"என்னுடைய மெளனம் ஆயிரம் கேள்விகளுக்கு பதில்" என்று நம்ம நாட்டு பிரதமர் மன்மோகன் சிங், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். 'வாயை மூடி பேசவும்' படத்தின் கதையும் இதே கருத்தை தான் வலியுறுத்துகிறது. அதாவது, தேவையில்லாமல் பேசி பிரச்சனையில் சிக்கிக்கொள்வதை விட, பேசாமல் இருப்பதே சிறந்தது என்றும், மெளனமும் ஒரு மொழி தான் என்றும் இப்படம் வலியுறுத்துகிறது.
பனிமலை என்ற மலைபிரதேச ஊர் தான் கதைக்களம். அநாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த நாயகன் துல்கர் சல்மான், ரேடியோவில் ஆர்.ஜே வாக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அந்த வேலை கிடைக்கும் வரை சும்மா இருக்காமல், சேல்ஸ் மேன் வேலை செய்துகொண்டிருக்கிறார். தனது பேச்சு திறமையால், வாங்க ஆர்வம் இல்லாதவர்களிடம் கூட தனது பொருளை விற்பனை செய்து விடும் இவர், பேச்சு தான் தனது பலம் என்றும், எந்த பிரச்சனையாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்றும் நினைத்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.
அதே பனிமலை கிராமத்தில் மருத்துவராக உள்ள நாயகி நஸ்ரியா நசீம், தனது காதலனால் அடிமைப் படுத்தப்படுகிறார். அவருக்கு என்ன பிடிக்குமோ அதையே செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார். நஸ்ரியாவின் தந்தையான அபிஷேக்குக்கு இரண்டாம் தாரம் மனைவியான எழுத்தாளர் மதுபாலா, திருமணத்திற்குப் பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புத்தகம் எழுத நினைக்கிறார். இருப்பினும் இதற்கு தனது கணவரின் அனுமதியும், ஒத்துழைப்பும் தேவை என்று நினைக்கிறார். அதேபோல, துல்கர் சல்மான் வளர்ந்த அனாதனை ஆஷ்ரம, கட்டிட முதலாளியான வினுசக்கரவர்த்தி, காதல் திருமணம் செய்துக்கொண்ட தனது மகன் மீது உள்ள கோபத்தில், ஆஷ்ராமத்தின் வாடகையை உயர்த்திவிடுகிறார். இதெல்லாம் போதாது என்று, குடிகார்களை தனது படத்தில் தவறாக காட்டிய நடிகர் புமேஷுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குடிகார சங்க உறுப்பினர்கள், புமேஷின் படப்பிடிப்பு நடைபெறும் பனிமலையில் போராட்டம் செய்கிறார்கள்.
புமேஷுக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள், பனிமலையில் குடிகார சங்கத்தினரை எதிர்த்து போராடுகிறார்கள். இந்த அத்தனை கதாபாத்திரங்களையும் சந்திக்கும் துல்கர், மனம் விட்டு பேசினாலே போதும், இந்த அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று அனைவருக்கும் அட்வைஸ் செய்கிறார்.
இவருடைய அட்வைசைக் கேட்டு, அந்த அந்த கதாபாத்திரங்கள் தங்கள் பிரச்சனைக் குறித்து, சம்மந்தப்பட்டவர்களிடம் பேசலாம் என்ற முயற்சியில் இறங்கும்போது, பனிமலையில் திடீரென்று 'டம் புளு' என்ற வைரஸ் நோய் பரவுகிறது. அதாவது இந்த நோய் தாக்கியவர்களுக்கு பேசும் திறன் நின்றுவிடும். இப்படி ஒரு புதுவிதமான நோயால் சிலர் பாதிக்கப்பட்டு தங்களது குரலை இழக்க, இந்த நோய் குறித்து தடுப்பு நடவடிக்கையில் இறங்கும் அரசு, இந்த நோய் பேசுவதனால் தான் பரவுகிறது என்று கண்டுபிடிக்கிறது.
அதுமட்டும் இன்றி, இந்த நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் வரை, நோய் பரவாமல் தடுக்க, பனிமலையில் உள்ள அனைவரும் பேசுவதற்கு தடை விதிக்க, தங்களது பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்த இந்த கதாபாத்திரங்கள் எப்படி, பேசாமலே தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார்கள் என்பதை இயக்குனர் பாலாஜி மோகன் காமெடியாக சொல்லியிருக்கிறார். சாக்லேட் பாய்களைப் பார்த்து வெகு நாளான கோடம்பாக்கத்திற்கு, நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு துல்கர் சல்மான், ரூபத்தில் ஒரு சாக்லேட் பாய் கிடைத்திருக்கிறார். இவர் தனது பொருளை பேசி விற்பனை செய்யும் விதம், சேல்ஸ்மென்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சியைப் போல இருக்கிறது. தனது இனிமையான பேச்சினாலும், மென்மையான நடிப்பினாலும் வெகுவாக கவர்கிறார்.
