கொழும்பின் குறைந்த வருமானத்தை பெறும் மக்களிடம் செல்லும் படைத் தரப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பயமுறுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த மக்களிடம் செல்லும் படையினர் மஹிந்த ராஜபக்சவை தவிர்ந்த ஏனையோருக்கு வாக்களிப்பவர்கள் தொடர்பில் கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்று அச்சுறுத்துவதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களை பயமுறுத்தும் படையினர் மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்காது போனால் சொந்த குடியிருப்புக்களில் இருந்து அகற்றப்படுவார்கள் என்று எச்சரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த எச்சரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.தமக்கு வாக்களிக்காதவர்கள், வேறு இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தாம் தந்தையிடம் கூறியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டதாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
மஹிந்தவுக்கு வாக்களிக்குமாறு போக்குவரத்து சபையில் பலாத்காரம் இலங்கை போக்குவரத்து சபையினர், தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குகளை மஹிந்த ராஜபக்சவுக்கு அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜே வி பி தொழிற்சங்கம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத்தின் இலங்கை போக்குவரத்து தலைமையே இந்த கட்டளையை பிறப்பித்துள்ளதாக ஜே வி பி குறிப்பிட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பணியாளர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போக்குவரத்து சபை தொழிற்சங்க தலைவர் நிமால் அபேசிறியின் ஊடாகவே சமர்ப்பிக்க முடியும் என்றும் கோரப்பட்டதாக ஜே வி பி சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் தாம் மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று ஜே வி பி தொழிற்சங்க தலைவர் லியனகே தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் போக்குவரத்து சபையின் பணியாளர்கள் மஹிந்தவை வெற்றிபெறச் செய்வோம் என்று எழுதப்பட்ட டீ சேர்ட்டை அணிந்து வருமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.