இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்,“வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினை குறித்தும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.
தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் தீர்க்கத் தவறிய, வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் எதிர்நோக்கும், முக்கியமான பல பிரச்சினைகள் குறித்து, ஆக்கபூர்வமான விடயங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்த்தோம்.தமிழர்களின் எரியும் பிரச்சினைகளுக்கு இது எந்த தீர்வையும் வழங்குவதாக இல்லை.
மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய உடன்பாடு ஒன்றை செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குற்றம்சாட்டி வருகிறது.தமிழர்களுக்கான எந்த விடயத்தையும், தேர்தல் அறிக்கை கொண்டிருக்காததில் இருந்து, இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது நிரூபணமாகியிருக்கிறது.
காணி சுவீகரிப்பு பிரச்சினை, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு, காணாமற்போனோர் குறித்த விவகாரம், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்துக் கூட தேர்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அர்த்தமுள்ள எந்த விடயங்களும் இதில் இடம்பெறாதது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலையடைகிறது.பெரும்பாலும் இந்தவாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவில் இருந்து நாடு திரும்புவார்.அதன் பின்னர், கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியிடப்படும்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.