உண்மையில் பிரபாகரன் சர்வதிகாரமாக செயற்பட்டாரா? பிரபாவின் ‘சர்வாதிகாரப்’ பட்டியல்! - TK Copy உண்மையில் பிரபாகரன் சர்வதிகாரமாக செயற்பட்டாரா? பிரபாவின் ‘சர்வாதிகாரப்’ பட்டியல்! - TK Copy

  • Latest News

    உண்மையில் பிரபாகரன் சர்வதிகாரமாக செயற்பட்டாரா? பிரபாவின் ‘சர்வாதிகாரப்’ பட்டியல்!

    முதலில் தலைப்புச் செய்திகள்!
    • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரிக்க அரசு சதி! சம்பந்தனின் ஆவேசம்!
    • பிரபாகரன் கேட்பாரின்றி அதிகாரத்தில் இருந்தார் – மேதினக் கூட்டத்தில் விக்கி!
    • ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கு முஸ்லிம் நாடாளான பஹ்ரேனில் உயர் விருது!
    • உயிர் ஆபத்தான நிலையிலும் கடமை தவறாத பொலிஸார் – மல்லாவியில் சாதனை!
    • மாணவிக்கு செருப்பு மாலை அணிவித்து கௌரவித்த ஆசிரியை!
    இனி விரிவான செய்திகள்,
    திருமலையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒன்று கூடலின் போது தலைமையுரையாற்றிய திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த அரசு முயல்வதாக கடும் தொனியில் குற்றம்சாட்டினார்.
    கட்சியின் அனுமதியின்றி சில உறுப்பினர்கள் காணமற் போனோர் பற்றிய விவகாரங்களை வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியமை அரசின் சதியெனவே நம்பப்படுகிறது. அதே வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கையின் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவைச் சநித்து இரகசிய உரையாடல் நடத்தியதன் மூலம் கட்சியைப் பிளவு படுத்தும் அரசின் முயற்சியை அவர் தோற்கடித்துள்ளார். போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகச் சிலர் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசியமாக ஜனாதிபதியுடன் நல்லுறவைப் பேணிவரும் சந்தர்ப்பத்தில் அவரின் மனம் புண்படும்படி கருத்துக்களை வெளியிடுவது கட்சியைப் பிளவுபடுத்தும் நாசகாரமான நடவடிக்கையாகும். அரசின் இத்தனைய முயற்சிகளுக்குத் துணைபோகும் உறுப்பினர்களின் வாயை மூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துச் சுதந்திரம் எட்டுப் பேருக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
    பிரித்தானியப் பிரதமர் வட பகுதிக்கு விஜயம் செய்த போது கட்சிக் கட்டுப்பாட்டை மீறி காணாமற் போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களை நடத்திய இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை உலகறியச் செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும். இவையெல்லாம் அரசு, கூட்டமைப்பைப் பிரிக்க எடுக்கும் முயற்சிகளில் சில பகுதிகளாகும்.
    தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விரோதமாக செயற்பட்டாலும் கூட அரசின் சதியை முறியடிக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை வெளியேற்றவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
    ஒரு காலத்தில் பிரபாகரன் கேட்பாரின்றி அதிகாரத்தில் இருந்தார் எனச் சாவகச்சேரியில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    பிரபாகரன் தமிழர்களுக்கென சில விடுதலைப் பிரதேசங்களை உருவாக்கி இலங்கை அரசின் அதிகாரங்களை அந்த விடுதலைப் பிரதேசங்களில் செல்லுபடியற்றதாக்கி அதிகாரம் செலுத்தினார் என்பதை எவரும் மறந்துவிடமுடியாது. அப்பகுதிகளில் இராணுவமோ பொலிஸாரோ நுழையவோ, நுழைந்து கொலைகளை நடத்தவோ, கைதுகள் செய்யவோ, பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உடப்டுத்தவோ விடாது ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தினார். நள்ளிரவில் கூட ஒரு பெண் நகைகளுடன் வீதியால் போகுமளவுக்கு திருடர்கள், கொள்ளையர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. மீனவர்களை வகை தொகையின்றி கடற்படையினர் சுட்டுக் கொல்லும் உரிமையை பிரபாகரன் அவர்களின் கடற்புலிகள் தடுத்தனர். வடக்கு – கிழக்கில் ஒரு சிங்களவன் கூட பலவந்தமாகக் குடியேற விடாமலும் இராணுவத்தினர் மக்களின் காணிகளை அபகரிக்க விடமாலும் பிரபாகரன் அவர்கள் சர்வாதிகாரம் செலுத்தினார்.
    இன்றைய முதலமைச்சரின் பதவியும் பிரபாகரன் வளர்த்த தேசிய உணர்வின் காரணமாக தமிழ் மக்கள் போட்ட பிச்சை எனத் தவறாகப் பிரசாரம் செய்யப்படுறிது. ஆனால் அவர் பிரபாகரனுக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதித்துறையில் சில காலம் தலைமைப்பதவியில் இருந்தவர் என்பதாலேயே அவருக்கு மக்கள் ஆதரவு வழங்கினர் என்பது மட்டுமே உண்மை.
