பயன்படுத்திய நிலம் என்ற போர்வையில் மக்களுக்குச் சொந்தமான நிலத்தை படையினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் நில உரிமையாளர்கள் இதற்கு முழுமையான மறுப்பு தெரிவித்து வருவதுடன் நிலத்தை மீண்டும் தமக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 1990ம் ஆண்டு தொடக்கம் 1995ம் ஆண்டுவரையில் அல்வாய் வடக்கு கிராமத்தில் சுமார் 30 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 128 பரப்பு காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலைகொண்டிருந்தனர்.
இந்நிலை யில் 1995ம் ஆண்டு யாழ்.குடாநாடு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் அந்தப் பகுதியில் புலிகள் இருந்தனர் என்ற போர்வையில் படையினர் அந்த நிலத்தை ஆக்கிரமித்ததுடன், அங்கிருந்த விடுதலைப் புலிகளின் பதுங்குழி ஒன்றினையும் அழித்துவிட்டு கடந்த 4வருடங்களுக்கு முன்னர் இந்தப் பகுதியில் தமது முகாமை அமைத்துக் கொண்டனர். இந்நிலையில் மக்கள் தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த வருடம் குறித்த காணியை சுவீகரிக்கப் போவதாக படையினர் நில உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
இதனையடுத்து கடந்த 28ம் திகதி அந்தப் பகுதிக்கு நில அளவையாளர்களை அழைத்து வந்த படையினர் நிலத்தை அளக்க முற்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் கூடி கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அந்நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் குறித்த பகுதிக்கு நில அளவையாளர்கள் மீண்டும் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் நில உரிமையாளர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சிவயோகம் ஆகியோர் கூடினர்.
எனினும் நில அளவையாளர்கள் அப் பகுதிக்கு வராமல் குறித்த நில அளவைத் திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் கட ந்த 19வருடங்களாக இடம்பெயர்ந்து மாற்றிடங்களில் வாழும் மக்கள், தமக்கு அந்த நிலம் மீள வழங்கப்படவேண்டும் நிலத்தை படையினருக்கு வழங்க முடியாதென உறுதியாக கூ றி வருவதுடன், குறித்த நில ஆக்கிரமிப்பினை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அதற்கான ஒழுங்கமைப்புக்களையும் சட்டத்தரணிகள் உதவியினையும் தாம் பெற்றுக் கொடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளனர்.