7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்றுடன் ‘லீக்’ ஆட்டம் முடிகிறது. இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கெவின் பீட்டர்சனும், அகர்வாலும் களமிறங்கினர். அதிரடியுடன் ஆட்டத்தை தொடங்கிய பீட்டர்சனுக்கு, அகர்வால் கைகொடுக்காமல் 2 ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அவரையடுத்து தினேஷ் கார்த்திக் பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நீடித்து நிலைக்கவில்லை. 13 ரன்களில் தினேஷ் கார்த்திக் வெளியேற, அடுத்து களமிறங்கிய ஜாதவ் ரன் ஏதும் எடுக்காமலும், மனோஜ் திவாரி 8 ரன்களுடனும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் டெல்லி அணி 9 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் கேப்டன் கெவின் பீட்டர்சன் நிலைத்து நின்று ஆடி அரை சதத்தை கடந்தார். அடுத்து பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்த டுமினி 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து நிசம் 12 ரன்களுக்கும், பொறுமையாக விளையாடிய பீட்டர்சன் 58 ரன்களிலும் வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களிலேயே வெளியேறினார். இதனால், 18.1 ஓவர்களிலேயே டெல்லி அணி 115 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. பஞ்சாப் அணி தரப்பில் அவானா, அக்ஷார் படேல், மிட்செல் ஜான்சன், கரன்வீர் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ரிஷி தவான் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியில் ஷேவாக் மற்றும் வோரா களமிறங்கினர். ஷேவாக் 9 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.
பின்னர் 3 விக்கெட்டுக்கு வோராவுடன் ஜோடி சேர மில்லர் களமிறங்கினார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். வோரா 47 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன் பின்னர் பெய்லி களமிறங்கினார். ஆட்டத்தின் 13.5 வது ஓவரில் மில்லர் சிக்ஸ் அடித்து பஞ்சாப் அணியை வெற்றி பெற செய்தார். மில்லர் 34 பந்தில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் பஞ்சாப் அணி 13.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 119 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வீழ்த்தியது.