சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து, விசாரிக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து, விசாரிப்பதற்கான, விசாரணைக் குழுவை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை விசாரணை நியமித்துள்ளதற்கு சிறிலங்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறித்து, நேற்று நியுயோர்க்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்-
“ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு, ஐ.நா பொதுச்செயலர் ஆதரவளிக்கிறார்.
சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை முன்னேற்றுவது மற்றும் நல்லிணக்கத்துக்கு உதவும் வகையில், அவரது செயற்பாடுகள் இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் உள்ள சவால்களையும், போருக்குப் பிந்திய செயல்முறைகளில் உள்ள சிக்கல்களையும் ஐ.நா பொதுச்செயலர் முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளார்.
எனவே, மனிதஉரிமைகளுக்கு மதிப்பளிக்கும் உள்நாட்டுச் செயல்முறைகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும், சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்திக் கொள்வதற்கும், அனைத்துலக சமூகத்துடன் சிறிலங்கா அரசாங்கம் ஆக்கபூர்வமான முறையில் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.