நாம் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றோம். மக்களுக்கு நல்வாழ்வு கிட்டச் செய்வதே ஜனநாயகத்தின் குறிக்கோளாகும். ஜனநாயக நாட்டில் வாழும் மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமையுமுண்டு. ஜனநாயம் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பை நிறைவு செய்வதில்லை.
கொண்டிருக்கின்றோம். மக்களுக்கு நல்வாழ்வு கிட்டச் செய்வதே ஜனநாயகத்தின் குறிக்கோளாகும். ஜனநாயக நாட்டில் வாழும் மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமையுமுண்டு. ஜனநாயம் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பை நிறைவு செய்வதில்லை.
எந்தவொரு இனத்திற்கு எதிராகவும் அதிகாரம் செயற்பட ஜனநாயகம் அனுமதிக்கவுமில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஜனநாயகம் அதன் நிலையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். சம உரிமையுடன் வாழ வழியமைக்க வேண்டும். அந்த உரிமை பறிக்கப்படுகின்றபோது அல்லது நசுக்கப்படுகின்றபோது ஜனநாயகம் தனது வடிவத்தை மாற்றிக்கொள்வதாகவே புரியப்படுகிறது.
சிறுபான்மை சமூகம். எந்தவொரு சமூகமும் இன்னுமொரு சமூகத்தை அடக்கியொடுக்கி வாழ விரும்பக் கூடாது. ஒரு சமூகத்தினர் அல்லது ஒரு இனத்தினர் மற்றைய சமூகத்தை இழிவுபடுத்தி, தாழ்த்தி, பொருளாதாரத்தைப் பிடுங்கி வாழ விருப்பம் கொள்ளக் கூடாது. எந்தவொரு இனத்தின் மத்தியிலும் இன்னுமொரு இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் மனப்பாங்கு ஏற்படுத்தக் கூடாது.
அவ்வாறு ஏற்படுகின்றபோது இன முரண்பாடுகளும். அமைதியின்மையும் வன்முறைகளும் தோற்றம் பெறுகின்றன. உலகிலுள்ள ஜனநாயக நாடுகளில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்காத நெருக்கடிகளை இந்நாட்டில் வாழும் தமிழ், - முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்குகின்றன என்று கூறுவதில் தவறேதும் இருக்க முடியாது.
உலகிலுள்ள ஜனநாயக நாடுகளின் தரவரிசைப்படி முதன்மை பெறுகின்ற சுவிடன், டென்மார்க், பின்லாந்து, நோர்வே, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து , பெல்ஜியம், அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, அயர்லாந்து, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் சிறுபான்மை சமூகங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்நாடுகளிளெல்லாம் இனவாதம் தலைவிரித்தாடவில்லை.
ஒரு ஜனநாயக நாடு என்பது அந்த நாட்டில் வாழுகின்ற ஒரு இனத்திற்கு் மட்டும் சொந்தமானதல்ல. ஏனெனில் அந்த நாட்டின் அரசாங்கத்தை தெரிவு செய்வது ஒரு இனம் மாத்திரமல்ல. அந்த நாட்டில் வாழுகின்ற எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும்தான் வாக்களித்து அரசாங்கத்தை உருவாக்குகிறார்கள். எல்லா இன மக்களும்தான் அந்த அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறார்கள்.
இவ்வாறான நிலையில் இந்த நாட்டிலுள்ள அரசாங்கமும், பாதுகாப்புத்தரப்பும் ஒரு இனத்திற்குரியது என அழிச்சாட்சியம் புரியும் பேரினவதாக அமைப்புக்கள் கூக்குரல் இடுவதில் எவ்வித நியாயமுமில்லை. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் இந்த நாட்டில் பரம்பரை பரம்பரையாக வாழும் தமிழ் இனமும் முஸ்லிம் இனமும் இந்த நாட்டுக்குரிய மக்கள்தான்.
இந்த நாட்டில் பிறந்து இந்நாட்டுத் தண்ணீரைக் குடித்து, இந்நாட்டின் காற்றைச் சுவாசித்து வாழும் இந்த இரு இனமும் இன்னுமொரு நாட்டிக்குச் சென்று வாழ முடியாது. இந்த நாடும் இந்த இரு இனத்திற்கும் சொந்தமானதுதான். தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2012ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் பிரகாரம் 20,263,723 மக்கள் தொகையை இலங்கை கொண்டுள்ளது.
