திகில் படம் என்ற போர்வையில், காமெடிப் படமாக ரசிகர்களை தாரளமாக சிரிக்க வைக்கும் வகையில்
உருவாகியிருக்கும் படம் தான் 'யாமிருக்க பயமே'.
உருவாகியிருக்கும் படம் தான் 'யாமிருக்க பயமே'.
தொலைக்காட்சியில் லேகியிம் விற்கும் கிருஷ்ணாவிடம், லேகியத்தை வாங்கி சாப்பிட்டு, இருந்ததையும் இழந்த ஒரு வாலிபரின், ரவுடி தந்தை கிருஷ்ணாவை அடித்து துவைப்பது மட்டும் இன்றி, தனது மகனை இந்த நிலைக்கு ஆளாக்கிய நீயே, அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லையென்றால் உனது காதலியை அவனுக்கு திருமணம் செய்துவை என்று கட்டளையிடுகிறார்.
ரவுடியின் மிரட்டலால் மிரண்டுப் போகும் கிருஷ்ணாவுக்கு அவருடைய தந்தை எழுதி வைத்த சொத்துப் பற்றிய விவரம் தெரிய வர, அங்கு போகும் கிருஷ்ணா ரவுடியின் மிரட்டலைக் காட்டிலும் அதிகமாக மிரண்டுப் போகிறார். அந்த அளவுக்கு பாழடைந்த கட்டடமாக இருக்கிறது அந்த பங்களா. இருப்பினும் ரவுடியிடம் இருந்து தப்பிப்பதற்காக, அந்த பங்களாவை புதுப்பித்து லாட்ச் நடத்த திட்டமிடுகிறார். அவருக்கு உதவியாக அவருடைய காதலியான ரூபாமஞ்சரியும், கருணாகரன் மற்றும் அவருடைய தங்கையான ஓவியாவும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், அந்த லாட்சில் தங்குவதற்காக வரும் விருந்தினர்கள் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். இதைப் பற்றி வெளியே சொன்னால், எங்கே லாட்சிக்கு சீல் வைத்து விடுவார்களோ என்று எண்ணி, செத்துப்போனவர்களை இந்த நான்கு பேரும் சேர்ந்து புதைத்தது விடுகிறார்கள்.
இப்படி அந்த லாட்சிக்கும் வரும் விருந்தினர்கள் அனைவரும் உயிரிழிக்கும் அந்த மர்மத்தை கிருஷ்ணா, கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை, எந்த வித லாஜிக்கும் பார்க்காமல், படம் பார்ப்பவர்கள் சிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்குனர் சொல்லியிருக்கிறார். கழுகு படத்திற்குப் பிறகு கிருஷ்ணா, நடிப்பில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார். டபுள் மீனிங் பேசுவது முதல், அமானுஷிய விஷயத்திற்கு பயப்படுவது வரை அத்தனை காட்சிகளிலும் இயல்பாக நடித்திருக்கிறார்.
கிருஷ்ணாவுக்கு சவால் விடும் அளவுக்கு, கருணாகரனின் நடிப்பும் அமர்க்களப்படுத்துகிறது. காமெடி, பயம் என்று இரண்டு குதிரையிலும் மனுஷன் அட்டகாசமாக சவாரி செய்கிறார். ரூபாமஞ்சரி, ஓவியா என இரண்டு நாயகிகளும் கவர்ச்சிக்காட்ட முயற்சித்திருந்தாலும், அதில் ஒவியாவே வெற்றிப் பெற்றிருக்கிறார். மயில்சாமி வரும் காட்சிகள் காமெடியாக இருந்தாலும், அந்த பிரதர் மேட்டர், கிறிஸ்துவ மதத்தை கலாய்ப்பது போல இருக்கிறது.
பேயாக வரும் அந்த புதுமுக நாயகி உண்மையிலேயே அழகான ராட்சசியாக வந்து நம்மை அவ்வபோது பயமுறுத்துகிறார். அவரை தேவதையாக நினைத்து டூயட் பாடும் ஆதவ் கண்ணதாசனின் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும், பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது, இசையமைப்பாளர் பிரகாஷ் எஸ்.என், இசையில் பாடல்கள் முனுமுனுக்க வைக்கிறது. பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்றவாறு பயணித்து நம்மை பயமுறுத்துகிறது.
ராமின் ஒளிப்பதிவு திகில் படத்திற்கே உரிய வகையில் காட்சிகளை நகர்த்தியுள்ளது.
நான்கு கதாபாத்திரங்களை சுற்றியே, ஒரே ஒரு லொக்கேஷனில் படம் நகர்ந்தாலும், ரசிகர்களுக்கு எந்த வித சலிப்பும் ஏற்படாத வகையில் இயக்குனர் திரைக்கதை அமைத்திருக்கிறார். அதிலும் வெறும் திகிலை மட்டுமே நம்பாமல், அதில் காமெடி என்ற சுவையை, அதிகமாகவே பயபடுத்தியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது.
திகிலான காட்சியாக இருந்தாலும், அதில் சம்மந்தப்பட்ட கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களால், பயத்தையும் மறந்து ரசிகர்கள் சிரித்து விடுகிறார்கள். இருப்பினும், எங்கே திகிலை காட்ட வேண்டுமோ அங்கே, நாம் மிரண்டு போகும் அளவுக்கு திகிலை காட்டுவதோடு, திரைக்கதையில் ஏகப்பட்ட டிவிஸ்டுகளையும் வைத்து இயக்குனர் காட்சிகளை நகர்த்தியிருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
என்ன கதை, இயக்குனர் என்ன சொல்ல வருகிறார், என்ற எதையும் யோசிக்க விடாமல் நம்மை சில இடங்களில் திகிலடைய செய்யும் இயக்குனர், எந்த வித லாஜிக்கையும் பார்க்காமல் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் 'யாமிருக்க பயமே' முழுக்க முழுக்க சிரிப்பே.