அண்மைக்காலத்தில் இராணுவத்திற்கென சிறீலங்கா அரசால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு தமிழ்ப் பெண்கள்
இராணுவத்திற்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட இந்த நிலையில் தொடர்ந்தும் அதேவகையில் ஆட்சேர்ப்பினை செய்தால் தமிழ் இளைஞர் யுவதிகளை தமது தேவைகளுக்கு உள்வாங்க முடியாமல் போகும் என்பதை அறிந்துகொண்ட அரசு புதிய யுக்தி ஒன்றினை கையாள முயலும் செயற்பாடு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அண்மையில் யாழில் ஒட்டப்பட்டிருக்கும் ஆட்சேர்ப்பு அறிவித்தலும் அதன்பின்னரான நேர்முகத்தேர்வும் பாரிய அச்சத்தை தோற்றுவித்துள்ளது. ”அரச சேவைக்கு ஆட்சேர்த்தல்” என்ற தலைப்பில் எந்தவித தகமை அடிப்படைகளும் கோரப்படாமல் தகுதியும், திறமையும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற வகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதும் அதற்கு மாதாந்தம் 25,000.00 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டியவை,
1. இதுவரைகாலமும் இலங்கை அரசால் சகலவிதமான வேலை வாய்ப்புக்களும் வர்த்தமானி அறிவித்தல் மூலமே தகுதி, வேதன அடிப்படை, பணி விபரங்கள் கோரப்படுவதும் பின்னர் அதற்காக போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு அதனடிப்படையில் நியமனம் வழங்கப்படுவதும் வழமை.
2. விளம்பரத்தில் 25,000.00 என தெரிவித்துள்ளபோதும் ஆட்சேர்ப்பினை செய்த நல்லிணக்க ஆணையர் 30,000.00 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
3. இதுவரைகாலமும் அரச வேலைவாய்ப்புக்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சே மேற்கொண்டு வந்தது ஆனால் தற்போது அதனை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
4. குறித்த ஒரு பிரதேச செயலர் பிரிவில் மட்டும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது அது குறித்து குறிப்பிட்ட பிரதேச செயலர் தனக்கு தெரியாது என அறிவித்துள்ளார்.
5. வழமையாக ஆவணங்களின் போட்டோப்பிரதிகள் பெற்றுக்கொள்ளப்படும் இங்கு வேலையில் இணைந்தால் விலகி எங்கும் செல்லாதவாறு இருக்க ஆவணங்களின் மூலப்பிரதிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
6. இலங்கை அரசசேவையில் உயர்பதவியான நிர்வாக சேவை அதிகாரிகளுக்கே அடிப்படை வேதனம் இதுவரை இருபத்தைந்தாயிரம் வழங்கப்படாத நிலையில் இதன் உள்நோக்கம் என்ன?
7. தகுதி அடிப்படையல்லாமல் சகல வேலைகளுக்குமான விண்ணப்பங்களை கோருவதன் மூலம் யாழிலுள்ள சகல இளைஞர் யுவதிகளின் சகல விபரங்களும் பாதுகாப்பு அமைச்சுக்கு பெற்றுக்கொள்ளல்.
இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கின்றபோது இளைஞர் யுவதிகளிடையே பாரிய கேள்விகள் எழுவதை தவிர்க்கமுடியாமல் போகின்றது. வழமையான எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல் சட்டவிரோதமான முறையில் சுவர் நோட்டீஸ் மூலம் விண்ணப்பங்கள் கோரப்படுவதும் அதற்கான வேதன அறிவிப்பும் இளைஞர் யுவதிகளை கவரும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் பட்டதாரிகளுக்கே ஒருவருட காலமாக பயிலுனர்களாக அவர்களை ஆட்சேர்ப்பு செய்த அரசு அவர்களுக்கு ஒருவருட காலமாக வெறும் பத்தாயிரம் ரூபா வேதனமே வழங்கியது கடந்த ஆண்டு இறுதியிலேயே அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.
நிரந்தர நியமனம் பெற்ற அவர்களே இதுவரை ரூபா இருபத்தந்தாயிரம் பெறும் நிலைக்கு வரவில்லை. நிலமை இதுவாக இருக்கும்போது சங்கீதம், நடனம், பாடகர், எழுதுனர், கணனி இயக்குனர், தமிழ் ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் என்ற போர்வையில் 15 இற்கு மேற்பட்ட பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
சாதாரணமாக விவசாய மேற்பார்வையாளருக்கே பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும் என அறிவித்தலுள்ளது. அவ்வாறு இதில் 600 வரையான பெண்களை உள்வாங்கும் செயற்பாடு மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பதிவுகள் நேற்று நெல்லியடியில் இடம்பெற்றுள்ளது இதில் 2000 வரையானோர் பதிவு செய்ததாகவும் 1350 பேர் உள்வாங்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு 30,000.00 வேதனம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் இராணுவத்தினால் பராமரிக்கப்படும் பண்ணைகளுக்காக வேலைக்கு பெண்கள் பாரியளவில் உள்வாங்கப்பட்டதும் பின்னர் அவர்கள் இராணுவத்தேவகைளுக்கு பயன்படுத்தப்பட்டதும் செய்திகளாயின.
கடந்தவாரம் விசுவமடு பகுதியில் கிணற்றில் வீசப்பட்ட பெண்ணின் நிலையும் அந்த வகையானதே. பண்ணை வேலைக்காக சேர்ந்த பெண்ணை காதலிப்பதாக கூறிய படைவீர்ர் மூலம் பெண் கற்பமாக்கப்பட்டுள்ளாள் பின்னர் தன்னை திருமணம் செய்யுமாறு பெண் கேட்டதனால் அவளை கொலைசெய்து கிணற்றில் வீசியுள்ளனர்.
விசாரணை செய்த பொலீசாருக்கு மோப்பநாய் காட்டிய வழி அரகிலுள்ள படைமுகாம் அந்த வகையில் அதில் கடமையாற்றிய படை வீர்ர் விசாரணைகளின்பின் கைதுசெய்யப்பட்டுள்ளார் அவர் இன்று நீதிமன்றில் ஆயர் செய்யப்படுவார்.
இதுதான் தாயகத்திலுள்ள நிலமை. உண்மையிலேயே இது சட்டவிரோத செயற்பாடு என தெரிந்திருந்தும் ஏன் தமிழ் அரசியல் தலைவர்கள் மௌனமான இருக்கின்றனர்? வேலைவாய்ப்பு என்பது வரவேற்கத்தக்கதே ஆனால் அதனை சட்டரீதியாகவும் வெளிப்படையுடனும் நடைபெறுகின்றதா என்பதைக்கூட இவர்களால் வெளிக்கொண்டுவரமுடியாதா?