2011ஆம் ஆண்டின் தரவுகளின் பிரகாரம் இலங்கையில் 74.9 வீத சிங்களவர்களும் இலங்கை மற்றும் இந்தியத் தமிழர்கள் 11.2 வீதமாகவும் 9.2 வீதம் முஸ்லிம்களும் 4.2 வீதத்தினர் ஏனையவர்களாகவும் உள்ளனர். இவ்வாறு இந்நாட்டில் வாழும் இனங்களின் பரம்பல் காணப்படுகிறது. இருந்தும் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கெதிராக பேரினவாதம் நெடுங்காலமாக நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
சுதந்தரத்திற்கு முன்னரான காலத்திலும் சுதந்திரத்தின் பின்னரான காலத்திலும் இவ்விரு சிறுபான்மை சமூகங்களை நோக்கி இனவாதம் அதன் கைவரிசையை மிக இலாவகமாக நீட்டியிருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்னரான கால கட்டத்தில் இருந்த நிலையிலும் பார்க்க சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் பேரினவாதம் தமிழ் சமூகத்தை மோசமாக இம்சைப்படுத்தியது.
இத்தகைய இனவாதத்தின் நெருக்கடிகளிலிருந்தும், வெறுத்தலிலிருந்தும், புறக்கணிப்பிலிருந்தும், ஆதிக்கத்திலிருந்தும் தாம் அங்கம் வகிக்கும் சமூகத்தை ஜனநாயக ரீதியாகக் காப்பாற்றவும், அஹிம்சை வழியில் உரிமைகளை பெற்றுக்கொள்ளவும் முடியாத நிலை உருவானபோதுதான் தமிழ் சமூகத்திலிருந்து போராட்டக் குழுக்கள் தோற்றம் பெற்றன என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
1956, 1958, 1974, 1981 என இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக பேரினவாதம் திட்டமிட்டு அவ்வப்போது மேற்கொண்ட கொடூர வன்முறைக் கலவரங்களின் தொடராகவே 1983ஆம் ஆண்டில் கலவரமும் ஏற்பட்டது. அதன் விளைவு நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவு கொள்ளவும் அங்கவீனமாக்கவும், இடம்பெறச் செய்யவும் சொத்துக்களை இழக்கச் செய்யவும் செய்ததை வரலாறு இன்னும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறது.
கறுப்பு ஜூலை 23 இற்றைக்கு ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்னரான 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதிய அந்நாளை சற்று புரட்டிப்பார்க்கின்றவேளை 2014 ஜூன் 15ஆம் நாளில் அளுத்கமையிலும் தர்ஹா நகரிலும் நடந்தேறிய இனவெறியாட்டத்தின் கொடூரம் அந்நாளின் கொடூரத்தைப் புடம்போடுகிறது.
1983 ஜூலை மாதம் நடந்த தமிழ் மக்களுக்கெதிரான பேரழிவுக் கலவரம் இலங்கை வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு முந்திய கலவரங்களைக் காட்டிலும் தலைநகர் கொழும்பில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பல மடங்கு அழிவுகளை உண்டாக்கியிருந்தது. அதிகளவிலான உயிரிழப்புக்களும் சொத்தழிவுகளும் ஏற்பட்டன. தமிழருக்குச் சொந்தமான பெட்டிக்கடை முதல் பலசரக்குக்கடை வரை அழிக்கப்பட்டன.
தொழில்வாய்ப்பற்ற அப்பாவி சிங்கள வாலிபர்கள் இனவெறியூட்டப்பட்டு அப்போதைய ஆளும் கட்சியின் ஆசிர்வாதத்துடன் அழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 13 படையினர் புலிகளினால் கொல்லப்பட்டதற்காக இந்தக்கலவரம் மூண்டது. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன தமிழர்கள் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
இவ்வாறு தமிழ் மக்களின் மனங்களை ரணங்களாக்கி அந்த கறுப்பு வரலாறு சொல்லிக்கொண்டிருக்கிறது. அதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட பெரும் அழிவாகவே 2009 மேயில் நடந்த முள்ளிவாய்க்கால் அழிவுகளை தமிழ் மக்கள் நினைவு கூருகிறார்கள். அதன் எதிரொலி இன்று இலங்கை நாட்டை சர்வதேசம் மிக உன்னிப்பாகப் பார்க்கச் செய்துள்ளது.
இவ்வாறு நாடு இக்கட்டான நிலைமையில் உள்ளபோது, இந்நாட்டின் மீது பற்றுவைத்துள்ளோம் எனக் கூறும் பேரினவாதிகளும் சிங்கள கடும்போக்கு மதவாதிகளும் மற்றுமொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களையும் அவ்வப்போது சீண்டிப்பார்க்கிறார்கள் 1915ஆம் ஆண்டு முதல் இந்தச் சீண்டிப்பார்த்தல் அவ்வப்போது இடம்பெற்று வருகிறது. 1915 மே 28ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 5ஆம் திகதி வரை நீடித்த பேரினவாதத்தின் பேயாட்டங்களினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன் சொத்தழிவுகளும் இடம்பெற்றதாக சரித்திரம் கூறுகிறது.
