ஏன் இந்த புலி நாடகங்கள் ? விளக்குகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் - TK Copy ஏன் இந்த புலி நாடகங்கள் ? விளக்குகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் - TK Copy

  • Latest News

    ஏன் இந்த புலி நாடகங்கள் ? விளக்குகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

    வடமாகாணத்தில் நிலைமை சீரடையவில்லை என்ற தோற்றத்தை ஜெனிவாவில்
    வரவழைக்கவே அரசாங்கத்தால் புலி நாடகங்கள் காட்டப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
    இன்றையதினம் மன்னாரில் இடம் பெற்ற சக்தியாக்கிரகத்திற்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடமாகாண தமிழ் மக்கள் அன்றும் இன்றும் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் என்றும் அவ்வாறு துன்பத்தினுள் அமிழ்ந்து உழலக் கூடாது என்பதால்தான் இந்த அடையாள உண்ணாவிரதமும், பிரார்த்தனையுங் கலந்த கூட்டம் நடாத்தப்படுகின்றது.பலவிதமான வேலைகளிலும் ஈடுபட்டுள்ள நீங்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வந்தமைக்கு நாங்கள் எங்கள் மனங்கனிந்த நன்றிகளை உங்களுக்குத் தெரியப் படுத்துகின்றோம்.
    நேற்றைக்கு முந்தைய தினம் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி என்னிடம் வந்து விடுதலைப் புலிகள் மீண்டும் வடக்கில் மீள் இணைகின்றார்கள், இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவது எனது கடமை என்றார். பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது என்றார். ஆவணப்படம் போட்டு எவ்வாறு மீள் இணைப்பு நடைபெற்றிருக்கின்றது என்று தாங்கள் நம்புகின்றார்கள் என்பதை எடுத்துக் காட்டினார்.
    பழைய நாட்களை எமக்குணர்த்தும் விதத்தில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்பது வெளிப்படையாகவே தெரிய வந்துள்ளது. சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28ந் திகதிக்குக் கிட்டிய காலகட்டத்தில் கதைகள் கட்டவிழ்க்கப்பட்டு ஜெனிவாவிலும் கூறப்பட்டு வருகின்றன.
    நான் இராணுவத் தளபதியிடம் கேட்டேன். ஜெயக்குமாரி வீட்டினுள் இருந்து யாரோ ஒருவர் வந்த வேளையில் இராணுவத்தினர் அங்கு இருக்கவில்லையா என்று. அதற்கு அவர், தூரத்தில் இருந்தார்கள் என்றார்.இராணுவத்தினர் அங்கு இருக்கும் போதே சுட்டுவிட்டுத் தப்பிப் போய்விட்டார் என்றால் அதை ஏற்பது சற்றுக் கடினமாக இருக்கின்றது என்றேன். அவர் பதில் கூறவில்லை.
    எப்படியாவது வடமாகாணத்தில் நிலைமை சீரடையவில்லை என்ற தோற்றத்தை வரவழைக்கவே இந்த நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்பதே தமிழ் மக்கள் அனைவரின் ஏகோபித்த முடிவு. எனவே கட்சி அடிப்படையில் அன்றி நாங்கள் வருங்காலம் எமக்கு மேலும், இடர் தருவதாக அமையாது நல்லவிதமாக அமைய வேண்டும் என்றே நாங்கள் இந்த அடையாள விரதத்தையும், பிரார்த்தனையையும் நடத்துகின்றோம். ஆனால் எனதருமை மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
