ஐதராபாத் காத்தாடி திருவிழாவில் குண்டு வெடிப்பு சமபவம் நடக்கிறதிறது. அதில் பலர் உயிரிழக்கிறார்கள். அந்த குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்ட தீவிரவாதிகளை காவல்துறை தேடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ,அமெரிக்காவில் இருந்து ஐதராபாத்துக்கு வரும் தமிழ் பெண்ணான நயன்தாரா, காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். அமெரிக்காவில் இருந்து வேலை விஷயமாக ஐதராபாத் வந்த அவர், கடந்த 8 மாதங்களாக தன்னுடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறார், எனவே அவரை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார் தருகிறார்.
தமிழரான எஸ்.ஐ வைபவ், நயந்தாராவுக்கு உதவும் நோக்கத்தில், அவருடன் இணைந்து நயன்தாராவின் கணவரை தேடுகிறார். இதற்கிடையில் நயன்தாராவின் கணவர், கடத்தப்பட்டதாக தெரியவர, அது சம்மந்தமாக சிலரை வைபவ் விசாரிக்கிறார். அப்படி வைபவ் விசாரிப்பவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள்.
இந்த நிலையில், ஐதராபாத் குண்டு வெடிப்பு வழக்கை விசாரிக்கும் காவல் துறை மேலதிகாரியான பசுபதி, நயன்தாராவின் கணவர் ஒரு தீவிரவாதி என்றும், அவர் தான் ஐதராபாத் குண்டு வெடிப்புக்கு காரணம் என்றும் கூறி நயன்தாராவிடம் விசாரணை நடத்துகிறார். ஆனால், இதை மறுக்கும் நயன்தாரா, தனது கணவர் ஒரு எஞ்சினியர் என்றும், அவர் பெரிய நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் கூறி, அதற்கான ஆதாரத்தையும் காவல் துறையிடம் காட்டுகிறார்.
இதற்கிடையில், நயன்தாராவிடம் தீவிரவாதிகளைப் பற்றிய ஹாட்டிஸ்க் ஒன்று கிடைக்கிறது. இந்த ஹாட்டிஸ்கை கைப்பற்ற காவல் துறை முயற்சிக்க, தீவிரவாதிகள் ஹாட்டிஸிக்கை கொடுத்தாள், நயன்தாராவின் கணவரை விடுவிப்பதாக கூறுகிறார்கள். இறுதியில் ஹாட்டிஸ்க்கை கொடுத்து கணவரை நயன்தாரா மீட்டாரா இல்லையா? எதற்காக அவருடைய கணவரை தீவிரவாதிகள் கடத்தினார்கள்? என்பது தான் படத்தின் கதை.
தீவிரவாதத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது இப்படம்.
முழுப்படமும் நயன்தாராவை தான் சுற்றி நகர்கிறது. டூயட் பாடல்கள், கவர்ச்சி ஆடைகள் ஏதும் இல்லாமல், கணவருக்காக போராடும் ஒரு இயல்பான மனைவியாக நயன்தாரா நடித்துள்ளார். கனமான கதாபாத்திரம் என்பதை நன்கு உணர்ந்து, ரொம்ப கச்சிதமாகவே நடித்துள்ளார்.
போலீசாக நடித்துள்ள வைபவ், தான் ஒரு போலீஸ் என்பதையே மறந்து விட்டு நடித்தது போல இருக்கிறது அவருடைய நடிப்பு. போலீசுக்கு உண்டான முறுக்கும், கம்பீரமும் சிறிதளவும் இல்லாமல், ஏதோ வேண்டா வெறுப்பாக காவல் துறையில் சேர்ந்தது போல இருக்கிறார். காவல் துறை மேலதிகாரியாக நடித்துள்ள பசுபதி, கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். அமைச்சராக நடித்துள்ள நரேஷின் நடிப்பு இயல்பாக உள்ளது.
மரகதமணியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணியில் இசையில் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். விஜய் சி.குமாரின் ஒளிப்பதிவு எளிமையாக உள்ளது. குண்டு வெடிப்பு, தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை என்று, காட்சிகளை பிரம்மாண்டமாக காட்ட பல வாய்ப்புகள் இருந்தாலும், திரைக்கதையை மனதில் வைத்து காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.
மணிரத்தனம் இயக்கிய ரோஜா படத்திற்கும், இப்படத்திற்கு ஒரே ஒரு வித்தியாம் தான். அந்த வித்தியாசம் தான் இப்படத்தின் கதையே என்று கூட சொல்லலாம். காணாமல் போன கணவரை தேடும் மனைவி, தீவிரவாதிகளை தேடும் போலீஸ், தொடர் கொலைகள் என்று ரசிகர்களை திடுக்கிட செய்யும் பல காட்சிகள் படத்தில் இருந்தாலும், அவை அனைத்துமே, உப்பு சப்பு இல்லாமல் நகர்கிறது.
படத்தின் ஆரம்பம் முதல், இறுதி வரை என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்போடு ரசிகர்களை படம் பார்க்க வைத்துள்ள, இயக்குனர் காட்சிகளை ரொம்பவே சாதரணமாக அமைத்துள்ளது படத்திற்கு சிறிது பலவீனத்தை உண்டு பண்ணியிருக்கிறது. மற்றபடி, நயன்தாராவின் கணவர் யார்? அவரை யார் கடத்தியது? எதற்காக? என்ற விஷயங்களில் உள்ள விறுவிறுப்பை படத்தின் இறுதி வரை குறையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.