அந்த சரித்திரத்தின் ஒரு நூற்றாண்டுக்கு இன்னும் ஓராண்டு இருக்கையில் கடந்த ஜூன் 15ஆம் திகதி பேரினவாதத்தின் பேயாட்டம் தர்ஹா நகரிலும் அளுத்கமயிலும் பேருவளையிலும் வெலிப்பனையிலும் அரங்கேரியுள்ளன. கறுப்பு ஜூன் 15 பௌத்த பிக்குவை ஏற்றி வந்த வாகன சாரதிக்கும் முச்சக்கர வண்டி சாரதிக்குமிடையே இடம்பெற்ற தனிநபர் பிரச்சினை ஒரு சமூகத்தை நிலைகுலையச் செய்துள்ளது.
பேரினவாதத்தின் இறுதி இலக்கை நிறைவேறச் செய்துள்ளது. கறைபடிந்த கறுப்பு ஜூனாக வரலாற்றில் எழுதச் செய்துள்ளது. பேரினவாதத்தின் வெறியாட்டம் முஸ்லிம்களின் உயிர்களைக் காவுகொண்டு உடல்களை குருதிபாயச் செய்து வீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் வழிபாட்டுத்தலங்களையும் எரியுட்டியுள்ளது.
மாணவர்களின் கல்வி அடையாளத்தை அழித்துள்ளது. பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளைப் பாதித்து சின்னஞ்சிறார்களின் சின்ன மனங்களில் அழியாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் பரீட்சைகளுக்கு தயாராகும் காலத்தில் அவர்களை உளவியல் ரீதியாக பாதிப்படையச் செய்துள்ளது. அரச உத்தியோகத்தர்களின் ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என ஒட்டுமொத்த அப்பிரதேச முஸ்லிம் மக்களும் அச்சத்திலிருந்து மீளமுடியாது உள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இத்தனைக்கும் இந்த பொதுபல சேனாவின் செயலாளர் அத்தே ஞானசார தேரரே காரணமென பல தரப்புக்களிலிமிருந்து கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
முஸ்லிம்களை நெருக்கடிக்குள் தள்ள வேண்டுமென்பதற்காக உருவான பொதுபல சேனா அமைப்பும் அதன் வழிகாட்டியும் இன்றுவரை இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் அராஜக நடவடிக்கைகளின் பட்டியல் மிக நீளமாக நீண்டு கொண்டு செல்கிறது.
மியன்மார் (பர்மா) அராகன் மாநிலத்தில் ரோகின்கியா முஸ்லிம்கள் எவ்வாறு தாக்கப்பட்டார்களோ எவ்வாறு ஒடுக்கப்பட்டு வருகிறார்களோ அதேபாணியில் அளுத்கம மற்றும் தர்ஹா நகர் முஸ்லிம்களும் தாக்கப்பட்டுள்ளார்கள் என்ற கருத்தும் வெளிவந்துகொண்டிக்கிறது.
2012ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் பர்மா முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தொடங்கின. 2012ஆம் ஆண்டுதான் பொதுபல சேனாவும் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பொதுபல சேனாவும் அதன் செயலாளர் ஞானசார தேரரும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தீயினை அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் மூட்டி வருகின்றனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
அரசாங்கம் இன ஒடுக்குமுறைக்கு எதிரானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். அனைத்து இன மற்றும் மதங்களையும் மதிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய நிலைப்பாட்டிலுள்ள ஜனாதிபதிக்கு சமாதானம் ஜனநாயகம் ஆகியவற்றுக்கான பங்களிப்புக்கான விருது கடந்த திங்கட்கிழமை பொலிவியாவில் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன ஒடுக்குமுறையை மேற்கொண்டு வருகின்ற பொதுபல சேனா தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருவது தொடர்பில் அரசாங்கம் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை என பல்வேறு தரப்புக்களிலிருந்து வெளிவரும் கருத்துக்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டியதாகும்.
அண்மைக் காலங்களில் முஸ்லிம் மக்களுக்கும் அவர்களது பள்ளிவாசல்களுக்கும் எதிராகப் பேரினவாதிகளும் பௌத்த மத அடிப்படைவாதிகளும் மேற்கொண்டு வந்த மிகமோசமான பிரசாரங்களினதும் நடவடிக்கைளினதும் ஒரு பகுதியே அளுத்கம முஸ்லிம் மக்கள் மீதான வெறித்தனத் தாக்குதல்களாகும்.
