ஜெனிவா தீர்மானம் - விரிவான பார்வை - TK Copy ஜெனிவா தீர்மானம் - விரிவான பார்வை - TK Copy

  • Latest News

    ஜெனிவா தீர்மானம் - விரிவான பார்வை

    இலங்கை தொடர்பில் கரிசனை உள்ள அனைவரினதும் கவனத்தை ஈர்த்த 27 ஆவது ஜெனிவா தீர்மானம் பலத்த விவாதங்களை
    உருவாக்கி ஒவ்வொரு நாடுகளினதும் நலன்கள் எவ்வாறு மற்றைய நாடுகள் மக்கள் சமூகங்களில் முக்கியமானது என்பதை வெளிப்படுத்தியவாறு நடந்து முடிந்திருக்கின்றது.
    A/HRC/25/L.1 என்ற ஜெனிவா தீர்மானமானது ஜெனிவாவின் மனிதவுரிமைகளுக்கான 25ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உட்பட 38 நாடுகள் முன்வைத்த இத்தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 23 நாடுகள் ஆதரித்தும் 12 நாடுகள் எதிர்த்தும் 12 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன.
    ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபை
    ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபை என்பது 47 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் இணை அமைப்பாகும். ஐக்கியநாடுகளின் உறுப்புரிமை நாடுகளில் மனிதவுரிமைகளை மேம்படுத்தலும் பாதுகாத்தலும் இதற்கான பணியாகும். மனிதவுரிமைகளை அதியுச்சமாக மதிக்கின்ற நாடுகளே இதற்கான அங்கத்துவத்தை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றபோதும் அதுவோர் சாத்தியமற்றவிடயமாகவே இருந்துவருகின்றது.
    ஒரு நாட்டின் அங்கத்துவம் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இரண்டு தடவைகளுக்கு மேல் அதன் அங்கத்துவம் அடுத்தடுத்து நீடிக்கமுடியாது. இவ்வாறு தற்போதுள்ள 47 நாடுகள் இத்தீர்மானத்தில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
    வாக்களித்த நாடுகள்
    ஆஜன்ரீனா, ஒஸ்ரியா, பெனின், பொற்ஸ்வானா, பிறேசில், சிலி, கொஸ்ரா றிக்கா, ஐவரி கோஸ்ற், செக் குடியரசு, எஸ்தோனியா, பிரான்ஸ், யேர்மனி, அயர்லாந்து, இத்தாலி, மெக்சிக்கோ, மொன்ரநெக்ரோ, பெரு, தென்கொரியா, ரொமானியா, சியரா லியோன், மசடோனியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
    சீனா, ரஷ்யா, கொங்கோ, அல்ஜீரியா, கென்யா, மாலைதீவுகள், பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், வெனிசுவேலா, வியட்நாம், கியூபா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
    இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், தென் ஆபிரிக்கா, கஸகஸ்தான், குவைத், மொராக்கோ, நமீபீயா, பிலிப்பைன்ஸ், புர்கினா பாசோ, காபோன், எதியோப்பியா ஆகிய நாடுகள் இத்தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் விலகியிருந்தன.
    இத்தீர்மானத்தில் வாக்களித்த எதிர்த்த விலகிநின்ற நாடுகளை பற்றி கருதுவதற்கு அப்பால் இத்தீர்மானத்தை முன்கொண்டுவந்த நாடுகளை கவனிக்கவேண்டும். அல்பானியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரோசியா, சைப்பிரஸ், டென்மார்க், எஸ்ரோனியா, பின்லாந்து, பிரான்சு, ஜோர்ஜியா, ஜேர்மனி, கிறீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லீச்ரென்சிரின், லித்துவேனியா, லக்ஸ்சம்பேர்க், மொறிசியஸ், மொன்றியாகோ, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, போர்த்துக்கல், ரொமேனியா, செயின்ற்கிற்ஸ் நீவிஸ், சியாரா லியோன், ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், சுவீடன், சுவிஸ்லாந்து, மசிடோனியா, பிரித்தானியா மற்றும் வடஅயர்லாந்து, அமெரிக்கா ஆகிய 38 நாடுகளே இத்தீர்மானத்தை இணைந்து முன்வைத்தன.
    தீர்மானத்திற்கு வாக்களித்த நாடுகளை கருதுவதற்கு அப்பால் இத்தீர்மானத்தை முன்வைத்த நாடுகளின் அடிப்படையிலேயே இத்தீர்மானத்தின் செயற்பாட்டுத்திறன் இருக்கப்போகின்றது. ஏனென்றால் தீர்மானத்தை முன்வைத்த நாடுகளே இலங்கையரசில் கூடுதலாக செல்வாக்கு செலுத்தக்கூடிய நாடுகளாக இருக்கின்றன.
    இந்தியாவின் உண்மைமுகம்
    இந்தியாவை சரியாக புலிகள் கையாளவில்லை என்றும் உரிய முறையில் கையாண்டிருந்தால் தமிழீழத்தை இந்தியாவே பெற்றுத்தந்திருக்கும் என வாதிடுவோர் இன்றும் உண்டு.

    முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட ஈழவிடுதலைக்கான ஆயுதவிடுதலைப் போராட்ட காலம் வரை இந்தியாவின் நல்லமனதை காட்டமுடியாமல் இருந்ததாகவும் அதனால் இனிமேல் இந்தியஅரசு தமிழர்களை மீட்டுவிடும் என்ற நம்பிக்கை இப்போதும் சிலரிடம் உண்டு.இந்தவகையிலே தான் இந்தியாவுடன் எப்போதும் ஓர் நெருக்கமான தொடர்பாடலை தற்போதைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை பேணிவருகின்றது. ஆனால் இந்தியா இப்போது அந்தச்சிலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கின்றது.
    இத்தீர்மானத்திலிருந்து விலகிநின்றதன் மூலம் இந்தியா எந்தளவிற்கு இலங்கை அரசுடனான உறவிலிருந்து விலகிநிற்கும் என்பதையும் எந்தளவிற்கு தமிழர்கள் விடயத்தில் கிட்டவரும் என்பதையும் காட்டியுள்ளது. அதனைவிட இத்தீர்மானத்தின்போது உண்மையில் இந்தியா நடைமுறை யதார்த்தத்தில் எதிர்த்தே வாக்களித்திருந்தது. கடந்த தடவை முன்வைக்கப்பட்ட "நீர்த்துப்போன தீர்மானத்திற்கு" இந்தியா ஆதரவளித்திருந்தது.
    இம்முறை முக்கியமான இத்தீர்மானத்தில் திருத்தங்களை கொண்டுவருவதற்கு இரண்டு தடவைகள் நடத்தப்பட்ட திருத்தவாக்கெடுப்பின்போது இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. இத்தீர்மானத்தை ஒத்திவைக்கவேண்டும் என்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் ஐக்கியநாடுகள் மனிதவுரிமை உயர் ஸ்தானிகரால் விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற விடயத்தை நீக்குவது தொடர்பான வாக்கெடுப்பிலும் இலங்கைக்கு ஆதரவாகவே இந்தியா வாக்களித்திருந்தது என்பது மிகமுக்கியமானது.

    அதேவேளை இந்தியாவை விட்டும் எங்களால் இலங்கை பற்றிய தீர்மானத்தை முன்னகர்த்த முடியும் என்பதை அமெரிக்க சார்பு நாடுகள் வெளிக்காட்டியுள்ளன. இது ஒருவகையில் இந்தியாவிற்கு சவாலான விடயமே. எனினும் இத்தீர்மானத்தின் ஊடாக இந்தியா எடுத்த முடிவானது தற்போதுள்ள காங்கிரஸ் ஆட்சியின் வெளியுறவுக்கொள்கையா அல்லது இந்திய வெளியுறவுக்கொள்கை அத்தகையதா என்பதை இன்னும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
    அடுத்துவரும் இந்திய மத்திய அரசுக்கான தேர்தல்களை தொடர்ந்து அதற்கான பதில்கள் கிடைக்ககூடும். இந்தியாவிற்கு அப்பால் தென்னாபிரிக்கா இத்தீர்மானத்தில் விலகிநின்றமை தமிழர்களை பொறுத்தளவில் ஏமாற்றமளிக்கின்ற விடயமே. அதனைவிட உறுப்புநாடாக இல்லாதபோதும் அவுஸ்திரேலிய அரசின் தனது அரசியல்நலன் சார் நகர்வாக சிறிலங்காவிற்காக பேச வெளிப்பட்டுநிற்பதும் இன்னொரு கசப்பான விடயமே.
    தீர்மானத்தில் என்ன உள்ளது?
    தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் உயர் ஸ்தானிகரை "இலங்கையில் எல்எல்ஆர்சியின் கவனத்திற்குரிய காலத்தில் நடைபெற்ற கடுமையான மனிதவுரிமை மீறல்கள் பற்றி முழுமையான விசாரணைப்பொறிமுறையை" நடத்துமாறு கோருகின்றது. அப்படியானால் குறிப்பாக 2002 - 2009 ஆண்டுவரை நடைபெற்ற மோசமான மனிதவுரிமை மீறல்களை மட்டுமே விசாரணை செய்யுமாறு கோருகின்றது.
    அத்தோடு இலங்கையின் மனிதவுரிமை விடயங்களையும் அதன் முன்னேற்றபடிநிலைகளையும் கண்காணிக்குமாறும் மனிதவுரிமைச்சபையின் உயர்ஸ்தானிகர் கேட்கப்பட்டுள்ளார். இவ்வாறான விசாரணை மற்றும் கண்காணிப்பு தொடர்பான வாய்வழிமூலமான அறிக்கையை எதிர்வரும் செப்ரம்பர் மாதத்தில் நடைபெறும் 27 வது கூட்டத்தொடரின்போதும் முழுமையான செயற்பாட்டு அறிக்கையை அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் நடைபெறும் 28 வது கூட்டத்தொடரின்போதும் சமர்ப்பிக்குமாறும் உயர் ஸ்தானிகர் கேட்கப்பட்டுள்ளார்.எனவே இத்தீர்மானமானது அதனது பிரயோகநிலையில் அதனது அமுலாக்கத்தை வேண்டிநிற்பதானது ஆரோக்கியமான விடயமாக கணிக்கப்படுகின்றது.
    மகிந்த அரசு எப்படி எதிர்கொள்ளப்போகின்றது?
    இத்தீர்மானத்தை உடனடியாகவே நிராகரிகரிப்பதாக மகிந்த அரசாங்கம் அறிக்கைவிட்டபோதும் அத்தகைய ஒரு நிலையை தொடர்ந்தும் பேணுமா என்பது கேள்விக்குறியே. ஆனால் அவ்வாறான இறுக்கமான நிலையை எதிர்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபைக்கு எத்தகைய அதிகாரங்கள் உள்ளன? உள்நாட்டில் அனுமதிக்கப்படும் ஒரு விசாரணைப்பொறிமுறையை நிறைவேற்றக்கூடிய சூழல் உண்டா? என்ற கேள்விகள் எழுகின்றன.
    முடிவு

