சிறிலங்காவில் 13வது திருத்தச்சட்டம் முழுமையாக –
முற்றிலுமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே, எமது நிலைப்பாடு என்று இந்தியாவை ஆளும் பாஜகவின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரும், வர்த்தக மற்றும் தொழிற்றுறை அமைச்சருமான நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளவர் அளித்துள்ள செவ்வியில் மேலும் கூறியுள்ளதாவது.
கேள்வி – புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்கா இனப்பிரச்சினைக்கான பாஜகவின் நடவடிக்கையாக இதனைக் கருத முடியுமா?
பதில் – இல்லை. இது தொடக்கம். எவ்வாறாயினும், எமது அயல்நாடு அமைதியை அடைவதற்கு உதவுவதும், பழைய கடப்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்வதுமே பாஜகவின் பங்கு. சிறிலங்காவின் ஏனைய செயல்முறைகள் தொடர வேண்டும். இந்தியா தலையிடாது – ஆனால், உதவும்.
கேள்வி – இந்த கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஏன் அவசரம் காட்டப்படுகிறது?
பதில் – இது ஒன்றும் புதிதான விவகாரங்களல்ல. பழைய உடன்பாடுகள். அவற்றை நிறைவேற்றுதல் சிறிலங்காவின் நலன்களுக்கு நல்லது.
கேள்வி – 13 பிளஸ் குறித்து இந்தியா வலியுறுத்துமா?
பதில் – ஒரு தீர்வை எட்டுவது சிறிலங்கா நிர்வாகத்தினதும் மக்களினதும் கைகளிலேயே உள்ளது.
கேள்வி – காணி, காவல்துறை அதிகாரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமா?
பதில் – பாஜகவின் நிலை தெளிவானது. 13வது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே, எமது நிலைப்பாடு. அது முற்று முழுதானது. அதற்கு அப்பால் செல்வதென்பது சிறிலங்காவின் கடப்பாட்டுடன் தொடர்புடைய விவகாரம்.
கேள்வி – இந்த அதிகாரங்கள் பகிரப்படுவதால், பிரிவினைவாதம் ஊக்கம் பெறும் என்ற அச்சம் சிறிலங்காவில் உள்ளது. அந்த அச்சம் இந்தியாவுக்கு இல்லையா?
பதில் – நாம் அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாகவே பேசுகிறோம். நிலைமைகளை கையாளுவதற்கான பொறிமுறைகள் உள்ளன.
கேள்வி – ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் நிலையான அமைதியை எட்டுவதே இந்தியாவின் நிலைப்பாடு.
பதில் – பிரிவினைக்கு எந்தவகையிலும் நாம் ஆதரவளிக்க மாட்டோம். சிறிலங்காவின் பிராந்திய ஒருமைப்பாடு இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.