இத்தகைய திட்டமிட்ட தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு பௌத்த அடிப்படையவாத அமைப்பான பொதுபல சேனாவையும் அதனை ஒத்த ஏனைய பேரினவாத வெறிபிடித்த அமைப்புக்களையும் தடை செய்வதே ஒரேவழியாகும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியற் குழு சார்பாக பொதுச் செயலாளர் செந்தில்வேல் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா இயக்கத்தின் வன்முறைசார்ந்த நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதற்கான காரணம் புரியவில்லை. .கடும்போக்கு அமைப்புக்கள் கடுமையான பயங்கரவாதப் பாணியில் செயற்பட்டு வருவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மதங்களால் சிறுபான்மையினராக வாழும் மக்களின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும். பொதுபல சேனாவின் பேரணி ஒன்றை அடுத்தே இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இது அண்மைக்காலப் பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற பாரிய இனக்குரோத நடவடிக்கையாகும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
இவ்வாறு பொதுபல சேனாவின் தடை குறித்த கருத்துக்கள் பலமாகவும் வலுவாகவும் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் அளுத்கம அழிவுகளுக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற கூட்டத்தில் பொதுபல சேனாவின் செயலாளர் தான் ஒரு பிக்கு என்பதையும் தன்னுடைய கைகளையும் கால்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனை, சுயகட்டுப்பாடுள்ளவனை பிக்கு என்று கூறுங்கள் என கௌதம புத்தர் கூறியுள்ளதையும் மறந்து இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றது.
இன்று ஒரு மரக்கலயா அல்லது பறையா ஒரு சிங்களவனைத் தொட்டாலும் அதுவே அவர்களுடைய முடிவாகும் என்று கூறி கூடியிருந்த சிங்கள வாலிபர்களின் மனங்களில் இனவாதத் தீயை எரியச் செய்து அளுத்கமை அழிவுகண்ட கறுப்பு ஜூன் ஆக மாற்றுவதற்கு வழியமைத்துள்ள ஞானசார தேரர் நாம் இனவாத அமைப்பென்று பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிறுபான்மை மக்களை அடக்கவோ,முஸ்லிம்களை அழிக்கவோ நாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. எமது நோக்கம் பௌத்த மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதே யாகும். அதற்காகவே போராடிக் கொண்டிருக்கின்றோம். அதேபோல் எம்மை அரசாங்கத்தின் பங்காளிகள் எனவும் அரசாங்கத்தின் அடியாட்களெனவும் தற்போது நாம் புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடன் செயற்படுவதாகவும் பொய்யான குற்றச் சாட்டுக்களைச் சுமத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
ஒருபோதும் நாம் முஸ்லிம் இனத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தவில்லை. முஸ்லிம்கள் செய்யும் மிகப் பெரிய தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ளோம். நாட்டிற்கு எதிராக அவர்கள் செயற்படும்போது எதிர்த்துள்ளோம். இவை அனைத்தும் குறித்த ஒரு சில முஸ்லிம் அமைப்புக்ளுக்கு எதிரானதே தவிர அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிரானதல்ல.
அளுத்கம சம்பவத்தில் நாம் அமைதியாகச் செயற்பட்டும் முஸ்லிம்களே வன்முறையினை கையாண்டனர். இதற்கு சிங்கள மக்கள் விரும்பாத நிலையில் அப்பகுதி கலவர பூமியாக மாறியது என ஞானசார தேரர் முழு பூசணிக்காயையும் சோற்றுக்குள் மறைத்தாற்போல் தெரிவித்திருக்கிறார்.
அவர் தொடர்பிலும் அவரது அமைப்பு தொடர்பிலும் சர்வதேசத்திலும் உள்ளூரி லும் எழுந்துள்ள கருத்துக்களுக்கும் கோஷங் களுக்குமான விடை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையில் தங்கியுள்ளதுடன் அதுவே இனவாதத்தீயினால் வலிகளைச் சுமந்து வாழும் மக்களின் உள்ளார்ந்த பாதிப்புக்கான வலி நிவாரணியாகவும் இந்நாட்டில் சகவாழ்வும் சமாதானமும் ஜனநாயகமும் வளர்வதற்கான உரமாகவும் அமையவுள்ளது.
இந்நிலையில் இதற்கான காலம் எவ்வளவு என்பதே மக்களின் இன்றைய வினாவாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.