    பிரபாகரன், மஹிந்தராஜபக்ஷ, இந்திய இராணுவம் என அனைவருமே அதிகார வெறி கொண்டவர்கள் தான். எனினும் மஹிந்தவும் இந்தியத் தூதுவரும் கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே அவரை சம்பந்தன் வலிந்து முதலமைச்சர் வேட்பாளராக்கினார் என்பதும் அப்பட்டமான உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்.
    பஹ்ரேன் நாட்டின் மன்னர் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ராஜபக்ஷவுக்கு அந் நாட்டின் உயர் விருதை வழங்கியதுடன் அந் நாட்டின் பிரதமர் ஜனாதிபதிக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் மக்களுக்குச் செய்துவரும் அரிய சேவைகளை நாமறிவோம். பள்ளிவாசல்கள் இடிந்து தொழுகையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மேல் விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட்டுவிடும் என்பதால் பொதுபல சேனாவின் மூலம் பள்ளிவாசல்களை தகர்க்க அனுமதி வழங்கியுள்ளார். சன சந்தடியுள்ள இடங்களில் பள்ளிவாசல்களின் அமைதி கெட்டுவிடும் என்பதால் நகர அபிவிருத்தி ஆணைக்குழு மூலம் சில பள்ளிவாசல்களை முற்றாக அகற்றவே நடவடிக்கை எடுத்துள்ளார். மன்னார் மறிச்சுக்கட்டியில் இடம்பெயர்ந்த மக்களை சொந்தக் காணிகளில் மீளக்குடியேறுவதை தடுத்து வேறு இடங்களில் காணி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். சிலாவத்துறை பள்ளிவாசல் வளாகத்தையே கடற்படையினர் கைப்பற்றி வைத்து பள்ளிவாசலைக் காட்டுமிருகங்களிடமிருந்து காத்துவருகின்றனர்.
    இப்படியான சேவைகளுக்கு ஜனாதிபதியுடன் துணைநிற்கும் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் வெகுவிரைவில் விருது கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.
    உயிரிலும் பார்க்க கடமையே சிறந்தது என்பதை ஆசியாவின் அதிசயமாக விளங்கும் இலங்கையின் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பொலிஸார் நிரூபித்துள்ளனர்.
    மல்லாவியில் பாம்பினால் கடியுண்டு ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரை ஹெல்மற் அணியாமல் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றமைக்காக மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
    ஹெல்மெற் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓடுவதோ அமர்வதோ சட்டப்படி குற்றமாகும். பாம்பு கடித்து உயிராபத்தான நிலைமை என்பதற்காக எவரும் சட்டத்தை மீற முடியாது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பது பொலிஸாரின் கடமையாகும்.
    எனவே மோட்டார் சைக்கிள் ஓடியவரை மறித்து மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியளவுக்கு தாக்கி பொலிஸாரும் கடமையைச் செவ்வனவே செய்துள்ளனர்.
    அதே போல் கொழும்பில் ஒரு பொலிஸ் சாஜன்ட் தேசப்பற்றுடன் நடந்து கொண்டுள்ளார். ஒரு வைர வியாபாரியிடம் 27 கோடி ரூபா பெறுமதியான வைரங்கள் கொள்ளையிடப்பட்டது. இவ்வளவு பெருந்தொகைப் பணம் ஒரு இடத்தில் குவிந்திருப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்றதல்ல. எனவே பொலிஸ் சாஜன்ட் கொள்ளையர்களுக்கு உதவி செய்து பணம் பரவி பணச் சுழற்ச்சி ஏற்படத் தேசயப்பற்றுடன் தன் கடமையைச் செய்துள்ளார்.
    கிழக்கு மாகாணத்தின் சேருவில பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாடசாலைக்கு சப்பாத்து அணியாமல் செருப்புப் போட்டு வந்த மாணவிக்கு ஆசிரியை அதே செருப்பை மாலையாகக் கட்டி அணிவித்து கௌரவித்துள்ளார்.
    பெரும் மூலதனமிட்டு சப்பாத்துக்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றனர். கடை உரிமையாளர்களும் பெரும் மூலதனமிட்டு அவற்றை விற்பனை செய்கின்றனர். அவர்களின் அபிவிருத்தி கருதி மாணவர்கள் சப்பாத்து அணிவதை அரசாங்கம் வற்புறுத்துகிறது. அனைவரும் செருப்பு அணிய ஆரம்பித்தால் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் குறைந்து நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுவிடும்.
    நாட்டின் அபிவிருத்தியை விரும்பாத அந்நிய நாடுகளின் தூண்டுதலின் பேரிலேயே செருப்பு அணியப்பட்டமை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்டு விசாரணையை மேற்கொண்டுள்ளனர். ஒரு தேச விரோத நடவடிக்கையை இனம் கண்ட ஆசிரியை பாராட்டப்படவுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
    மீண்டும் விசித்திரமான செய்திகளுடன் சந்திக்கிறோம் எனக் கூறி விடைபெறுகிறோம்.
    நன்றி – வணக்கம்
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: உண்மையில் பிரபாகரன் சர்வதிகாரமாக செயற்பட்டாரா? பிரபாவின் ‘சர்வாதிகாரப்’ பட்டியல்! Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top