போங்கடி நீங்களும் உங்க காதலும் - திரை விமர்சனம் - TK Copy போங்கடி நீங்களும் உங்க காதலும் - திரை விமர்சனம் - TK Copy

  • Latest News

    போங்கடி நீங்களும் உங்க காதலும் - திரை விமர்சனம்


    சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு, ரோடே கதியென்று இருக்கும் ராமகிருஷ்ணா, காதலையும், பெண்களையும் வெறுக்கிறார்.
    ஆனால், பணக்கார பெண்ணான ஆத்மியாவோ, ராமகிருஷ்ணனை துரத்தி துரத்தி காதலிக்கிறார். முதலில் இந்த காதலுக்கு செவி கொடுக்காத ராமகிருஷ்ணா, பிறகு ஆத்மியாவை காதலிக்க, ஆத்மியாவோ ராமகிருஷ்ணாவை கொலை செய்ய திட்டமிடுகிறார். 


    இதற்கிடையில், போலீஸ் அதிகாரியான ஜெயபிரகாஷின் , மகளை ஒரு கும்பல் போதைப் பொருள் கொடுத்து கற்பழித்து விட, அவர் தற்கொலை செய்துகொள்கிறார்.  இதை செய்த குற்றவாளியை ஜெயபிராகாஷ் தேட, உண்மையான குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டரான நாகேந்திரன், ராமகிருஷ்ணா மீது குற்றம் சுமத்தி அவரை கைது செய்கிறார்.


    ஆத்மியாவின் போலியான காதலாலும், காவல் துறையின்  போலியான வழக்கிலும் சிக்கி சின்னாபின்னமாகும் ராமகிருஷ்ணா, இறுதியில் என்ன ஆனார், எதற்காக காவல் துறையும், ஆத்மியாவும் ராமக்ரிஷ்ணாவை  பழிவாங்குகிறார்கள் என்பதுதான் 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' படத்தின் கதை.


    காதலால் நொந்து நூடுல்ஸ் ஆனா, அத்தனை இளைஞர்களும் இந்த தலைப்புக்காகவே தியேட்டருக்கு வருவார்கள், அந்த அளவுக்கு தலைப்பில் சுவாரஸ்யத்தை வைத்த இயக்குனர் ராமகிருஷ்ணன், கொஞ்சம் படத்திலையும் வைத்திருந்தால், காதல் உலகமே படத்தை கொண்டாடியிருக்கும்.


    இயக்குனர், நாயகன் என்று இரட்டை குதிரையில் சவாரி செய்துள்ள ராமகிருஷ்ணன், நடிப்பை பொருத்தவரை தனது கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் ஓவர் டோஸ் கொடுத்து நடித்திருந்தாலும், சில காட்சிகளிலும், நடனத்திலும் ஹீரோவாக நன்றாகவே செயல்பட்டுள்ளார்.


    இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள ஆத்மியாவுக்கு, வில்லத்தனம் ரொம்ப நன்றாகவே வருகிறது. காதல் காட்சிகளில் விட, வில்லத்தன காட்சிகளில் அவருடைய நடிப்பு சபாஷ் போட வைக்கிறது. கோடம்பாக்கத்திற்கு புது வில்லி கிடைச்சாச்சு.


    ஜெயபிரகாஷ், எப்போதும் போல தனக்கே உண்டான பாணியில் ஒரு கதாபாத்திரத்தில் வந்து போகிறார்.  இமான் அண்ணாச்சி, சென்ராயன் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் பேசுவதையே நடிப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.


    கண்ணனின் இசையில் பாடல்கள் ரசிக்கவும், தாளம் போடவும் வைக்கிறது. பன்னீர் செல்வத்தின் கேமரா, எந்தவித ஆடம்பரமும் இல்லாமல், கதைக்கு எற்றவாறு பயணித்துள்ளது.


    சேரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராமகிருஷ்ணன், சில காலம் கோடம்பாக்கத்தில் ஹீரோவாக சுற்றி, பிறகு நடிக்க யாரும் வாய்ப்பு கொடுக்காததால், தானே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். நடிகராக ராமகிருஷ்ணனுக்கு அனுபவம் இருந்தாலும், இயக்குனராக இப்படம் தான் முதல் அனுபவம். முதல் படம் என்பதாலோ, என்னவோ, தனது குருநாதர் சேரனின் சாயலில் படத்தை இயக்கியிருக்கிறார்.


    படத்தின் முக்கிய கருவே, பெண்களை மதிக்க வேண்டும் என்பது தான். காதலி, மகள், மனைவி என்று அத்தனை பரிணாமங்களிலும், பெண்கள் ஆண்களால் எப்படி வஞ்சிக்கப்படுகிறார்கள், அவர்களின் எதிர்ப்பார்ப்பை ஆண்கள் எப்படி புரிந்து நடக்க வேண்டும் என்பதை, துண்ட பிரசுரம் விநியோகம் செய்வது போல, சொல்லியிருக்கிறார்.


    படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களும், நடிப்பதை விட அதிகமாக பேசுகிறார்கள். அதுவும்  விஜயகாந்த் ரேஞ்சுக்கு  பக்கம் பக்கமாக வசனம் பேசுவதை தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

    வசனம் எழுத பெரும் உழைப்பை செலவிட்ட ராமகிருஷ்ணன், திரைக்கதை உருவாக்கத்தில் சிறிது செலவிட்டிருந்தால், 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' பெரும் வெற்றிப் பெற்றிருக்கும்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: போங்கடி நீங்களும் உங்க காதலும் - திரை விமர்சனம் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top