முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சம்பந்தர் கடிதம்.. - TK Copy முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சம்பந்தர் கடிதம்.. - TK Copy

  • Latest News

    முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சம்பந்தர் கடிதம்..

    “இலங்கையில் நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான
    கௌரவமான தீர்வு ஒன்று எட்டப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவின் பங்ளிப்புத் தொடரவேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் நாம் கோரியுள்ளோம். இதனை எட்டுவதற்கு உங்களின் முழு ஆதரவு தொடர்ந்து அவசியம் என்று தங்களை வேண்டி நிற்கின்றோம்.!” – இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.

    அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ஈட்டிய பெரு வெற்றியைப் பாராட்டி அவருக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடிதத்தின் முழு விவரம் வருமாறு 

    முதலமைச்சர் அவர்களே, 

    தமிழ் மக்களை, குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கில் வசிக்கும் தமிழ் மக்களை, கணிசமான அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் இம்மடலை வரைகிறேன். கடைசியாக நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் கூட – அச்சுறுத்தும் வகையில் ஆயுதப் படைகள் பிரசன்னமாகியிருந்து தலையீடு செய்த போதிலும் சர்வதேச மற்றும் உள்நாட்டு அவதானிகளின் மத்தியில் இடம்பெற்ற அத்தேர்தலில், எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையின் 38 ஆசனங்களில் 30ஐக் கைப்பற்றியிருந்தது. 

    அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உங்களுக்குக் கிடைத்த பெரு வெற்றிக்கு இலங்கையின் தமிழ் மக்களின் சார்பில் மனப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரி விக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 39 ஆசனங்களில் 37 ஐ வெற்றி கொண்டதன் மூலம், தற்போதைய மற்றும் முன்னைய ஆளும் கட்சிகளுக்கு அடுத்ததாக நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தேசிய ரீதியில் நீங்கள் மிளிர்கின்றீர்கள். இந்த வியப்புக்குரிய பெறுபேறு உங்களின் செல்வாக்கை வெளிப்படுத்தவல்ல நல்ல குறியீடு என்பதும் உண்மையே. தங்களின் பன்முகப்படுத்தப்பட்ட பொறுப்புக்களை வெற்றிரகமாக நிறைவேற்றுவதற்கு தங்களுக்கும் தங்களின் அரசுக்கும் எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். 

    இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதில் தாங்கள் தொடர்ந்து காட்டிவரும் சிரத்தைக்கு நாம் நன்றியாக இருக்கும் அதேசமயத்தில் எங்களிடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் உங்களுடனும் உங்கள் அரசுடனும் நெருங்கிச் செயற்படுவதற்கு எதிர்பார்த்தும் இருக்கிறோம். மீண்டும் வன்முறை இடம்பெறுவதை இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் விரும்பவில்லை. தாமும், இலங்கையில் உள்ள ஏனையோரோடு தத்தம் பிரதேசங்களின் சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றின் அடிப்படையில் சேர்ந்து வாழ்வைக் கொண்டு நடத்துவதையே அவர்கள் விரும்புகின்றனர். 

    1983 ஆம் ஆண்டின் தமிழர் எதிர்ப்பு படுகொலைகளின் தொடர்ச்சியாக, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் இறுதித் தீர்வைக் கொண்டு வருவதற்காக இந்தியா எடுத்த நல் முயற்சிகளை இலங்கை இணங்கி ஏற்றுக் கொண்டிருந்தது. காலத்துக்குக் காலம் இடை யூறுகள் ஏற்பட்ட போதிலும் இந்த முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்தியா தொடர்ந்தும் ஒரு பங்கை ஏற்று, வகித்து வந்தது. மே 2009 இல் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து, வன்முறை நிறுத்தப்பட்ட போது, சமத்துவம், நீதி, உண்மையான தீர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பிணக்குக்கு நிரந்தரமாக முடிவு கட்டும் அனைத்து வாய்ப்புக்களும் உருவாகின. 

    ஏற்றுக் கொள்ளத் தக்க அரசியல் தீர்வைக் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை – போர் நிகழ்ந்த காலத்திலும், போரின் முடிவுக்குப் பின்னரும் – இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை வழங்கியிருந்தது. துரதிஷ்டவசமாக இந்த வாக்குறுதி நிறைவு செய்யப்படவேயில்லை. இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி ஒன்றை தங்களின் மேலான கவனத்துக்காக நாம் இத்துடன் இணைத்துள்ளோம். 

    அதில் பின்வரும் விடயங்களைத் தெரிவித்துள்ளோம்:- 

    01. தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு ஒன்றைக் கொண்டு வருவோம் என சர்வதேச சமூகத்திற்கும், இந்தியாவுக்கும் ஏற்கனவே பல தடவைகள் தான் வழங்கிய உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவு செய்யவேயில்லை. 

    02.அந்தக் கடிதத்தில் நாம் விலாவாரியாகக் குறிப்பிட்டவாறு தனது பல்வேறு செயற்பாடுகள் மூலம் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களின் இனப்பரம்பல் முறையை மோசமாக மாற்றியமைக்கவும், அதன் மூலம் அவர்களின் இனத்துவ, மொழியியல், பண்பாட்டு அடையாளங்களை சீரழிக்கவுமான நிகழ்ச்சி நிரலையே இலங்கை அரசு முனைப்பாக முன்னெடுக்கிறது. 

    03. இலங்கை அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கைகள், ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல் தீர்வை எட்டுவதில் இலங்கை அரசுக்கு நேர்மையான பற்றுறுதி இல்லை என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் நல்லிணக்கம், நிரந்தர சமாதானம், அமைதி ஆகியவற்றுக்கான முயற்சிகளைப் பலவீனப்படுத்தும்; மோதல் நிலையைத் தீவிரப்படுத்துகின்ற சூழலை உருவாக்கும் மேலும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு, அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் மீளச் சரிபண்ணவே முடியாத பல இழப்புக்களை ஏற்படுத்தும். 

    இலங்கையில் நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான கௌரவமான தீர்வு ஒன்று எட்டப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவின் பங்களிப்புத் தொடரவேண்டும் என்று பிரதமரிடம் நாம் கோரியுள்ளோம். இதனை எட்டுவதற்கு உங்களின் முழு ஆதரவு தொடர்ந்து அவசியம் என்று தங்களை வேண்டி நிற்கிறோம். இயன்ற விரைவில் தங்களைச் சந்திக்க எதிர்பார்த்திருக்கிறோம். அத்தகைய வாய்ப்பை எமக்கு வழங்குமாறு ஆர்வத்துடன் வேண்டுகிறோம். – என்று உள்ளது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சம்பந்தர் கடிதம்.. Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top