செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா 8 வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசுக்கு
240 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியா ஆலையில் 2009-10, 2010-2011, 2011- 2012 ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்குப் பதிலாக உள்ளூர்ச் சந்தையில் விற்கப்பட்டதாகவும், அதனால், அதற்கான விற்பனை வரியாக 2400 கோடி ரூபாயை தமிழக அரசுக்குச் செலுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்ச் 28ஆம் தேதி ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்த நோக்கியா நிறுவனம், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமில்லாதவை என்றும், ஏற்றுமதி நடந்திருப்பதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தன்னுடைய மனுவில் கூறியிருந்தது. இந்த காலகட்டத்தில் 3,904 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அன்னியச்செலவாணி ஈட்டப்பட்டிருப்பதாகவும் இதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் நோக்கியா நிறுவனத்தின் தரப்பைக் கேட்காமலேயே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது. மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின்படி முன்னெச்சரிக்கை நோட்டீஸ் எதையும் அனுப்ப வேண்டியதில்லை என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
இதில் ஒரு பகுதித் தொகையை நோக்கியா நிறுவனத்தால் செலுத்த முடியுமா என நீதிபதி பி. ராஜேந்திரன் கேட்டபோது, நோக்கியா நிறுவனம், தங்களால் முடியாது எனத் தெரிவித்தது. இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு கோரியிருக்கும் 2400 கோடி ரூபாயில் பத்து சதவீதமான 240 கோடி ரூபாயை 8 வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசுக்குச் செலுத்த வேண்டுமென நோக்கியா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்ரீபெரும்புதூரில் 210 ஏக்கர் பரப்பளவில் 300 மில்லியன் டாலர் முதலீட்டில் செல்போன் தயாரிப்பு ஆலையை நோக்கியா அமைத்துள்ளது. ஏழு ஆண்டுகளில் 500 மில்லியன் செல்போன்களை உற்பத்தி செய்திருக்கும் இந்த ஆலை, நோக்கியாவின் மிகப் பெரிய ஆலைகளில் ஒன்று.