    "மனிதவுரிமை மீறல்கள் என்பதற்கும் சர்வதேச மனிதவுரிமை மீறல்கள் என்பதற்கு வேறுபாடு உள்ளது என்றும் சர்வதேச மனிதவுரிமை மீறல்கள் பற்றிய விசாரணையாக இருக்கும்போதே போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகள் உள்ளடக்கப்படலாம் எனவும் இது ஆபத்தான வேண்டுமென்றே இலங்கையரசை காப்பாற்றுவதற்காக தவிர்க்கப்பட்டிருக்கின்றது" என்கிறார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அத்தோடு இத்தீர்மானத்தில் தமிழ்மக்கள் என்ற ஒரு இனக்குழுமம் பற்றியோ அதனது அரசியல் அபிலாசைகள் பற்றியோ குறிப்பிடப்படவில்லை.
    இதன்மூலம் மீண்டும் இலங்கையரசின் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதுடன் அதன் கட்டமைப்புக்குள்ளேயே தீர்வுகளை காணுமாறும் இத்தீர்மானம் வற்புறுத்துகின்றது. உதாரணமாக வடமாகாணசபை உட்பட இலங்கையின் 9 மாகாணசபைகளும் இலங்கை அரசியல் யாப்பின் 13 வது திருத்தசட்டத்திற்கு அமைய வினைத்திறனுடன் செயலாற்றவிடும்படி இலங்கையரசை கேட்டுக்கொள்கின்றது.இதன்மூலம் இலங்கை என்ற தீவில் தமிழர்களின் தேசியப்பிரச்சனையை சிறுமுரண்பாடாக காட்டி உருப்படியான தீர்வுபற்றி கதைப்பதை தவிர்த்துவிட்டுள்ளது.இது முன்னைய தீர்மானங்களிற்கும் தற்போதைய தீர்மானத்திற்குமான மிகப்பாரிய வேறுபாடாகும்.
    எனவே இத்தீர்மானமானது தமிழர்களுக்கு ஒரு வெற்றியாகவும் சிறிலங்கா அரசுக்கு பாரிய தோல்வியாகவும் காட்சியளித்தாலும் அதன் நடைமுறை யதார்த்தத்தில் தமிழர்களின் உடனடி பிரச்சனைகளான கைதுகள் காணாமல்போதல் பற்றியோ அல்லது நீடித்த நிலையான சமாதானத்திற்கான உருப்படியான தீர்வுபற்றியோ பேசப்படாமல் மீளவும் காத்திருப்பு நோக்கியதாகவே தமிழர் வாழ்வு நகரப்போகின்றது.
    - வேங்கைச்செல்வன் -
    குறிப்பு:
    ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபையில் 2015 ஆம் ஆண்டில் உறுப்புரிமை முடிவடையும் நாடுகளும் புதிதாக வரும் நாடுகளும் விபரம் வருமாறு
    உறுப்புரிமை முடிவடையும் நாடுகள்
    African States: Cameroon, Djibouti, Mauritius, Nigeria and Senegal. Asian States: Bangladesh, China, Jordan, Kyrgyzstan and Saudi Arabia. Eastern European States: Hungary and the Russian Federation. Latin American & Caribbean States: Cuba, Mexico and Uruguay. Western European & Other States: United States, Belgium, Norway and Turkey.
    புதிய ஆண்டில் இணையும் நாடுகள்
    African States: Côte d'Ivoire, Ethiopia, Gabon, Sierra Leone, Kenya Asian States: Japan, Kazakhstan, *Pakistan, Republic of Korea, United Arab Emirates Eastern European States: Estonia, Montenegro Latin American & Caribbean States: Argentina, Brazil, Venezuela Western European & Other States: Germany, Ireland, *United States
    தொடர்ந்து இருஅமர்வுக்கு வரும் நாடுகள்
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஜெனிவா தீர்மானம் - விரிவான பார்வை Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top