    வன்முறைகளுக்கு எந்தத் தருணத்திலும் இடங்கொடுக்காதீர்கள். எங்கள் அகிம்சை முறையே எமது ஆயுதம். எமது பிரார்த்தனையே எமது கேடயம். இவற்றின் உதவியுடன் எம்மை உறுத்தப் பார்க்குஞ் சகலரையுந் தர்மத்தின் பக்கம் சாய வைப்போம். எமது இன்றைய ஒன்று கூடல் எம் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வைத்தரும் 
    நிகழ்வாக அமையட்டும். நாங்கள் எந்த விதத்திலும் அரசாங்க எதிர்ப்பில் ஈடுபடவில்லை. ஆனால் இங்கு போர்க்கால முடிவில் நடைபெற்றவை சம்பந்தமான ஆய்வு நடைபெற இடமளிக்கப்படவில்லை. நடப்பவை சம்பந்தமாக அரசாங்கம் ஆற அமரச் சிந்தித்துப் பார்க்கவில்லை, அத்துடன் எதேச்சாதிகாரமாக இங்கு நடக்கப் போகின்றவற்றிற்கு இன்று இடப்படும் அடித்தளத்தை ஆராய எமக்கு அனுசரணைகள் வழங்கப்படவில்லை.
    எனவே அடுத்த நாடுகளுக்குச் சொல்லி அழவேண்டிய ஒரு சந்தர்ப்பத்தை எமக்கு அரசாங்கமே எடுத்துத் தந்துள்ளது. இதற்காக எம்மைக் குற்றங் கூறுவதில் பயனில்லை. மனித உரிமையாளர்கள் ருக்கி பெர்னான்டோ, அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
    இன்று பூஸா முகாமுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ஜெயக்குமாரி கூட ஒருநாள் வழக்கேதுமின்றி விடுதலைப்பட வேண்டியவரே. ஆனால் அதுவரையில் அவர் அனுபவிக்கப்போகும் நரக வேதனைகள், அவரின் மகள் அனுபவிக்கப்போகும் அவலங்கள் ஆகியனவற்றிற்கு யார் பதில் சொல்லப் போகின்றார்கள்?
    ஜெனிவாவில் கதை அளக்க இவர்கள் தான் கிடைத்தார்களா? அரசாங்கமும், இராணுவமும் 'புலி வந்துள்ளது, புலி வந்துள்ளது!' என்று ஜெனிவாவில் கூக்குரல் இட இவர்கள் தான் பலிக்கடாக்களாகக் கிடைத்தார்களா? இராணுவத்தை வெளியேறச் சொன்னால் இதே புலிக்கதை கூறி எமக்கு இராணுவத்தின் பாதுகாப்புத் தேவை என்கின்றார்கள் அரசாங்கமும், இராணுவமும். சிவில் பொலிஸ் படையை வேண்டுமானால் விருத்தி செய்யுங்கள்.
    கூடிய தமிழ்ப் பேசும் பொலிஸ்காரர்களை பொலிஸ் பதவிகளில் நிறுத்துங்கள். அதை விட்டு விட்டு அப்பாவிகளை கைது செய்து அவர்களுக்கு அவலங்களை ஏற்படுத்தாதீர்கள் என்று கூறவே இந்த விரதமும், பிரார்த்தனையும். இதைவிட எமது காணிகளைப் பலாத்காரமாக அரசாங்கம் வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதையும் எதிர்த்து இந்த விரதத்திலும், பிரார்த்தனையிலும் ஈடுபடுவோம்.
    எமது அவலங்களையும் இதுவரை காலமாக எம்மை அடக்கி ஆண்டு வந்த நிலைமையையும் அணிதிரண்டு அனைத்து உள்ளூர் மக்களுக்கும், அனைத்து நாட்டு மக்களுக்கும் எடுத்தியம்ப இந்த அஹிம்சை வழியை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். மக்கள் யாவரும் அஹிம்சை வழி நின்று தமது கட்டுப்பாட்டையும், கட்டுக்கோப்பையும் வெளிக்கொண்டுவரும் விதமாக அமைதியுடன் அணிதிரண்டு எமது அந்தரங்கத்தை வெளிக்கொண்டு வர இந்த நாளை உபயோகிப்போம் என தெரிவித்துள்ளார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஏன் இந்த புலி நாடகங்கள் ? விளக்குகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top