தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழக
அரசுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படாதென நம்புவதாக வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அரசியல் ஸ்திர தன்மையில் தமிழகம் தொடர்புபட்டுள்ளதாக தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் சி.வி விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடனடித் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை மோடி நன்றாக அறிந்துவைத்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் வட மாகாண சபை ஏன் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என இதன்போது கேள்வி எழுப்பட்டபோது ஆரம்பகாலத்தில் வட மாகாண சபை நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் பின்னர் கடல்சார் பிரச்சினைகள் மத்திய அரசாங்கத்தின் கீழ் வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சர் இலங்கை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்படுவதால் தாம் பின்நிற்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும் தேவையேற்படும் பட்சத்தில் வட மாகாண சபை மீனவர்கள் பிரச்சினையில் தலையீடு செய்வதாக குறிப்பிட்ட சி.வி விக்னேஸ்வரன் ஜனநாயக ரீதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் கூறினார்.