துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இன்று நடத்தும் போராட்டத்தில் பெப்சி அமைப்பும் இணைந்தது.
இன்று காலை பத்து மணிக்கு இலங்கை தூதரகத்தின் முன்பாக நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலகின் அனைத்து சங்கங்களுமே பங்கேற்கின்றன. இதனை ஒவ்வொரு சங்கமும் உறுதிப்படுத்தியுள்ளன.
பெப்சி அமைப்பின் தலைவர் இயக்குநர் அமீர் மற்றும் செயலர் ஜி சிவா ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில், இந்த போராட்டத்தில் பெப்சி அமைப்பும் கலந்து கொள்கிறது என்று தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் நடிகைகள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட அவர்கள் முண்டியடித்தனர். போலீசார் தடுத்தனர். லயோலா கல்லூரி எதிரில் போடப்பட்ட சேமியானா பந்தலில் இலங்கைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
நடிகர்கள் சிவகுமார், விஜய், சூர்யா, சீமான், சிவா, ரித்தீஷ், வையாபுரி, குண்டு கல்யாணம், தாமு, பட்டாபி, அனுமோகன், நடிகை குயிலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இப்ராகிம் ராவுத்தர், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் டி.வி. நடிகர் நடிகைகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். டிஜிட்டல் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் தலைமையில் தயாரிப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.
திரளாகப் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளைப் புறக்கணிப்பதோடு, நமது மாண்புமிகு முதல்வரையும் அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் இலங்கையின் ஒட்டு வாலாக விளங்கும் இலங்கை துணைத் தூதரகம் தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கோஷங்களுடன், இலங்கை தூதரகம் முன்பு திரையுலகினர் குவிந்து வருகின்றனர்.
போராட்டம் நடக்கும் இடத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
“தாயைப் பழித்தவனை தரணியை ஆண்டாலும் விடமாட்டோம்”,
“உலகம் போற்றும் தமிழர் தாயை பழிக்க நினைக்காதே நீ கொச்சைப்படுத்த நினைத்தது தமிழக முதல்வரை அல்ல 10 கோடி தமிழர்களின் தாயை”,
“தேசப் பிதா என்றால் காந்தி பெரியார் என்றால் ஈவெரா அம்மா என்றால் எங்க முதல்வர்தான்”
போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவதூறு கட்டுரை விவகாரம்: மக்களவையிலும் எதிரொலி
இலங்கை அரசு இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான கட்டுரை வெளியிடப்பட்ட விவகாரம் இன்று மக்களவையிலும் எதிரொலித்தது. மக்களவை அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, அவையில் இந்த விவகாரத்தை எழுப்பி உரையாற்றினார்.