அதிபர் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை, வடக்கிற்கு சுதந்திரமாக சென்று வருவதற்கு அனுமதிக்க முடியாது என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அனைத்துலக கண்காணிப்பாளர்கள், வடக்கிற்குச் செல்ல வேண்டுமானால், தேர்தல் ஆணையாளரின் பரிந்துரையுடன், இலங்கை பாதுகாப்பு அமைச்சிடம் சிறப்பு அனுமதியை பெற வேண்டும் என்று இலங்கை இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
“ வடக்கிற்கான பயணக் கட்டுப்பாடுகளை நாம் நீக்கவில்லை.பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி, வடக்கிற்கு வெளிநாட்டவர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.இதுகுறித்து, இலங்கை தேர்தல் ஆணையாளரிடம் இருந்து எந்த எந்த அதிகாரபூர்வ கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறுவதற்கு, தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் பற்றிய விபரங்களை, அவர்களின் கடவுச்சீட்டு விபரங்களுடன் இணைத்து, பாதுகாப்பு அமைச்சிடம், தேர்தல் ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.தேர்தல் ஆணையாளரின் பரிந்துரை இல்லையென்றால், அவர்களின் நோக்கம் எமக்குத் தெரியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, பவ்ரல் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் ஆகியவற்றினால், ஆசிய நாடுகளைச் சேர்ந்த 100 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறிலங்கா தேர்தல் ஆணையாளரால், 60 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் நாட்டின் எந்தப் பாகத்துக்கும் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.