சாமானியனையும் சாதிக்க வைக்கும் வைகாசி மாத பலன் - TK Copy சாமானியனையும் சாதிக்க வைக்கும் வைகாசி மாத பலன் - TK Copy

  • Latest News

    சாமானியனையும் சாதிக்க வைக்கும் வைகாசி மாத பலன்

    இளவேனிற் காலத்தின் இரண்டாவது மாதம் வைகாசி. கடுமையான
    வெயிலுக்கு இடையே அவ்வப்போது ஆலங்கட்டி மழை பெய்யும் காலம். தென்மேற்கு பருவ  மழைக்காக தென்னகத்து அருவிகள் காத்திருக்கும் நேரம். நம்மில் பலபேர் கத்திரி வெயிலின் தாக்கத்தால் சித்திரையில் தள்ளிப்போட்ட நற்காரியங்களை  வைகாசியில் செய்யக் காத்திருப் போம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் திருமண மண்டபங்களும் வைகாசி மாதத்து முகூர்த்த நாட்களில் ஹவுஸ்ஃபுல்லாக  இருக்கக் காணலாம். 

    குறை சொல்வதையே தங்கள் குணமாகக் கொண்டவர்கள்கூட வைகாசியை சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மாதம் என முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள்.  அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது இந்த மாதத்தில்..? வைகாசி விசாகம் என்ற ஒரு விழா மட்டுமே இந்த மாதத்தின் பெயரோடு இணைத்துச் சொல்லப்படுகிற  ஒரு நிகழ்வு. அதுவும் நம் இல்லங்களில் கொண்டாடப்படும் பண்டிகை இல்லை. முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் அவதரித்த திருநாள் என்பதால்  அறுபடை வீடு உள்பட ஆறுமுகனின் அனைத்து ஆலயங்களிலும் திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது.

    வைணவப் பெரியவர் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரியில் உதித்ததும் இந்த விசாக நன்னாளில்தான். மகா பெரியவா என்று அழைக்கப்படும் காஞ்சி  சங்கராச்சாரியார் அவத ரித்தது வைகாசி மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திர நாளில். வைகாசி மாதத்து பௌர்ணமி, புத்தர் அவதரித்த நாள் என்பதால் புத்த  பூர்ணிமா என்று கொண்டாடப்படுகிறது. இவ்வாறு நமக்கு வாழ்க்கைக் கல்வியை போதித்த ஞானியர் பலரும் அவதரித்த மாதம் வைகாசி. அதனால்தானோ  என்னவோ கோடை விடுமுறைக்குப் பின் மாணவர்கள் தங்களது அடுத்த வகுப்பில் அடியெடுத்து வைக்கும் காலமாக வைகாசி அமைந்துள்ளது.
    ஜோதிட ரீதியாக வைகாசியின் நிலையை சற்று ஆராய்வோம். சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் காலமே வைகாசி மாதம். சூரியனின் சொந்த வீடு சிம்ம  ராசி. பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய ரிஷபத்தில் அதாவது, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்  காலமே வைகாசி மாதம். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை  அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது.

    சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மாதம் இந்த வைகாசி மாதம் என்றும் பொருள் கொள்ளலாம். அதனால்தான் வைகாசி மாதத்தில்  பிறந்தவர்கள் தங்கள் இறுதி மூச்சு வரை கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். தமிழ் மாதங்களில் ஸ்திர மாதங்கள் எனக் குறிப்பிடப்படுபவை நான்கு.  இவற்றில் முதலில் வருவது வைகாசி. (ஆவணி, கார்த்திகை, மாசி ஆகியவை மற்ற மூன்றும் ஆகும்.) அதாவது சூரியன், ஸ்திர ராசிகள் என்றழைக்கப்படும்  ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்ப ராசிகளில் அமர்ந்திருக்கும் மாதங்கள் இவை.

    இந்த காலத்தில் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அது ஸ்திரத்தன்மையைப் பெற்றிருக்கும். அதாவது, காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பார்கள் ஜோதிடப்  பெரியோர்கள். அதனால்தான் புதிதாகத் தொழில் தொடங்கு வதற்கும், புதிய வீடு கிரஹப்ர வேசம் செய்வதற்கும், திருமண பந்தத்தில் அடியெடுத்து  வைப்பதற்கும் இந்த மாதங் களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்கள். ஆவணி, கார்த்திகை, மாசி, வைகாசி என்பதை ‘ஆகாமாவை’ என்று சுருக்கமாகக்  குறிப்பிடுவர். இவற்றில் மற்ற மூன்று மாதங்களுக்கு இல்லாத சிறப்பு வைகாசிக்கு உண்டு.

    வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பார் என்று முன்பே கண்டோம். ரிஷபம் என்பது சுக்கிரனின் சொந்த வீடு ஆகும். வாழ்க்கைக்குத்  தேவையான செல்வம், வசதி வாய்ப்பு, சந்தோஷம், சுகம் ஆகிய அனைத்தையும் தருபவர் சுக்கிரன். சுருங்கச் சொன்னால் சுகபோகத்தைத் தரும் சுக்கிரனின்  வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது என்பதால் இந்த மாதத்தில் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்துவதில் ஆர்வம் செலுத்தினர் நம் முன்னோர்கள்.

    காரணம் புரியாவிட்டாலும் கூட அவர்களது வழியிலேயே நாமும் எந்தவித குறையும் சொல்லாமல் வைகாசி மாதத்தில் நம் வீட்டு விசேஷங்கள் நடத்துவதை  வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். தானத்தில் சிறந்தது அன்னதானம். வைகாசி மாதத்தில் அன்னதானம் செய்தால் பலன் பலமடங்காகக் கிடைக்கும் என்பது ஆன்மிகப் பெரியோர்கள் வாக்கு.  அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமி அவர்கள் வடலூரில், தான் அமைத்த சத்திய ஞான சபையில் அணையா அடுப்பினை ஏற்றி வைத்து  அன்னதானத்தைத் துவக்கியது வைகாசி மாதத்தில். அந்த அடுப்பு இன்று வரை அணையாமல் அன்னதானத்தினைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறது என்பது  நாம் அறிந்ததே. இவ்வாறாக வாழ்க்கைக் கல்வியையும், உழைப்பினால் உயர்வையும், வாழ்வினில் வசதி வாய்ப்பினையும் வழங்கும் வைகாசி மாதத்தை  வரவேற்போம். ஓய்வின்றி உண்மையாக உழைப்போம்... வளர்ச்சி அடைவோம்..!

    திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: சாமானியனையும் சாதிக்க வைக்கும் வைகாசி மாத பலன் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top