழும் தமிழர்கள் அவ்வப்போது தமது உணர்வுகளை வெளிப்படுத்தினாலும், அவர்களது விருப்பங்களையும், எதிர்பார்ப்புக்களையும், தீர்மானங்களையும் அனைத்துலக பரப்பிற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வழங்கியுள்ளார்கள். இப்போது, அதற்கான தேவை அதி உச்ச நிலையை எட்டியுள்ளது.
இனி வரும் சில நாட்களில், சிறீலங்கா மீதான ஐ.நா. மனித உரிமைகள் அவையின் போர்க் குற்ற விசாரணைகள் ஆரம்பமாகிவிடும். அது சிங்கள இனவாதத்தின் கோர முகத்தினை நிச்சயம் வெளிச்சமிட்டுக் காட்டப் போகின்றது. இன்னொரு புறத்தில், தமிழகத்தின் அழுத்தங்கள் காரணமாக இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் உருவாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. காங்கிரஸ் ஆட்சியாளர்கள்போல், சிங்கள அரசை அனைத்துலகத் தளங்களில் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் எதுவும் மோடி அவர்களுக்குக் கிடையாது என்பதனால், நீதியின் பக்கம் நிற்கவேண்டிய நிலை அவருக்கு ஏற்படும் என்றே எதிர்வு கூறப்படுகின்றது.
இப்போது, உலகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தையே செவி மடுக்கக் காத்திருக்கின்றது. அதே வேளையில், தம்மைக் காப்பாற்றும் தகைமையுள்ள இரட்சகர்களாக சிங்கள ஆட்சியாளர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே நம்பியுள்ளனர். பலவீனப்படுத்தப்பட்ட 13ஐ ஏற்றுக்கொள்ள வைப்பதில் சிங்கள தேசம் அதிக அக்கறையைக் காட்ட முனைந்துள்ளது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் உரிமை பெற்று வாழ்வதையே தமிழீழ மக்கள் விரும்புகின்றார்கள் என்ற கருத்தியலை சிங்கள தேசத்தின் விருப்புகளின் அடிப்படையில் முன்வைக்கும் முனைப்பும் காட்டப்படுகின்றது. அதன் பிரதிபலிப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைகளிலும், கருத்துக்களிலும் காண முடிகின்றது.
தமிழீழ மக்களுக்கு முன்னெப்போதும் கிடைத்திராத சாதகமான சர்வதேச, பிராந்திய சாதக நிலமைகள் இப்போது உருவாகியுள்ளது. இதனை, சரியான வகைகளில் கையாள்வதிலேயே தமிழீழ மக்களது எதிர்காலம் தங்கியுள்ளது. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சரியான தருணத்தில், சரியான தீர்மானங்களை முன்மொழிந்துள்ளார். அதற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ மக்களது விருப்பங்களை வெளிப்படுத்த வேண்டும்.
தமிழீழ மக்கள் கேட்காத, அவர்களது பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொல்லாத தீர்வினைத் தமிழக முதல்வர் தன்னிச்சையாக முன்மொழிகின்றார் என்ற பலவீனப்படுத்தல்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரணமாக இருக்கக்கூடாது. தமிழீழ மக்களது விருப்பங்களையும், அரசியல் அபிலாசைகளையும் உறுதியாக வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. இதை உணர்ந்து, இனியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் கடமையைச் செய்யுமா?
நன்றி: ஈழமுரசு