தலைவன் தலைவன் சென்னை,ஏப்.22 (டி.என்.எஸ்) தமிழகத்தை அதிரவைக்கும்
அனைத்து ரவுடிகளையும் அழித்து, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டோம் என்று தமிழக காவல் துறை மார் தட்டிக்கொள்ளும் நேரத்தில், ரிமோட் ஹெலிகாப்டர் ஒன்றின் மூலம், வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கப் போவதாகவும், முடிந்தால் தடுத்துக்கொள்ளுமாறும், காவல் துறைக்கு ஒருவர் சவால் விடுகிறார். இதனால், வங்கிக்கு பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது. அதையும் மீறி சவால் விட்ட நபர், சொன்னபடி வங்கியில் கொள்ளையடிக்கிறார். இதனால், வங்கி பாதுகாப்புக்கு தலைமை வகித்த, காவல் துறை உயர் அதிகாரி சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.
இதற்கிடையில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஒரு ரூபாய் கூட குறையாமல், காவல் துறைக்கு வந்து சேருகிறது. இதை செய்பவர் யாரும் அல்ல, படத்தின் நாயகன் பாஸ் தான். இது மட்டும் அல்ல, இதுபோல காவல்துறைக்கு தனது ரிமோட் ஹெலிகாப்டர் மூலம் சவால் விட்டு, அதை வெற்றிகரமகா செய்யும் பாஸ் ஏன்? இப்படி செய்கிறார், அவரை காவல் துறை பிடித்ததா இல்லையா? என்பதை ஆக்ஷன், காமெடி, காதல் என்று கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்கள்.
நாயகன் புதுமுகம் பாஸ், ஆக்ஷன், காதல், காமெடி, செண்டிமெண்ட் என்று அனைத்திலும் ஈடுபட்டு தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக காட்ட முயன்றியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தும் பாஸ், மற்றவைகளில் சற்று தடுமாறியிருக்கிறார். (முதல் படம் தானே பாஸ்....விடுங்க) அடுத்தடுத்து வரும் படங்களில், இவற்றை சரி செய்துகொண்டால், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்டவர்களின் வரிசையில் பாஸுக்கும் ஒரு இடம் உண்டு. நாயகி நிகிஷா படேல், நடிக்க வாய்ப்பு குறைவு என்பதால் குறைவாக நடித்திருந்தாலும், நடனத்திலும் குறைவாகவே இருக்கிறார். பிளாஸ் பேக்கில் பாஸின் நண்பராக நடித்துள்ள சந்தானம், வாங்கிய சம்பளத்திற்கு 100 சதவீதம் உழைத்திருக்கிறார்.
தனது குழுவுடன் சேர்ந்து சந்தானம் செய்த காமெடி படத்தை தூக்கி நிறுத்துகிறது. வில்லனாக நடித்துள்ள வின்செண்ட் அசோகன், போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ள சுமன், ஒ.ஏ.கே.சுந்தர், அபிஷேக், கோவை சரளா, கோட்டா சீனிவாசராவ் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும் தங்களது வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். வித்யாசாகர் இசையில் பாடல்கள் சுமார் ரகமாக இருந்தாலும், பின்னணி இசை பிரமாதமாக உள்ளது. கே.எஸ். பூபதியின் ஒளிப்பதிவில், சண்டைகாட்சிகளும், சேசிங் காட்சிகளும் பிரம்மாண்டமாக உள்ளது. பழிவாங்கும் பார்முலாவில், ஒரு மாஸ் கமர்ஷியல் படத்தைக் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன்.
தமிழ் சினிமாவின் பழைய பார்முலாவில் இயக்குனர் பயணித்திருந்தாலும், அதை ரசிகர்களுக்கு சலிப்பு தட்டாத வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். ரிமோட் ஹெலிகாப்டர் மூலம் நாயகன் பாஸ், காவல் துறைக்கு சவால் விட்டு, அதை செய்து முடிக்கும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிக்கும்படியாக உள்ளது. அதே சமயம், ஹீரோ இதை ஏன்? செய்கிறார் என்பதை பிளாஸ்பேக் ஆரம்பமானதும் ரசிகர்கள் புரிந்துக்கொள்கிறார்கள். இருப்பினும், அந்த பிளாஸ்பேக்கில் சந்தானத்தைக் கொண்டு காமெடி எபிசொட் ஒன்றை உருவாக்கி இயக்குனர் தனது புத்திசாலித்தனத்தை காட்டியிருக்கிறார்.