துல்கர் சல்மானின் பேச்சை விட குறைந்த இனிமையிலான குரல் தான் நாயகி நஸ்ரியாவுக்கு என்றாலும், கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கும் விதத்திலும், ஆர்பாட்டம் இல்லாத அழகினாலும் நம்மை கவருகிறார். நாயகன், நாயகியைத் தவிர்த்து, படத்தை பரபரப்பாக நகர்த்திச் செல்ல உதவியிருக்கும் கதாபாத்திரங்கள், குடிகார சங்கத்தின் தலைவராக வரும் ரோபோ சங்கரும், நடிகர் புமேஷாக நடித்துள்ள ஜான் விஜயும், அவரது ரசிகர்கள் பட்டாளமும் தான்.
ஜான் விஜயின் ரசிகர்கள் பட்டாளமும், குடிகார சங்கத்தின் தலைவராக நடித்துள்ள ரோபோ சங்கரும் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். குறிப்பாக ரோபோ சங்கர், இதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்திற்குப் பிறகு அவரை கோடம்பாக்கம் கண்டிப்பாக கொண்டாடும். வசனங்கள் பேசி முதல் பாதியை கலகலப்பாக நகர்த்தும் ரோபோ, இரண்டாம் பாதியில் வசனமே இல்லாமல், தனது உடல் மொழி மூலம் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்.
அமைச்சராக வரும் பாண்டியராஜ், துல்கர் சல்மானின் நண்பராக வரும் அந்த குண்டு மனிதர் என்று அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்கிறார்கள். இதெல்லாம் சரியாக இருந்தாலும், திஷ்ட்டி கழிப்பது போல இருக்கிறது, இயக்குனர் பாலாஜி மோகன், அடிக்கடி செய்தி வாசிப்பாளராக வரும் காட்சிகள். இவற்றில் கொஞ்சம் கத்திறியைப் போட்டியிருந்தால், ஸ்பீட் பிரேக்கர் இல்லாத இ.சி.ஆர் சாலையில், பெராரி காரில் பயணிப்பது போல படம் வேகமாக இருந்திருக்கும்.
இடைவேளைக்குப் பிறகு, கிளைமாக்ஸ் முன்பு வரை படத்தில் யாரும் பேசிக்கொள்ளவே மாட்டார்கள், வெறும் செய்கையினாலேயே அத்தனைக் கதாபாத்திரங்களும் நடித்திருப்பார்கள். இருப்பினும், அனைத்து காட்சிகளும் சுவாரஸ்யமாகவே இருந்தது. முழுக்க முழுக்க காட்சிகள், திரைக்கதை இவை இரண்டையும் மட்டுமே நம்பி இயக்குனர் பாலாஜி மோகன் படத்தை இயக்கியுள்ளார்.
ஷான் ரொலண்டின் இசை படத்திற்கு பெரும் பலம். படத்தில் இரண்டு பாடல்கள் தான் உள்ளது. அவை எப்போது வருகிறது, என்ன வரிகள் என்று எதையும் கவனிக்க முடியாத வகையில், காட்சிகள் சுவாரஸ்யமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில், வசனங்கள் இல்லை என்றாலும், ரொலண்டின் பின்னணி இசை ரொம்ப சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.கதைக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவாளர் செளந்தராஜன் பயணித்துள்ளார். படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும், இவருடைய கேமராவால் கூடுதல் அழகைப் பெற்றுள்ளார்கள்.
அளவாக பேசுங்கள், சந்தோஷமாக வாழுங்கள் என்ற விஷயத்தை, ரொம்பவே நகைச்சுவையாக சொல்லியிருக்கும் இயக்குனர், அவ்வபோது விஜயகாந்தை ஏன் கலாய்க்கிறார் என்பது தான் புரியவில்லை. இருப்பினும், ரசிகர்களை சிரிக்க வைப்பதே தனது ஒரே குறிக்கோள் என்ற நோக்கத்தில் பாலாஜி மோகன், ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியுள்ளார் என்பது தெரிகிறது.
நாலு பட்டு, காமெடி நடிகர்கள் தயவால் சில காட்சிகளை நகர்த்துவது, இரண்டு சண்டைக்காட்சி என்று டைம் டேபிள் போட்டு படத்தை எடுக்காமல், இப்படியும் ஒரு படத்தை இயக்கலாம் என்று சில வித்தியான முயற்சியில் தைரியமாக இறங்கும் ஒரு சில இயக்குனர்களின் பட்டியலில், பாலாஜி மோகனும் இணைந்திருக்கிறார்.